Wednesday, March 27, 2019

திருத்தலையாலங்காடு-நர்த்தனபுரீஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான் தன்னை,
             சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை, 
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை,
          ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை, 
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை,
       மூஉருவத்து ஓர் உரு ஆய் முதல் ஆய் நின்ற 
தண்டத்தில்-தலையாலங்காடன் தன்னை,
                 சாராதே சால நாள் போக்கினேனே!.

தொண்டர்க்குத் தன்வழி நிற்றலே நன்னெறியாகச் செய்து நின்றவனும், சூழும்நரகில் வீழாமல் தொண்டரைக் காப்பவனும், இப்புவிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆனவனும், ஆதிரை நாளை விரும்பிக்கொண்ட தலைவனும், நெற்றியிடத்துத் தோன்றி வளரும் தீயினனும், அயன், அரி, அரன் என்னும் மூவுருவங்களுள் ஓருருவமாய அரனாய் நின்று அம்மூவுருவங்களுக்கும் முதலாய் நின்ற இலிங்கவுருவினனும் ஆகிய தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளைவீணாள் ஆக்கினேன் என அப்பரால் பட பெட்ரா ஸ்தலம்.

ஊர்: திருத்தலையாலங்காடு, திருவாரூர் மாவட்டம்

மூலவர்: நர்த்தனபுரீஸ்வரர் ,நடனேசுவரர், ஆடவல்லநாதர்

அம்பாள்: உமாதேவி, திருமடந்தையம்மை, பாலாம்பிகை

ஸ்தல விருட்சம்: ஆலமரம்

தீர்த்தம்: சங்கு தீர்த்தம்

வழிபட்டோர்கள் : கபில முனிவர், தாருகாவன முனிவர்கள், காளி, சனி.

ஸ்தல வரலாறு :
தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் வேள்வி செய்து ஏவி விட்ட முயலகன் என்னும் கொடிய அரக்கனை அடக்கிய சிவபெருமான், அம் முயலகன் மீது நடனம் ஆடிய தலம் இது. எனவே நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. நடராஜர் சிலையில் ஐயனின் திருப்பாதங்களில் கீழ் முயலகன் இருப்பதை காணலாம். கபில முனிவர் பூஜித்து, தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியை பெற்றார். சரஸ்வதி தேவி பூஜித்து ஜோதிர்லிங்க தரிசனம் பெற்றார்.

ஆலய சிறப்புகள்: அம்பாள் சன்னதியில் சனி பகவான் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது திருநள்ளாருக்கு அடுத்து இங்குதான். வரலாற்று சிறப்புமிக்க இடம் - சங்க காலத்தில் பாண்டிய நெடுஞ்செழியன் இவ்வூரில் போர் புரிந்து வென்றதால் தலையாலங்கானத்து செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என பெயர் பெற்றார். அப்பருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்த திருத்தலம்

தரிசன பயன்கள்: சங்கு தீர்த்தத்தில் நீராடுபவர்கள் குன்மம் , முயலக நோய், சித்தபிரமை, வெண்குஷ்டம் முதலிய நோய் தீரும். சனி தோஷம் நிவர்த்தி ஸ்தலம்.

எப்படி செல்வது : 
கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இருந்து கிழக்கே 8.கி.மி. தொலைவில் உள்ளது.

எங்கே தங்குவது: திருவாரூர், கும்பகோணம் 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்



Sunday, March 24, 2019

கரையபுரம்-கரவீரேசுவரர் கோயில்

தேவார பாடல் :
அரியும், நம் வினை உள்ளன ஆசு அற
வரி கொள் மாமணி போல் கண்டம்
கரியவன், திகழும் கரவீரத்து எம்
பெரியவன், கழல் பேணவே.

வரிகள் அமைந்த சிறந்த நீலமணி போலக் கண்டம் கறுத்தவனாய், விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைத் துதித்தால் நம் வினைகளாக உள்ளன யாவும் முற்றிலும் கழியும் என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: வடகண்டம் கரையபுரம், கரவீரம், திருவாரூர் மாவட்டம்,  பழைய பெயர் திருக்கரவீரம்.


