Thursday, January 31, 2019

விருத்தாசலம் - பழமலைநாதர் கோயில்/காசிக்கு இணையான ஸ்தலம்

தேவார பாடல் :
திருஞானசம்பந்தர் 7 பதிகங்களும், சுந்தரர் 3 பதிகங்களும் மற்றும் அப்பர் 1 பதிகமும் பாட பெற்ற அற்புத தலம்.

மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட
தொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம்
கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டு
முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே.

மந்தர மலையை மத்தாக நட்டுக் கடலைக் கடைந்தபோது, கொடிது எனக் கூறப்பெறும் ஆலகால விடம் தோன்ற, அதனை உண்டவனும், பூங்கொத்துக்கள் சூடிய அழகிய நீண்ட சடை முடியினனும், எரி சுடர் வண்ணனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய இடம்; மலர்க் கொத்துக்கள் குளிர்ந்த சந்தனம் அகில் ஒளிதரும் குங்கும மரம் ஆகியவற்றை அலைக்கரங்களால் ஏந்திக் கொண்டு வந்து மணிமுத்தாறு அடிவீழ்ந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம் என திருஞானசம்பந்தர் பாடல் இறைவன் புகழ் பாடுகிறது.

ஊர்: விருத்தாசலம், கடலூர் மாவட்டம். தேவார பெயர் திருமுதுகுன்றம்.

மூலவர்: பழமலைநாதர், விருத்தாசலேசர்

அம்பாள்: பெரியநாயகி, விருத்தாம்பிகை, பாலாம்பிகை

ஸ்தல விருட்சம்: வன்னி மரம்

தீர்த்தம்: மணிமுத்தா நதி, அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம்

வழிபட்டோர்கள் : உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்தினி.

ஸ்தல வரலாறு : ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி, சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசிவிட்டு, திருவாரூரில் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருள் செய்தார்.

இத்தலத்தின் தல விருட்சமான வன்னிமரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆதி காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக கொடுத்தார் என்றும் அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறியது என்று தலபுராணம் கூறுகிறது.

'விருத்த' என்றால் முதுமை என்றும் 'அசலம் ' என்றால் மலை என்றும் பொருள்படும். எனவே விருத்தாசலம் என்றால் பழமலை என்று கருத்தாகிறது.

ஆலய சிறப்புகள்: 

1. எல்லாம் ஐந்து - ஐந்து கோபுரம் , ஐந்து வெளிமண்டபம், ஐந்து உள்மண்டபம், ஐந்து - கொடிமரம், ஐந்து - நந்தி, ஐந்து - பிரகாரம், ஐந்து விநாயகர், ஐந்து மூர்த்தங்கள், ஐந்து வழிபாடு, ஐந்து தேர், ஐந்து பெயர் கொண்டது, ஐந்து முனிவர்கள் வழிபட்டது.

2. ஆகமக் கோவில்: சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

3. காசிக்கும் மேலான ஸ்தலம் -  இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும். காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடமே புண்ணிய மடு எனப்படுவதாகும்.  இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும், பிணிகள் யாவும் அகன்று சித்தி அடைவர் என்பது ஐதீகம்.

4. விநாயகர் படை வீடு - முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பதுபோல் விநாயகருக்கும் அறுபடை வீடுள்ளது. அதில் இந்த தலம் இரண்டாவது. ராஜகோபுரத்தையடுத்து இடப்பக்கமுள்ள ஆழத்து விநாயகர் சன்னதி காணலாம். மேலும் இத்தலத்து முருகனை அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். ஊழி காலத்தில் உலகம் அழிந்தபோதும் இந்த கோயில் அழியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

5. சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 1008 சிறப்பான சிவன் கோயில்களில் 4 கோயில்கள் முக்கியமானவை - அதில் ஒன்று இந்த தலம்.

6. சக்கரங்கள் அமைந்த முருகப்பெருமான் - முருகப்பெருமான் உடனுறை வள்ளி தெய்வானை மேல் சக்கரங்கள் அமைந்துள்ளது சிறப்பு.

தரிசன பயன்கள்: வழிபட்டால் இம்மை பயன்களும், மறுமை பயன்களும் மன நிம்மதியும் அளிக்கும் அற்புத திருத்தலம். இங்குள்ள துர்கை அம்மனை வழிபட்டால் கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் ஐஸ்வரியம் கைகூடும்.

எப்படி செல்வது : விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. விருத்தாசலம் சென்னையில் இருந்து 215 கி.மி. தொலைவில் உள்ளது.

எங்கே தங்குவது: விருத்தாசலம் 

தரிசன நேரம் :.6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.






Monday, January 28, 2019

திருநாவலூர் - திருநாவலேஸ்வரர் கோயில் /சுந்தரர் அவதார ஸ்தலம்

தேவார பாடல் :
கோவலன் நான்முகன் வானவர்
கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு
வித்தவர் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும், அதனால், ‘அம்பு எய்தலில் வல்லவர்’ எனப் புகழத்தக்கவராயினாரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு, ‘திருமால், பிரமன், இந்திரன்’ என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரே யாகும் என சுந்தரரால் பாடப்பெற்றது.

