Sunday, March 3, 2019

அச்சிறுபாக்கம்-ஆட்சீசுவரர் கோயில்

தேவார பாடல் :
பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல் பவளமொடு
                                                   அழல் நிறம் புரைய,
குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண்
                                         நூலொடு கொழும்பொடி அணிவர்;
மின் திரண்டன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை 
                                                   ஓர்பாகமாப் பேணி,
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
                                                   ஆட்சி கொண்டாரே.

அச்சிறுபாக்கத்தைத் தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தமது, முறுக்கேறிய பொன் திரண்டாற் போன்ற சடை, அலைகள் பெருங்கடலில் தோன்றும் பவளக் கொடியையும், தீ வண்ணத்தையும் ஒத்துப் புரள, குன்றுகள் போன்ற இரண்டு தோள்களோடு கூடிய மார்பகத்தில் விளங்கும் வெண்மையான முப்புரி நூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையினையுடைய மென்மைத் தன்மை வாய்ந்த அரிவையாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓருருவில் ஈருருவாய்த் தோன்றும் அடிகளாவார் என திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.

ஊர்: அச்சரப்பாக்கம்,  காஞ்சிபுரம் மாவட்டம், பழைய பெயர் அச்சிறுபாக்கம்

மூலவர்: உமையாட்சீசர்

அம்பாள்: மெல்லியலாள்,சுந்தரநாயகி, பாலாம்பிகை, இளங்கிளியம்மை.

ஸ்தல விருட்சம்:சரக்கொன்றை

தீர்த்தம்: சங்கு தீர்த்தம், பானு தீர்த்தம், தேவ தீர்த்தம், சிம்ம தீர்த்தம்.

வழிபட்டோர்கள் : கண்ணுவ முனிவர், கௌதம முனிவர் வழிபட்ட திருத்தலம்.

ஸ்தல வரலாறு : வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.  இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். ஆனால் அவ்வாறு புறப்படுவதற்கு முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்க தேவர்கள் மறந்தனர். அதனால் தேரின் அச்சை விநாயகர் முறித்து விட்டார். தேர் அச்சு முறிந்ததற்குக் காரணம் விநாயகர் தான் என்பதை உணர்ந்த சிவன் அவரை வேண்டினார். தந்தை சொல் கேட்ட விநாயகர் தேரின் அச்சை சரியாக்கினார். அதன் பின் சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமாதலால் இத்தலம் அச்சு இறு பாக்கம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி தற்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது

ஆலய சிறப்புகள்: இரண்டு சந்நிதிகள் இத்திருத்தலத்தில் உள்ளன. அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு விநாயகர் துதி பாடி பிறகு தான் திருப்புகழ் பாடத் தொடங்கினார் எனபதிலிருந்தே இவ்விநாயகரின் பெருமையை உணரலாம். விநாயகர் துதியில் "முப்புரம் எரி செய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த" என்று தலவரலாற்றைக் குறிப்பிடுகிறார்

தரிசன பயன்கள்: சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சுமுறி விநாயகர்" என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார். புதிய செயல்கள் தொடங்குவதற்கு முன் இவ்விநாயகரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. .

எப்படி செல்வது : சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் 96 கிமீ தொலைவில் உள்ளது. மேல்மருவத்தூரிலிருந்து 4 கிமீ தூரம்.

எங்கே தங்குவது: சென்னை, செங்கல்பட்டு 

தரிசன நேரம் :. காலை 6-30 மணி முதல் 11-30 மணி வரையிலும் மாலையில் 4-30 மணி முதல் 8-30 மணி வரை





No comments:

Post a Comment