மூலவர்: கரவீரேசுவரர்

அம்பாள்: பிரத்தியட்ச மின்னம்மை

ஸ்தல விருட்சம்: அலரி

தீர்த்தம்: அனவரத தீர்த்தம்

வழிபட்டோர்கள் : கௌதம முனிவர் 

ஸ்தல வரலாறு : கௌதமர் பூசித்த இத்தலம் திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த கோயிலாகும்.கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. ஒரு காலத்தில் பொன்னலரிக் காடாக இத்தலம் இருந்தது. பொன்னலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது.

ஆலய சிறப்புகள்: இக்கோவிலில் கெளதம முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது. அமாவாசை நாட்களில் பெண்கள் கெளதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. நீண்ட பாணத்தை உடைய லிங்க திருமேனி.

தரிசன பயன்கள்: திருமண தடை நீங்கும், குழந்தைகள் நோய் தீர்க்கும் ஸ்தலம் மற்றும் சரும நோய் குணமடையும் என்பதும் ஐதீகம்.

எப்படி செல்வது : திருவாரூரில் இருந்து மேற்கே கும்பகோணம் செல்லும் சாலையில் 10 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

எங்கே தங்குவது: திருவாரூர், கும்பகோணம் 

தரிசன நேரம் :.காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை


Friday, March 22, 2019

மயிலாடுதுறை-மயூரநாதசுவாமி கோயில்

தேவார பாடல் :
கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை 
உள்ளம் உள்கி உரைக்கும், திருப்பெயர் 
வள்ளல் மா மயிலாடுதுறை உறை 
வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே.

மயிலாடுதுறையில் உறைகின்ற வள்ளலும், கங்கை வெள்ளம் தாங்கிய சடையனுமாகிய பெருமானை விரும்பிக் காதல் கொள்ளும் இயல்புடைய திரண்ட வளைகள் பெய்யப்பட்ட இப்பெண் உள்ளத்தால் உள்கி அப்பெருமான் திருப்பெயரையே உரைக்கும் தன்மையள் ஆயினள் என அப்பர் பாடியுள்ளார். அப்பர் இரு பதிகமும், ஞானசம்பந்தர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

ஊர்: மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.  மாயவரம், மாயூரம் எனவும் வழங்கப்படுகிறது.

மூலவர்: மயூரநாதர்

அம்பாள்: அபயாம்பிகை

ஸ்தல விருட்சம்: மாமரம், வன்னி

தீர்த்தம்: பிரம, ரிஷப தீர்த்தங்கள், காவிரியாறு

வழிபட்டோர்கள் : பிரம்மா, அம்பாள், கன்வ முனிவர், 

ஸ்தல வரலாறு : பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தான் என்று புராண வரலாறு கூருகிறது. அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவஸ்தலமான திருமயிலை ஆகும்.  சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்து விடுகிறார். காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் பார்வதியை சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்தாள். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது.

ஒருமுறை கண்ணுவ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும் போது எதிரில் சண்டாளக் கன்னிகள் மூவர் வருகின்றனர். அவர்கள் கண்னுவ முனிவரை வணங்கி தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் என்றும், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா மாதத்தில் காவிரியின் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர். தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிகச் சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும் கடைசி நாளான 30ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதத்தின் முதல் நாள் "முடவன் முழுக்கு" என்று கொண்டாடப்படுகிறது. துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், இறைவன் அவனுக்கு ஒருநாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் நீங்கியது.

ஆலய சிறப்புகள்:  6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.

தரிசன பயன்கள்: காசி தரிசனத்திற்கு இணையான பயன்கள்

எப்படி செல்வது : சென்னையிலிருந்து பேருந்து மற்றும் ரயில் சேவைகள் உள்ளன. மேலும் கும்பகோணம், திருவாரூர், சிதம்பரம் ஆகிய இடங்களிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

எங்கே தங்குவது: மயிலாடுதுறை 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை





Saturday, March 16, 2019

புஞ்சை- நற்றுணையப்பர் கோயில்

தேவார பாடல் :
காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை 
     படர்தொடரி கள்ளி கவினிச் 
சூரைகள் பம்மிவிம்மு சுட கா டமர்ந்த 
     சிவன்மேய சோலை நகர்தான் 
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை 
     குதிகொள்ள வள்ளை துவள 
நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் 
     நனிபள்ளி போலும் நமர்காள்