ஊர்: திருநாவலூர், விழுப்புரம் மாவட்டம் . திருநாமநல்லூர்  என்றும் வழங்கப்படுகிறது

மூலவர்: திருநாவலூர் - திருநாவலேஸ்வரர்

அம்பாள்: திருநாவலேஸ்வரர், பக்த ஜனேஸ்வரர்

ஸ்தல விருட்சம்:நாவல்

தீர்த்தம்: கெடில நதி, கோமுகி தீர்த்தம்

வழிபட்டோர்கள் : மஹாவிஷ்ணு, சுக்கிரன் 

ஸ்தல வரலாறு : மஹாவிஷ்ணு பிரகலாதன் தந்தையான இரணியனை வதம் செய்ய திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார். நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர்.

ஆலய சிறப்புகள்: மகாவிஷ்ணு தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆலய பிரகாரத்தின்.வடக்குச் சுற்றில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

சுந்தரர் அவதாரத் திருத்தலம்.சுந்தரரின் தந்தையாரான சடைய நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய பெரும்பதி.சுந்தரரின் தாயாரான இசைஞானியார் வாழ்ந்து,தொண்டாற்றி, முத்தி பெற்றத் தலமுமாகும்.இங்குள்ள உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படுகிறது; இது முதற்பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தனால் கட்டுவிக்கப் பெற்றது என்பது கல்வெட்டுச் செய்தி.

தரிசன பயன்கள்: கேது தோஷ பரிகார ஸ்தலம்

எப்படி செல்வது : சென்னை - திருச்சி தேசீய நெடுஞ்சாலையில் விழுப்புரம் தாண்டி செல்லும் போது மடப்பட்டு என்ற ஊர் வரும் அதைத் தாண்டி பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே பிரிந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் உள்ளது. விழுப்புரத்திலிருந்து 26 கிமீ.

எங்கே தங்குவது: விழுப்புரம் 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரை




Friday, January 25, 2019

ஓணகாந்தன்தளி-ஓணகாந்தேஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்; 
கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்; 
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு, 
உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே! 

திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, 'நெய், பால், தயிர் முதலியவற்றால் உம்மை நாள்தோறும் வழிபடுவாரது கையில்காசு ஒன்றும் காணப்படுகின்றதில்லை. அவ்வாறே, உமது கழலணிந்த பாதத்தைக் கும்பிட்டு ஏதேனும் பெற்றாலன்றி, இவ்வுலகத்தில், புலன்களாகிய ஐவர் தண்டலாளர் ஐந்து பக்கம் பற்றி ஈர்த்துச் சுழற்றச் சுழன்று, அச்சுழற்சியாலாகிய துன்பம் என்னும் ஆழ்ந்த குழியில் அகப்பட்டு ஏறமாட்டாது என சுந்தரரால் பாட பெற்றது. சுந்தரர் பொருள் வேண்டி இறைவனை சற்றே வஞ்ச புகழிச்சியோடு பதிகம் பாடியுள்ளார்.

ஊர்: ஓணகாந்தன்தளி,காஞ்சிபுரம் - பஞ்சுப்பேட்டை

மூலவர்: ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், சலேந்தரேஸ்வரர்

அம்பாள்: காமாட்சி அம்மன்

ஸ்தல விருட்சம்: வன்னி, புளியமரம்

தீர்த்தம்: ஓணகாந்த தீர்த்தம், தான் தோன்றி தீர்த்தம்

வழிபட்டோர்கள் :  
ஓணன், காந்தன்,சலந்தரன்

ஸ்தல வரலாறு : 
ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற காரணத்தால் இத்தலம் ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது. ஓணன், காந்தன் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன. முதல் சந்நிதியில் ஓணேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அடுத்து 2-வது சந்நிதியில் காந்தேஸ்வரர் தரிசனம் தருகிறார். 3-வது கருவறையில் சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே சிறு கோவிலாக உள்ளது

ஆலய சிறப்புகள்: 
ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்பு மிக்க ஆலயம் இதுவாகும். இது தவிர மற்றொரு விநாகயரான ஓங்கார கணபதியும் காந்தேஸ்வரர் சந்நிதியில் வெளியே காணப்படுகிறார். இவரின் சிலையில் பக்தியுடன் காது வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாக சொல்லப்படுகிறது. இங்கு சுந்தரர் பதிகம் பாடி இறைவனிடமிருந்து புளியங்காய்களை பொன்காய்களாகப் பெற்றார் என்பது ஐதிகம்.

தரிசன பயன்கள்: பொன், பொருள் வேண்டுவோர் இறைவனை வழிபட்டு இக்கோயில் பதிகத்தை பாட கேட்டது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

எப்படி செல்வது : 
ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு எதிரில் கோவில் உள்ளது. சாலையோரத்திலேயே கோவிலும் மின் நிலையமும் அமைந்துள்ளது.

எங்கே தங்குவது: காஞ்சிபுரம் 

தரிசன நேரம் :. காலை 7:30 முதல் 10:30 மணி வரை , மாலை 5:30 முதல் 7:30 வரை 

Tuesday, January 22, 2019

திருவக்கரை-சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்/வக்ரகாளியம்மன் திருக்கோவில்

தேவார பாடல் :கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான்,
பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண் 
                                                  அமர்ந்தான்,
மறையவன் தன் தலையில் பலி கொள்பவன்-வக்கரையில்
உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே.

