Saturday, March 16, 2019

புஞ்சை- நற்றுணையப்பர் கோயில்

தேவார பாடல் :
காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை 
     படர்தொடரி கள்ளி கவினிச் 
சூரைகள் பம்மிவிம்மு சுட கா டமர்ந்த 
     சிவன்மேய சோலை நகர்தான் 
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை 
     குதிகொள்ள வள்ளை துவள 
நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் 
     நனிபள்ளி போலும் நமர்காள்

நமர்காள்! காரை, கூகை, முல்லை, களவாகை,
ஈகை, படர்ந்த தொடரி, கள்ளி ஆகிய தாவரங்கள் அழகுச் செய்யச்
சூரை செறிந்த சுடுகாட்டை விரும்பும் சிவபிரான் எழுந்தருளிய,
சோலைகள் சூழ்ந்த நகர், தேரைகள் ஆரைக்கொடிகளை
மிதித்துத்துள்ள, அதனைக் கண்ட வாளைமீன்கள் துள்ள, அதனால்
வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல் மீன்களை வாரி
உண்ணுமாறு அமைந்த வயல்களில் எருமைகள் படிந்து மகிழும்
நனிபள்ளியாகும் என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். மூவரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.

ஊர்: புஞ்சை, நாகப்பட்டினம் மாவட்டம். பழைய பெயர் திருநனிபள்ளி.

மூலவர்: நற்றுணையப்பர்

அம்பாள்: பர்வதபுத்திரி, மலையான் மடந்தை

ஸ்தல விருட்சம்: சண்பகம்,புன்னை

தீர்த்தம்: சொர்ண தீர்த்தம்,தல தீர்த்தம்

வழிபட்டோர்கள் : அகத்தியர்

ஸ்தல வரலாறு : சம்பந்தர், தன் தந்தையார் தோளிலிருந்து இத்தலப்பதிகத்தை அருளினார் என்பது வரலாறு. இதை அத்தலப்பதிகத்தின் கடைசி பாடலால் அறிகிறோம். பாலையாக இருந்த இவ்வூரை நெய்தல் நிலமாக மாறுமாறு பாடியருளியதாகவும், நெய்தலைப் பின்னும் கானகமும் வயலுமாக ஆக்கியருளினார் என்பர்.

ஆலய சிறப்புகள்: சிவபெருமான் அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளித்த தலம் மற்றும் அப்பர்,சுந்தரர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சைவ அடிகளார்களால் பாடப்பட்ட தலம் என்ற பெருமையும் உண்டு.

திருஞானசம்பந்தரின் தாயாரான பகவதி அம்மையார் பிறந்த தலமாகும் இது. மூவராலும் பாடப் பெற்ற தலங்களில் ஒன்று என்ற் சிறப்பை இத்தலம் பெற்றுள்ளது.

தரிசன பயன்கள்: மூலவர் நற்றுணையப்பர் என்று அழைக்கப்படுகிறார். மனதில் உள்ள பயம் நீக்கி நல்வழிக்கு துணையாய் நிற்பவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். திருமண தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாண சுந்தரேசரை வணங்கினால் தோஷம் விலகும்

எப்படி செல்வது : மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் சாலையில்  15 கிமீ தொலைவில் உள்ளது. பூம்புகார்,திருவெண்காடு,பெருந்தோட்டம்,மங்கைமடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் வழியாக அடையலாம்.

எங்கே தங்குவது: மயிலாடுதுறை

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை



No comments:

Post a Comment