நமர்காள்! காரை, கூகை, முல்லை, களவாகை,
ஈகை, படர்ந்த தொடரி, கள்ளி ஆகிய தாவரங்கள் அழகுச் செய்யச்
சூரை செறிந்த சுடுகாட்டை விரும்பும் சிவபிரான் எழுந்தருளிய,
சோலைகள் சூழ்ந்த நகர், தேரைகள் ஆரைக்கொடிகளை
மிதித்துத்துள்ள, அதனைக் கண்ட வாளைமீன்கள் துள்ள, அதனால்
வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல் மீன்களை வாரி
உண்ணுமாறு அமைந்த வயல்களில் எருமைகள் படிந்து மகிழும்
நனிபள்ளியாகும் என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். மூவரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.

ஊர்: புஞ்சை, நாகப்பட்டினம் மாவட்டம். பழைய பெயர் திருநனிபள்ளி.

மூலவர்: நற்றுணையப்பர்

அம்பாள்: பர்வதபுத்திரி, மலையான் மடந்தை

ஸ்தல விருட்சம்: சண்பகம்,புன்னை

தீர்த்தம்: சொர்ண தீர்த்தம்,தல தீர்த்தம்

வழிபட்டோர்கள் : அகத்தியர்

ஸ்தல வரலாறு : சம்பந்தர், தன் தந்தையார் தோளிலிருந்து இத்தலப்பதிகத்தை அருளினார் என்பது வரலாறு. இதை அத்தலப்பதிகத்தின் கடைசி பாடலால் அறிகிறோம். பாலையாக இருந்த இவ்வூரை நெய்தல் நிலமாக மாறுமாறு பாடியருளியதாகவும், நெய்தலைப் பின்னும் கானகமும் வயலுமாக ஆக்கியருளினார் என்பர்.

ஆலய சிறப்புகள்: சிவபெருமான் அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளித்த தலம் மற்றும் அப்பர்,சுந்தரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சைவ அடிகளார்களால் பாடப்பட்ட தலம் என்ற பெருமையும் உண்டு.

திருஞானசம்பந்தரின் தாயாரான பகவதி அம்மையார் பிறந்த தலமாகும் இது. மூவராலும் பாடப் பெற்ற தலங்களில் ஒன்று என்ற் சிறப்பை இத்தலம் பெற்றுள்ளது.

தரிசன பயன்கள்: மூலவர் நற்றுணையப்பர் என்று அழைக்கப்படுகிறார். மனதில் உள்ள பயம் நீக்கி நல்வழிக்கு துணையாய் நிற்பவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். திருமண தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாண சுந்தரேசரை வணங்கினால் தோஷம் விலகும்

எப்படி செல்வது : மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் சாலையில்  15 கிமீ தொலைவில் உள்ளது. பூம்புகார்,திருவெண்காடு,பெருந்தோட்டம்,மங்கைமடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் வழியாக அடையலாம்.

எங்கே தங்குவது: மயிலாடுதுறை

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை



Wednesday, March 13, 2019

குறுமாணக்குடி- கண்ணாயிரமுடையார் கோயில்

தேவார பாடல் :
தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி,
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு, இடர்பாவம்
நண்ணா ஆகும்; நல்வினை ஆய நணுகுமே.

குளிர்ந்த திங்கள், சினம் மிக்க பாம்பு, ஆகாயத்திலிருந்து தாழ்ந்துவந்த கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, பெண்ணும் ஆணுமாய கோலத்தில் விளங்கும் பெருங்கருணையாளனாகிய சிவபிரான் பிரியாமல் எழுந்தருளியிருக்கும் திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் நண்ணா. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் நண்ணும் என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: குறுமாணக்குடி, நாகப்பட்டினம் மாவட்டம்