இறைவன் நஞ்சுண்ட கறுத்த கண்டத்தை உடையவன். சுடுகாட்டில் திருநடனம் செய்பவன். பிறைச் சந்திரனையும், கொன்றைமாலையையும் அணிந்தவன். உமாதேவியைத்
தன்திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். பிரமன் தலையைக் கொய்து அதன் ஓட்டில் பிச்சை ஏற்பவன். திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவனான
சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த திருவடிகளைத்
தியானிப்பீர்களாக என திருஞானசம்பந்தரால் மூன்றாம் திருமுறையில் பாடல் பெற்றுள்ளது.

ஊர்: திருவக்கரை, விழுப்புரம் மாவட்டம்

மூலவர்: சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர்

அம்பாள்: அமிர்தேசுவரி, வடிவாம்பிகை

ஸ்தல விருட்சம்:வில்வம்

தீர்த்தம்: சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்

வழிபட்டோர்கள் : வக்கிராசுரன், அவன் பூசித்த வக்கிர லிங்கம் சன்னதியில் உள்ளது.

ஸ்தல வரலாறு : வக்கிராசுரனை இத்தலத்தில் மகாவிஷ்ணு போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. கீழே சிந்திய இரத்தத்தில் இருந்து மீண்டும் அசுரர்கள் தோன்றினார்கள். அவ்வாறு அசிரர்கள் மீண்டும் தோன்றாதபடி அக்குருதியைக் காளி தன் வாயால் உறிஞ்சினாள். வக்கிராசுரன் தங்கை துன்முகி போரிட வந்தபோது அவளை அஷ்டபுஜகாளி அழித்தாள். துன்முகி அழிந்த போது அவள் கருவுற்று இருந்ததால், அவள் வயிற்றிலுள்ள குழந்தையை காளி தன் காதில் குண்டலமாக அணிந்து கொண்டாள்.

ஆலய சிறப்புகள்: லிங்கம் முகமாக அமைந்த அற்புத திருத்தலம். சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட லிங்கம் மும்முக லிங்கம் எனப்படும் . இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் என்று சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்று கூறுவர்.

இந்த ஆலயத்தின் முகப்பில் உள்ள அஷ்டபுஜகாளி சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது. சிவன் கோயில் என்பதை விட காளி கோயில் என்றே புகழ் பெற்றுள்ளது.

வக்கிராசுரனை அழித்த திருமால் வரதராஜப் பெருமாளாக கையில் பிரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் காட்சி அளிக்கிறார். வக்கிரதாண்டவம் என கூறப்படும் நிலையாக நடராஜ பெருமான் கால் மாற்றி காட்சி தருகிறார்.

இங்குள்ள மரங்கள் கல்லாக மாறிய தொன்மையுடையவை.

தரிசன பயன்கள்: தீவினைகள் அகல, குழந்தைப் பேறு பெற, நல்ல மணவாழ்க்கை அமைய, மங்கலங்கள் பெருக, மக்கள் நம்பிக்கையுடன், வக்ரகாளியை பௌர்ணமியன்று தரிசிக்க வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

எப்படி செல்வது : திண்டிவனத்திலிருந்து மயிலம், வானூர் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் சென்று பெரும்பாக்கம் என்ற் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் கிளைப் பாதையில் 7 கி.மீ. சென்றால் திருவக்கரையை அடையலாம். திண்டிவனத்திலிருந்து சுமார் 28 கி.மி. தொலைவில் உள்ளது. விழுப்புரத்திலிருந்தும் திருவக்கரை செல்லலாம். விழுப்புரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள திருவக்கரைக்கு நகரப்பேருந்து வசதி உள்ளது.

எங்கே தங்குவது: திண்டிவனம்,விழுப்புரம் 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தொடர்ந்து தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

Saturday, January 19, 2019

கிளியனூர்- அகஸ்தீஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
தார் சிறக்கும் அணி வள்ளலின் சிறக்கும் துணைப்பதம்
உண்ணுவோர் பேர் சிறக்கும் பெருமொழி உய்வகை ஏர் சிறக்கும்
கிளியன்ன வூரனே

என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்

ஊர்: கிளியனூர், விழுப்புரம் மாவட்டம், தேவார பெயர் திருகிளியன்னவூர்

மூலவர்: அகத்தீஸ்வரர்

அம்பாள்: அகிலாண்டேஸ்வரி

ஸ்தல விருட்சம்: வன்னி மரம்

தீர்த்தம்: கன்வ தீர்த்தம், அக்னி தீர்த்தம்

வழிபட்டோர்கள் : கன்வ மகரிஷி, சுகர் முனிவர்

ஸ்தல வரலாறு : கன்வ மகரிஷி தனது இரு பெண் குழந்தைகளுக்கு தீராத கொடிய நோய் இந்த ஸ்தலம் வந்து வழிபட்டதால் நிவர்த்தி பெற்றனர். சுக பிரம்மரிஷி இந்த ஸ்தலத்தில் வழிபாட்டு தனது வயிற்று வலி நீங்கப்பெற்றார்.

ஆலய சிறப்புகள்: சுயம்பு மூர்த்தி, சிவபெருமான் மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள ஆலயம். அகத்தியரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம்.

