Monday, October 29, 2018

திருக்குரக்காவல் - குந்தளநாதர் கோவில்

தேவார பாடல் :
 மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர்
சரக்குக் காவித் திரிந்தய ராதுகால்
பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக்
குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே

மரத்தின்கண் இருக்கும் கொக்கைப்போல வாய்விட்டுக்கூவி, தீயகுணங்களாகிய பொருள்களையே சுமந்து திரிந்து வருந்தாமல், கால்வாய்கள் வழியாகப் பரந்து பாயும் காவிரி நீர் அலைக்கின்ற கரையில் உள்ளதாகிய குரக்குக்காவை அடைய, குற்றங்கள் கெடும் என திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற திருத்தலம்.

ஊர்: திருக்குரக்காவல் (பழைய பெயர் திருக்குரக்குக்கா), வடவாஞ்சார், வைத்தீஸ்வரன் கோயில் அருகில்

மூலவர்: குந்தளேசுவரர்,குண்டலகர்னேஸ்வரர்

அம்பாள்: குந்தளநாயகி,குந்தளாம்பிகை

தீர்த்தம்: பழவாறு (கணபதி நதி)

தரிசனம் பெற்றவர்கள்: ஆஞ்சநேயர்

ஸ்தல வரலாறு : இக்கோவிலை ஆஞ்சனேயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம் கூறுகிறது. இராமேஸ்வரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த மணல் லிங்கத்தை தன் வாலினால் கட்டி அகற்ற முறபட்ட போது அனுமனின் வால் அறுந்து போயிற்று. சிவஅபராதம் நீங்க இராமர் அறிவுரைப்படி ஆஞ்சனேயர் இத்தலத்திற்கு வந்து ஒரு லிங்கத்தை நிறுவி இறைவனை பூஜித்தார். இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தி இந்த அனுமனே. ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுகிறது. இது ஊர் மக்கள் இன்றளவும் பார்க்கும் உண்மை சம்பவமாகும்.

ஆலய சிறப்புகள்: பஞ்ச(கா) தலங்களில் திருக்குரக்குக்கா தலமும் ஒன்று. மற்ற தலங்கள் திருவானைக்கா, திருகோடிக்கா, திருநெல்லிக்கா, திருகோலக்கா. ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது.

தரிசன பயன்கள்: சூரியன் மற்றும் சனியினால் வரும் தோஷம் உடையவர்கள் இந்த இறைவனையும் அனுமனையும் வழிபட்டால் தோஷம் நீங்கும்.

எப்படி செல்வது : வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் "இளந்தோப்பு" என்ற ஊரை அடைந்து, ஊரிலுள்ள மருத்துவமனைக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் திருக்குரக்காவல் சாலையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

எங்கே தங்குவது: வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி

தரிசன நேரம் :6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


Friday, October 26, 2018

அரகண்டநல்லூர் - அதுல்யநாதேஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் தீது இலா 
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார், இளவெண்மதி 
சூடினார், மறை பாடினார், சுடலை நீறு அணிந்தார், அழல் 
ஆடினார், அறையணி நல்லூர் அம் கையால்                                தொழுவார்களே

அழிவற்றவரும், இளவெண்பிறையைச் சூடியவரும்,
வேதங்களை அருளியவரும், சுடலைப்பொடி பூசியவரும், அழலின்
கண் நின்று ஆடுபவரும் ஆகிய அறையணிநல்லூர் இறைவரைத் தம் அம் கையால் தொழுபவர் பீடினால் பெரியோர் ஆவர். பாசங்கள்
கெடப் பற்றற்றவராய் உயர்ந்தவர்கள் ஆவர் என திருஞானசம்பரால் பாடப்பெற்றது. - இரண்டாம் திருமுறை.

ஊர்: அரகண்டநல்லூர், (பழைய பெயர் திரு அறையணிநல்லூர் ),  திருக்கோயிலூர் அருகில்.