மூலவர்: கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சகஸ்ர நேத்ராசுவரர்

அம்பாள்: சுகுந்த குந்தளாம்பிகை, முருகுவளர்கோதை

ஸ்தல விருட்சம்: சரக்கொன்றை

தீர்த்தம்: இந்திரதீர்த்தம்

வழிபட்டோர்கள் : இந்திரன்

ஸ்தல வரலாறு : தேவர்களின் தலைவனான இந்திரன், கெளதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டு, முனிவரின் வேடத்தில் அகலிகையுடன் உறவு கொண்டான்.நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, இந்திரன் உடல் எங்கும் பெண் குறிகள் உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க, "ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும்" என்றார் முனிவர். இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மாவிடம் சென்றான். அதற்கு பிரம்மா குறுமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட, அவனது ஆயிரம் பெண் குறிகளும் ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்தார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் "கண்ணாயிரமுடையார்" என்று பெயர் பெற்றார். வாமன அவதாரம் எடுத்த திருமாலும் இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட, அவருக்கும் அருள் செய்ததால் இத்தலத்திற்கு குறுமாணக்குடி என்ற மறு பெயரும் உண்டாயிற்று

ஆலய சிறப்புகள்: மூலவர் கண்ணாயிரநாதர் சுயம்புத் திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். பாணப்பகுதி சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன.

தரிசன பயன்கள்: திருமணமாகாதோர் இக்கோயிலுக்கு வந்து மாலைசாத்தி வழிபடும் வழக்கமுள்ளது

எப்படி செல்வது :  சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன்கோவில் என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 5 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் சிவஸ்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவில் - மாயவரம் சாலையில் பாகசாலை என்ற ஊர் வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் உள்ளது

எங்கே தங்குவது: வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி 

தரிசன நேரம் : காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை. .




Sunday, March 10, 2019

வடகுரங்காடுதுறை-தயாநிதீசுவரர் கோயில்

தேவார பாடல் :
கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் புன்னையே, கொகுடி,                                                           முல்லை,
வேங்கையே, ஞாழலே, விம்மு பாதிரிகளே, விரவி எங்கும்
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
வீங்கு நீர்ச் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே

கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும்
புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தைச் சிவபெருமான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளுபவர் என திருஞானசம்பந்தரால் பாடல்பெற்றது.

ஊர்: வடகுரங்காடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம், பழைய பெயர் திருவடகுரங்காடுதுறை.

மூலவர்: தயாநிதீஸ்வரர் (வாலி நாதர், சித்தலிங்கேஸ்வரர், குலை வணங்கி நாதர்

அம்பாள்: அழகு சடைமுடியம்மை (ஜடாமகுட நாயகி)

ஸ்தல விருட்சம்: தென்னை

தீர்த்தம்: 

வழிபட்டோர்கள் : வாலி, அனுமன்

ஸ்தல வரலாறு : இத்தலத்தில் இராமாயண வாலி இங்குவந்து தான் வலிமை பெற வேண்டினார். அதனால் இறைவன் வாலிநாதர் என்று அழைக்கப்படுகிறார்.வாலி வணங்கியமையால் வடகுரங்காடுதுறை என்றும், சுக்ரீவன் வழிபட்ட தலம் தென்குரங்காடுதுறை என்றும் அழைக்கப்படுகிறது. அனுமனும் இத்தலத்தில் பூசை செய்துள்ளார்.

ஆலய சிறப்புகள்: நல்ல வெய்யில் காலத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒருமுறை நடந்து வந்து கொண்டிருந்தாள். வெய்யிற் காலமானதால் தாகம் தாங்க முடியவில்லை. தாகமும், களைப்பும் மேலிட அவள் மயக்கமுற்றாள். இதலத்தில் கோவில் கொண்டுள்ள ஈசன் இதை அறிந்தார். தாயுமானவராக திருச்சிராப்பள்ளியில் ஒரு பக்தைக்கு அருள் செய்த இறைவன் இங்கு அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். இறைவனருளால் அப்பெண் தாகம் நீங்கி புத்துணர்வு அடைந்தாள். தென்னங்குலைகளை வளைத்து அருள் புரிந்ததால் இறைவன் குலைவணங்குநாதர் என்று பெயர் பெற்றார்.

வடக்கு கோஷ்டத்தில் காணப்படும் விஷ்னு துர்க்கை மிகவும் சக்தி உடைய தெய்வம். எட்டு கைகளுடன் காணப்படும் துர்க்கைக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீலநிறமாக மாறிவிடுவது சிறப்பாகும்

தரிசன பயன்கள்: இத்தலத்தில் துர்க்கைக்கு ராகுகாலபூஜை செய்யும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிப் பெண்கள் இத்தல இறைவனை வணங்கி வந்தால் எவ்வித தொல்லையும் இன்றி சுகப்பிரசவம் நடக்கும்.