தரிசன பயன்கள்: வயிற்று வலி நிவாரணம் தரும் கோயில், இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வயிறு சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகும். திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் மற்றும் செல்வ வளம் பெருகும்.

எப்படி செல்வது : பாண்டிச்சேரி - திண்டிவனம் நெடுஞசாலையில் கிளியனூர்  கைகாட்டி அருகில் இறங்கி கிழக்கே கிளியனுர்  செல்லும் சாலையில் 2.கி.மீ சென்றால் ஆலயத்தை அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 22 கி.மி. தொலைவில் கிளியனூர் கைகாட்டி கிளைப் பாதை பிரிகிறது.

எங்கே தங்குவது: புதுச்சேரி 

தரிசன நேரம் : காலை 6  மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.


Wednesday, January 16, 2019

ஒழிந்தியாம்பட்டு-அரசலீசுவரர் கோயில்

தேவார பாடல் :
பாடல் வண்டு அறை கொன்றை, பால்மதி, பாய் புனல் 
                                                         கங்கை, 
கோடல், கூவிள மாலை, மத்தமும், செஞ்சடைக் குலாவி,
வாடல் வெண் தலை மாலை மருவிட, வல்லியந் தோல்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

செஞ்சடையில், இசைபாடும் வண்டுகள் சென்று
சூழும் கொன்றை மலர், பால்போலும் பிறைமதி, பாய்ந்து வரும்
புனலை உடைய கங்கை, வெண் காந்தள், வில்வ மாலை, ஊமத்தம்
பூ ஆகியன குலவி விளங்க, கழுத்தில் தசை உலர்ந்த வெண்டலை
மாலை மருவ, இடையில் புலித் தோலை உடுத்தித் தோள்மேல்
பாம்பைச்சுற்றிக் கொண்டுள்ள அடிகளாகிய சிவபிரானுக்கு உகந்த
இடம் அரசிலியேயாகும் என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்

ஊர்: ஒழிந்தியாம்பட்டு, தேவார பெயர் திருஅரசிலி, விழுப்புரம் மாவட்டம்.

மூலவர்: அரசிலிநாதர் (அரசலீசுவரர்).

அம்பாள்: பெரியநாயகி

ஸ்தல விருட்சம்: அரசு

தீர்த்தம்: அரசரடித் தீர்த்தம் (வாமன தீர்த்தம்)

வழிபட்டோர்கள் : வாமதேவ முனிவர்

ஸ்தல வரலாறு : வாமதேவர் எனும் முனிவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெறுவதற்காக பல தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது ஒரு அரசமரத்திற்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து ஒய்வெடுத்தார்.இங்கு சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பினால் எப்படி இருக்கும் என மனதில் நினைத்து கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த சிவன், அரசமரத்திற்கு அடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். அரசமரத்தின் கீழ் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியதால் தலத்திற்கு அரசிலி என்றும், இறைவனுக்கு அரசலீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது.

வாமதேவ முனிவருக்குப் பின பல ஆண்டுகள் கழித்து இந்த லிங்கம் பூமியில் புதையுண்டு போயிற்று. சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவன் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு நந்தவனம் அமைத்து அருகிலுள்ள மற்றொறு சிவலிங்கத்திற்கு வழிபாடுகள் செய்து வந்தான். ஒரு சமயம், மன்னரின் பணியாட்கள் நந்தவனம் சென்று மலர்களை பறிப்பதற்கு முன்னமே யாரோ பறித்து சென்றுவிடுகின்றனர். தொடர்ந்து இது போல் நாட்கள் நடந்தன.

மலர்களை அதிகாலையில் யாரோ பறித்து சென்று விடுவதாக சந்தேகம் கொண்ட மன்னன், அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்திற்கு சென்று கண்காணித்தான். அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் ஒன்று மலர்களை உண்டதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக் கண்ட மன்னன் கோபத்துடன் மான் மீது அம்பு எய்தான். மான் தப்பிவிட, காவலர்கள் அதøø விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரசமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்து கொண்டது. மன்னன் மரத்திற்குள் அம்பு எய்தான். அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. மான் அம்பால் தைக்கப்பட்டிருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே பார்த்தபோது அங்கு மான் இல்லை. அதற்கு பதில் பல்லாண்டுகளுக்கு முன் மறைந்த வாமதேவர் வழிபட்ட லிங்கம் இருந்தது. லிங்க பாண்த்தில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த மன்னன் சிவனை வேண்டினான். சிவன் மன்னனுக்கு காட்சி தந்து, மான் வடிவில் அருள்புரிந்தது தான் என்று உணர்த்தியதோடு, மன்னனுக்கு புத்திர பாக்கியமும் கொடுத்து அருளினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான்.

வாமதேவ முனிவர் காலத்திற்கு பிறகு ஒழிந்து மீண்டும் சத்தியவிரதன் காலத்தில் சிவலிங்கம் அகப்பட்டது. ஒழிந்து அகப்பட்டது என்பதே காலப்போக்கில் ஒழிந்தியாம்பட்டு என மருவி இந்த ஊரின் பெயராக நிலைபெற்றது.

ஆலய சிறப்புகள்: சுயம்பு லிங்கமூர்த்தி. கருவறையில் இறைவன் அரசிலிநாதர் 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.