மூலவர்: அதுல்யநாதேஸ்வரர்

அம்பாள்: அழகிய பொன்னழகி

ஸ்தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: தென்பெண்ணை

தரிசனம் பெற்றவர்கள்: 

ஸ்தல வரலாறு : பஞ்ச பாண்டவர் வனவாசத்தின் போது இங்கு தங்கி இருந்ததாகக் கூறுவர். இப்போது உள்ளே ஏதுமில்லை. வனவாசம் முடிந்து, 18 நாட்கள் போருக்குப் பின் நாட்டைத் திரும்பப் பெற்ற பாண்டவர்கள், பட்டாபிஷேகம் முடிந்ததும் குடும்பத்தினரோடு மீண்டும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றனராம். கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில் உள்ளது பீமன் குளம். பாஞ்சாலி நீராடுவதற்காக இக்குளத்தை பீமன் வெட்டியதாக புரணாச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.. ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக் கோயில்களாக ஐந்து அறைகள் உள்ளன.

ஆலய சிறப்புகள்: இந்த கோயில் குன்றின் மீது உள்ளதால் திருவண்ணாமலை கோயில் கோபுரத்தை இங்கிருந்து தரிசனம் செய்யலாம். திருஞானசம்பந்தர் அவ்வாறு இங்கிருந்து தரிசித்து ஒரு பதிகம் பாடியுள்ளார். ஸ்வாமிகளின் பாதம் கோயில் வெளி பிரகாரத்தில் காணலாம்.

தரிசன பயன்கள்: பாண்டவர்கள் இவ்விறைவனை வழிபட்டுச் சென்று இழந்த நாட்டை மீண்டும் பெற்றதுபோல, பதவி இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் இறைவன் அருளால் மீண்டும் அவற்றைப் பெறலாம்.

எப்படி செல்வது : திருக்கோவிலூரில் இருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்திற்கு வர நகரப் பேருந்து வசதி உண்டு. விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வர பேருந்து வசதிகள் இருக்கின்றன.

எங்கே தங்குவது: திருக்கோயிலூர், திருவண்ணாமலை 

தரிசன நேரம் :7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



திருநாவலூர் - திருநாவலேஸ்வரர்

தேவார பாடல் :
கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய, 
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர், ஓர் அம்பினால்; 
ஏவலனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட 
நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே.

ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும், அதனால், ‘அம்பு எய்தலில் வல்லவர்’ எனப் புகழத்தக்கவராயினாரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு, ‘திருமால், பிரமன், இந்திரன்’ என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும் என சுந்தரரால் பாடப்பெற்றது  - ஐந்தாம் திருமுறை.

ஊர்: திருநாவலூர்  

மூலவர்: பக்தஜனேசுவரர், திருநாவலேசுவரர்

அம்பாள்: மனோன்மணியம்மை, சுந்தராம்பிகை, சுந்தரநாயகி

ஸ்தல விருட்சம்: நாவல்

தீர்த்தம்: கோமுகி தீர்த்தம்

வழிபாடு செய்தவர்கள் : மஹாவிஷ்ணு, சுக்ரன், பார்வதி, சண்டிகேஸ்வரர்

ஸ்தல வரலாறு : இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார். நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர். இத்தலத்தில் மகாவிஷ்ணு தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆலய பிரகாரத்தின்.வடக்குச் சுற்றில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.

ஆலய சிறப்புகள்: திருநாவலூர் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அவதாரம் செய்த ஊராகும். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.சுக்ர தோஷ பரிகார ஸ்தலம்.

தரிசன பயன்கள்:  சுக்ர  தோஷம்  நீங்கும் .

எப்படி செல்வது : சென்னை - திருச்சி தேசீய நெடுஞ்சாலையில் விழுப்புரம் தாண்டி செல்லும் போது மடப்பட்டு என்ற ஊர் வரும் அதைத் தாண்டி பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே பிரிந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 2 கி.மீ சென்றால் ஊரையடையலாம். சாலையோரத்தில் ஊரின் முதலிலேயே கோயில் உள்ளது.

எங்கே தங்குவது: விழுப்புரம்

தரிசன நேரம் :காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.