எப்படி செல்வது : கும்பகோணம் - திருவையாறு சாலையில் சென்றால் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டிய பின்னர், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அதற்கடுத்து உள்ளது ஆடுதுறை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது.

எங்கே தங்குவது: கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர்.

தரிசன நேரம் : காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை


Thursday, March 7, 2019

செம்பொனார்கோவில்-சுவர்ணபுரீசுவரர் கோயில்

தேவார பாடல் :
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி,
வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்;
நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள்
தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே

திருச்செம்பொன்பள்ளிஎம்பெருமான் இவ்வுடம்பினுள் உள்ள உயிரைத் தவம் விரதம் முதலியவற்றால் வாட்டித் தூய்மையுடையதாக்கி மெய்யுணர்வு பெற்ற பெரியவர்களுக்கு எளியராய், உயர்ந்த உலகிலுள்ள தேவர்களும் அறியமுடியாத கள்ளத்தை உடையவராய், சிவபோதத்தினராய் இருக்கும் சிவஞானிகளுக்கு அமுதமும், சிவனடியார்களின் நெஞ்சில் தேனும்போல இனிப்பவராய் உள்ளார் என அப்பர் பாடியுள்ளார்

அப்பர் 2 பதிகங்களும், திருஞானசம்பந்தர் 1 பதிகமும் பெற்ற அற்புத ஸ்தலம்.

ஊர்: செம்பொனார்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம், பழைய பெயர் திருசெம்பொன்பள்ளி

மூலவர்: சுவர்ணபுரீசுவரர், தேவப்பிரியர், சுவர்ண லட்சுமீசர், செம்பொன் பள்ளியார்

அம்பாள்: மருவார் குழலி, புஷ்பாளகி, தாட்சாயணி, சுகந்த குந்தளாம்பிகை, சுகந்தவன நாயகி

ஸ்தல விருட்சம்: வன்னி, வில்வம்

தீர்த்தம்: சூரிய தீர்த்தம்

வழிபட்டோர்கள் : பிரம்ம தேவர், இந்திரன், குபேரன், வசிட்டர், அகத்தியர் முதலானோர் வழிபட்ட திருத்தலம்

ஸ்தல வரலாறு : தட்சன் தன் மகள் தாட்சாயினியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறாரன். பின் ஒரு சமயம் தட்சன் தனது அகந்தை காரணமாக தான நடத்தும் ஒரு யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயினி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது தட்சன் ஆணவத்தினால் சிவனையும் சக்தியையும் நிந்தித்து விடுகிறான். தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டடும் என்று சாபம் இடுகிறார். அத்துடன் சிவனிடம் தட்சனை தண்டிக்கும் படி வேண்டுகிறார். சிவனும் வீரபத்திரர், பத்திரகாளி ஆகியோரை தோற்றுவித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்ஹாரம் செய்து விடுகிறார். தாட்சாயிணியும் சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். சிவபெருமான் தாட்சாயிணியை மன்னித்து மருவார் குழலியம்மை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் இருந்து அருளாட்சி செய் என்று அருள்பாலிக்கிறார். இத்தலம் தாட்சாயணிக்கு அருள்புரிந்ததும், வீரபத்திரர் தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.

ஆலய சிறப்புகள்: லட்சுமி இத்தல இறைவனை வழிபட்டு திருமாலை தன் கணவனாக அடைந்ததாள். எனவே இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்ற பெயர் வந்தது. இந்திரன் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து விருத்திராசூரனை வெல்ல வச்சிராயுதம் பெற்றான். இதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்றும் பெயர் உண்டு. வட்டவடிவமான ஆவுடையார் மேல் லிங்க உருவில் எழுந்தருளியுள்ள இத்தல மூர்த்தியான சுவர்ணபுரீஸ்வரர் திருமாலால் பூஜிக்கப்பட்டவர்.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்

எப்படி செல்வது : மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் 11 கிமீ தொலைவில் உள்ளது.

எங்கே தங்குவது: மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில் 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.