தரிசன பயன்கள்: பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்தலம் வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லா நலனையும் அடைவார்கள்.

எப்படி செல்வது : பாண்டிச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலையில்  ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி அருகில் கிழக்கே ஒழிந்தியாப்பட்டு செல்லும் சாலையில் 2.கி.மீ சென்றால் அரசிலி ஆலயத்தை அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 17 கி.மி. தொலைவில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி கிளைப் பாதை பிரிகிறது

எங்கே தங்குவது: புதுச்சேரி 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் 8-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை





Tuesday, January 15, 2019

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்/அஷ்ட வீரட்ட ஸ்தலம்

தேவார பாடல் :
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

கெடில ஆற்றின் வடகரையில்விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் டலாடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன் என திருநாவுக்கரசர் தன் முதல் பதிகத்தில் பாடியுள்ளார்.

ஊர்: திருவதிகை, பன்ருட்டி அருகில், கடலூர் மாவட்டம். பழைய பெயர் அதிகாபுரி, திருஅதிகை வீரட்டானம்.

மூலவர்: வீரட்டானேசுவரர்

அம்பாள்: பெரியநாயகி

ஸ்தல விருட்சம்:சரங்கொன்றை

தீர்த்தம்: சூலத்தீர்த்தம்

வழிபட்டோர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர். இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.

ஸ்தல வரலாறு : வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களை காத்து ரட்சிக்க சிவபெருமான் திரிபுர தகனம் செய்த ஸ்தலம்.

திருநாவுக்கரசர் வரலாறு : பன்ருட்டி  அருகே திருவாமூர் என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலவதியும், மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர். மருள்நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இற்ந்துபோக, இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார். தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. சூலைநோயின் கொடுமை தாங்கமுடியாமல் தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிச் சென்று அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும் தன்னுடைய முதல் பாடலாக "கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்" என பாட சூலை நோயும் தீர்ந்தது. மேலும் நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். -

ஆலய சிறப்புகள்: அஷ்ட வீரட்ட ஸ்தலங்களில் ஒன்று. அனைத்து தலங்களினும் அதிக சிறப்புடையதால் அதிகை என பெயர் பெற்றது. திருநாவுக்கரசரை சூலை நோய் தீர்த்து சைவ சமயத்திற்கு மாற்றிய சிறப்பு.

நால்வரும் பாடிய அற்புத தலம் .இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். உள் சுற்றின் தென்மேற்கே உள்ள பஞ்சமுக லிங்கம் காணவேண்டிய ஒன்று. மூன்று திக்குகளை நோக்கி நானகு முகங்கள் உள்ளன. ஒரு முகம் மேல் நோக்கி உள்ளதாக ஐதீகம். எனவே பஞ்சமுக லிங்கம் என்று கூறுவர். இது ஒரு அரிய தரிசனம் ஆகும்.

கருவறையில் காட்சி அளிக்கும் வீரட்டேஸ்வரர் 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம் ஆவார். இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி தருகிறது.

பல்லவர் காலத்து கோயில் - அற்புதமான நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்த சிற்பங்கள் நிறைந்த கோயில்.

தரிசன பயன்கள்: தீராத வயிற்று வலி தீரும் ஐயனை வழிபட .

எப்படி செல்வது : பன்ருட்டி அருகே உள்ளது. பன்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர்-பன்ருட்டி  சாலையில் 1 கிமீ தொலைவில் உள்ளது.

எங்கே தங்குவது: கடலூர் 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரை.








Sunday, January 13, 2019

இரும்பை-மாகாளேசுவரர் கோயில்

தேவார பாடல் :
மண்டு கங்கை சடையில் கரந்தும், மதி சூடி, மான் 
கொண்ட கையான், புரம் மூன்று எரித்த குழகன்(ன்), இடம் 
எண்திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பைதனுள்,
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே.

கங்கையைச் சடையில் கரந்து, பிறைமதியைச்
சூடி, மான் ஏந்திய கையால் கணைதொடுத்து முப்புரங்களை எரித்த  குழகனது இடம், எண்திசையும் புகழ்பெற்று விளங்கும் திருஇரும்பை  நகரில் உள்ளதும் வண்டுகள் இசைபாடி முரலும் பொழில் சூழ்ந்து விளங்குவதுமாகிய திருமாகாளமாகும் என திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது

ஊர்: இரும்பை, விழுப்புரம் மாவட்டம்

மூலவர்: மாகாளநாதர், மகாகாளேசுவரர்

அம்பாள்: குயில்மொழியம்மை, மதுரசுந்தர நாயகி

ஸ்தல விருட்சம்: புன்னை

தீர்த்தம்: மாகாள தீர்த்தம்

வழிபட்டோர்கள் : கடுவெளிச் சித்தர்

ஸ்தல வரலாறு : கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர். மழையில்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்ட இந்நாட்டு சிற்றரசன் கடுவெளி சித்தரின் கடும் தவமே மழை இல்லாமைக்கு காரணம் என்று கருதி அவரது தவத்தைக் கலைக்க ஒரு தேவதாசி மாதுவை அனுப்பினான். தேவதாசியும் அவரது தவத்தைக் கலைத்தாள். சித்தர் தவம் கலைந்து எழுந்தபோது மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்கு காரணமாக சித்தரின் தவம் இருந்ததோ என சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாக நடந்த உண்மைகளைக் கூறினான். அரசனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவப் பணி செய்து வந்தார். அதன்பின் நாட்டில் நல்ல மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவனுக்கு திருவிழா எடுத்தனர். கோவில் திருவிழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின் தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். அப்போது, அவளது காற்சிலம்பு கீழே கழண்டு விழுந்தது. இதை பார்த்த சித்தர் கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி, அச்சிலம்பை எடுத்து நடனமாதின் காலில் அணிவித்து விட்டார். இதைக்கண்ட மக்கள், சித்தரின் செயலை ஏளனம் செய்து நகைத்தனர். சித்தர் வெகுண்டு இறைவனை நோக்கிப் பாட, ஆலயத்திலுள்ள மூலலிங்கம் வெடித்து 3 பகுதிகளாக சிதறியது. இதையறிந்த அரசன் சித்தரிடம் மன்னிப்புக் கோரினான். சித்தர் மீண்டும் ஒரு பாட்டுப் பாட சிதறிய சிவலிங்கம் ஒன்று கூடியது. சிவலிங்கத்தை செப்புத்தகடு வேய்ந்து ஒன்றாக்கி அரசன் வழிபட்டான். அன்று முதல் இந்நாள் வரை சிவலிங்கம் செப்புத் தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.

ஆலய சிறப்புகள்: இந்தியத் திருநாட்டில் மூன்று சிவஸ்தலங்கள் மாகாளம் என்ற பெயருடன் விரங்குகின்றன. அவை வடதாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம் மற்றும் தொண்டை நாட்டுத் தலமான இந்த இரும்பை மாகாளம்.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்.

எப்படி செல்வது : திண்டிவனத்திலிருந்து கிளியனூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலை மார்க்கத்தில் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையை தாண்டி சிறிது தூரம் சென்றால் இடதுபுறம் இரும்பை செல்லும் சாலை பிரிகிறது. சாலை பிரியும் இடத்தில் இரும்பை என்ற பெயர்ப் பலகையும் உள்ளது. இந்த சாலையில் 2 கி.மி. சென்று மாகாளேஸ்வரர் திருக்கோவிலை அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் இரும்பை மாகாளம் என்ற இந்த சிவஸ்தலம் இருக்கிறது. பாண்டிச்சேரியில் இருந்து சஞ்சீவிநகர் செல்லும் நகரப் பேருந்து மாகாளேஸ்வரர் கோவில் வழியாகச் செல்கிறது.

எங்கே தங்குவது: புதுச்சேரி 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை




Thursday, January 10, 2019

தக்கோலம்-ஜலநாதீசுவரர் கோயில்

தேவார பாடல் : 
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று,
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில்
தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த
ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே.

தமக்கு ஒப்பாரில்லாத வலிய அவுணர்களின் அரணங்களாக விளங்கிய முப்புரங்களை மறையுமாறு முற்காலத்தில் ஒரு வெங்கணையால் நீறுபடச் செய்தழித்த எங்கள் நிமலன் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம், யாதென வினவில், தேன் நிறைந்த பெரிய பொழில்களும், விளங்கிய செங்கயல்கள் பாயும் வயல்களும், சூழ்ந்துள்ள திருவூறலாகும். அப்பெருமானுடைய ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளை நாம் தியானிப்போம் என திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது.

ஊர்: தக்கோலம், புராண பெயர் திருவூறல், வேலூர் மாவட்டம்.

மூலவர்: ஜலநாதீஸ்வரர் (ஜலநாதேசுவரர், உமாபதீசுவரர்)

அம்பாள்: கிரிராஜ கன்னிகாம்பாள் (மோகன வல்லியம்மை)

ஸ்தல விருட்சம்:

தீர்த்தம்: பார்வதி சத்ய கங்கை தீர்த்தம், குசத்தலை நதி

வழிபட்டோர்கள் : சம்வர்த்த முனிவர், உத்தி முனிவர்.

ஸ்தல வரலாறு : தேவகுரு பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா காமதேனுவின் சாபத்திற்கு ஆளானார்.சாபத்திற்கு விமோசனம் பெற நாரதரிடம் அறிவுரை வேண்டினார் தீர்க்கதாவின் தந்தை உத்தி முனிவர். நாரதரது அறிவுரைப்படி திருவூறல் வந்து சிவபெருமானை வழிபட்டு மகனுக்கு சாபவிமோசனம் வேண்டினார்.

இறைவனார், நந்தியை வழிபட்டு, அவரது வாயிலிருந்து தெய்வ கங்கையை வரவைத்து அத்தீர்த்தம் கொண்டு தம்மை வழிபட சாபவிமோசனம் கிட்டும் எனக்கூற அதன்படி தீர்க்கதா செய்து சாபவிமோசனம் பெற்றார். இதனால் இத்தல இறைவனார் ஜலநாதீஸ்வரர் என்ற பெயரில் வழிபடப்பட்டு வருகின்றார்

ஆலய சிறப்புகள்: 
தக்கன் தலையைக் கொய்த தலம், தக்கன் ஓலமிட்டு அழுததால் தக்கோலம் என பெயர் என்றும் கூறப்படுகிறது.
சுயம்புலிங்கமான இத்தல இறைவனார், உத்தராயண காலத்தில் இளம் சிகப்பு நிறத்திலும் தட்சிணாயன காலத்தில் வெள்ளை நிறத்திலும் காட்சிதருகின்றார்.மணலால் செய்த சுயம்புலிங்கம் என்பதால் இவருக்கு மஞ்சள் காப்பு மட்டுமே.நந்தியின் வாய் வழியே கங்கை நீர் வந்ததாகக் கூறப்படுகிறது

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்.

எப்படி செல்வது : அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் வழியாக தக்கோலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.

எங்கே தங்குவது: காஞ்சிபுரம் 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரை.


Monday, January 7, 2019

திருமால்பூர்-மணிகண்டீசுவரர் கோயில்

தேவார பாடல் :
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை
நீறு சேர் திருமேனியர் 
சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில்
மாறு இலா மணிகண்டரே.

சேற்று வளம் நிறைந்த வயல்கள் சூழ்ந்த அழகிய திருமாற்பேற்றில் ஒப்பற்ற நீலமணி போன்ற கண்டத்தை உடைய இறைவர், கடலிடத்தே ஊறிப் பொருந்திவந்த நஞ்சினை உண்டு உமையம்மையோடு கூடியவராய்த் திருநீறு பூசிய திருமேனியராய் விளங்குகிறார் என அப்பரால் பாடல்பெற்றது.

ஊர்: திருமால்பூர், புராண பெயர் ஹரிசக்கரபும், திருமாற்பேறு, வேலூர் மாவட்டம்.

மூலவர்: மணிகண்டீஸ்வரர்

அம்பாள்: அஞ்சனாட்சி

ஸ்தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: சக்கர தீர்த்தம்

வழிபட்டோர்கள் : மஹாவிஷ்ணு

ஸ்தல வரலாறு : ஜலந்திரன் எனும் அரக்கனை கொல்ல சிவபெருமான் சக்ராயுதம் ஒன்றை உருவாக்கியிருந்தார். ததிசி முனிவரை கொல்ல திருமால் ஏவிய சக்ராயுதம், முனிவரின் தெய்வீக தன்மையால் செயலிழந்து போனது. அதனால் சிவபெருமானிடம் சக்ராயுதம் பெறுவதற்காக திருமால் ஆயிரம் தாமரை மலர்களால் பூசை செய்துவந்தார்.

ஒரு நாள் ஆயிரம் தாமரைகளில் ஒன்று சிவபெருமானின் அருளால் மறைந்தது. தனது பூசையை நிறைவு செய்வதற்காக திருமால் தனது கண்களில் ஒன்றை தாமரையாக மாற்றி பூசித்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் திருமாலிற்கு பார்வை வழங்கியதுடன், சக்ராயுதத்தினையும் அளித்தார்.

ஆலய சிறப்புகள்: மூலவர் தீண்டாத் திருமேனி.ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட அதனால் உலகமே இருண்டு போயிற்று. உலக இயக்கமே தடைபட, தனது தவறை உணர்ந்த பார்வதி இப்பூவுலகம் வந்து விருத்தக்ஷீர நதிக்கரையில் மணலால் ஒரு இலிங்கம் அமைத்து இறைவனை பூஜித்து தன் தவறை போக்கிக் கொண்டாள். விருத்தக்ஷீர நதி என்ற பழைய பாலாறு இத்தலத்திற்கு வடக்குத் திசையில் இப்போது உள்ளது. மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளதால், அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது.

திருஞானசம்பந்தர் அருளிய இரண்டு திருப்பதிகங்களும், திருநாவக்கரசர் அருளிய நான்கு திருப்பதிகங்களும் ஆக ஆறு தேவாரப் பதிகங்கள் இத்தலத்திற்கு உரியன.

மூலவருக்கு நேரெதிரில் மஹாவிஷ்ணு தரிசனம் செய்வதுபோல் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்

எப்படி செல்வது : காஞ்சிபுரம் நகரில் இருந்து 15 கி.மி. தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்தும், அரக்கோணத்தில் இருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

எங்கே தங்குவது: காஞ்சிபுரம் 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.



Friday, January 4, 2019

திருக்கச்சூர் - கச்சபேஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
முது வாய் ஓரி கதற, முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே! 
மது வார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள் தன் மணவாளா! 
கதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே? 
அதுவே ஆம் ஆறு இதுவோ? கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! .

பெரிய வாயை உடைய நரிகள் கூப்பிடப் புறங்காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே, கொன்றையினது தேன் ஒழுகுகின்ற புதிய பூவைச் சூடுகின்ற, மலையான் மகள் மணவாளனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ சென்று, முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உண் அடியவர் கவலைகொள்ளாரோ?

ஊர்: திருக்கச்சூர், காஞ்சிபுரம் மாவட்டம்

மூலவர்: கச்சபேசர், விருந்திட்டவரதர்

அம்பாள்: அஞ்சனாட்சியம்மை

ஸ்தல விருட்சம்: ஆல்

தீர்த்தம்: கூர்ம (ஆமை) தீர்த்தம்

வழிபட்டோர்கள் : 

ஸ்தல வரலாறு : அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது.

ஆலய சிறப்புகள்: சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமை திருக்கச்சூருக்கு உண்டு.அதனால் விருந்திட்ட ஈஸ்வரர் என்ற பெயரும் மூலவருக்கு உண்டு.

இரண்டு கோயில்கள் இங்கு உள்ளது, மலையடிவாரத்தில் உள்ள கோயில் திருக்கச்சூர் ஆலக்கோயில் (கச்சபேஸ்வரர்) என்று அழைக்கப்படுகிறது. மலைமேல் உள்ள கோயிலின் பெயர் மருந்தீஸ்வரர் (ஒளஷதஈஸ்வரர் ) கோயில். சுந்தர மூர்த்தி நாயனார் பசித்திருந்த சமயம் இத்தல இறைவனார் பிச்சையேற்று உணவு கொணர்ந்து தமது அடியாரின் பசியாற்றிய தலம். இத்தலத்தில் கொடி மரத்தின் கீழுள்ள திருமண் திருநீற்றுத் தன்மையுடன் உள்ளது.இந்த இரு கோயில்களையும் சேர்ந்து தரிசிப்பது நல்லது.

தரிசன பயன்கள்: இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது. மலைக்கோயில் மருந்தீஸ்வரர் கோயில் சகல பிணிகளையும் தீர்ப்பதாக நம்பிக்கை.

எப்படி செல்வது : சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி ரயில்வே கேட் தாண்டி சுமாராக 1 கி.மி. தூரம் சென்ற பின் வலதுபுறம் பிரியும் சாலையில் மேலும் 1 கி.மி. தூரம் சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம். ஊரின் நடுவே கோவில் உள்ளது. சிங்கப்பெருமாள்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது.

எங்கே தங்குவது: சென்னை, செங்கல்பட்டு 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை


Tuesday, January 1, 2019

திருவடிசூலம் - ஞானபுரீசுவரர் கோயில்

தேவார பாடல் :
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ, வார் சடை முடிமிசை
                                                             வளர்மதி சூடி,
கரி வளர்தரு கழல்கால் வலன் ஏந்தி, கனல் எரி ஆடுவர், காடு
                                                             அரங்கு ஆக;
விரி வளர்தரு பொழில் இனமயில் ஆல, வெண் நிறத்து அருவிகள
                                                             திண்ணென வீழும்,
எரி வளர் இனமணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர்

                                                             வணம் என்னே?

 மரங்கள் வளர்ந்த விரிந்த பொழில்களில் இளமயில்கள் ஆடுவதும், வெண்மையான நிறத்துடன் அருவிகள் திண்ணென்ற ஒலிக் குறிப்போடு வீழ்வதும், எரி போன்று ஒளிரும் ஓரினமான மணிகள் காடுகளில் அழகுற விளங்குவதுமாய மலைச் சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், வரிகளையும் ஒளியையும் உடைய பாம்பை இடையிலே கட்டி, நீண்ட சடைமுடிமீது வளரும் பிறை மதியைச் சூடி யானை உருவம் பொறித்த வீரக் கழலைக்காலின்கண் வெற்றி பெறச் சூடிச் சுடுகாட்டைத் தமது அரங்காகக் கொண்டு ஆடும் இவ்விறைவரது இயல்பு யாதோ? என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: திருவடிசூலம், காஞ்சிபுரம் மாவட்டம், தேவார பெயர் திருஇடைசுரம்.

மூலவர்: இடைச்சுரநாதர், ஞானபுரீசுவரர்

அம்பாள்: இமய மடக்கொடி, கோவர்த்தனாம்பிகை

ஸ்தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: மதுர தீர்த்தம்

வழிபட்டோர்கள் : அம்பாள், பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம். ஆதலால் இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

ஸ்தல வரலாறு : திருஞானசம்பந்தர் தனது சிவஸ்தல யாத்திரையின் போது இவ்வழியே வந்து கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில் ஏறியதாலும் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது சிவபெருமான்  ஒரு இடையனாக தோன்றி தன்வசமிருந்த தயிரை அவருக்கு அளித்து பசியாற்றினார். மேலும் அருகில் ஒரு சிவன் கோயில் இருப்பதாகவும் பெருமான் கூற அவர் காட்டி பாதையில் நடந்தார் ஞானசம்பந்தர். கோயில் வந்தவுடன் அவருக்கு கட்சி கொடுத்து மறைந்தார்.

ஆலய சிறப்புகள்: இத்தலத்தின் சிறப்பு மூலவர் லிங்கத் திருமேனி. இந்த சுயம்பு லிங்கம் ஒரு மரகதலிங்கம். சதுரபீட ஆவுடையார். சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது அவ்வொளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது.கருவறை அகழி அமைப்புடன் காணப்படுகிறது.

அழகிய மலைகள் சூழ்ந்த இடத்தில இந்த கோயில் அமைந்துள்ளது. அருகில் 51 அடி உயரம் கொண்ட அம்பாள் சிலையுடன் ஒரு கருமாரி அம்மன்  கோயில் உள்ளது, மேலும் அந்த கோயில் வளாகத்தில் ஒரு அழகிய பெருமாள் கோயிலும் உள்ளது.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்

எப்படி செல்வது : 
செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.

எங்கே தங்குவது: சென்னை,செங்கல்பட்டு 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் இரவு 7 மணி வரை.