Thursday, March 7, 2019

செம்பொனார்கோவில்-சுவர்ணபுரீசுவரர் கோயில்

தேவார பாடல் :
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி,
வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்;
நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள்
தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே

திருச்செம்பொன்பள்ளிஎம்பெருமான் இவ்வுடம்பினுள் உள்ள உயிரைத் தவம் விரதம் முதலியவற்றால் வாட்டித் தூய்மையுடையதாக்கி மெய்யுணர்வு பெற்ற பெரியவர்களுக்கு எளியராய், உயர்ந்த உலகிலுள்ள தேவர்களும் அறியமுடியாத கள்ளத்தை உடையவராய், சிவபோதத்தினராய் இருக்கும் சிவஞானிகளுக்கு அமுதமும், சிவனடியார்களின் நெஞ்சில் தேனும்போல இனிப்பவராய் உள்ளார் என அப்பர் பாடியுள்ளார்

அப்பர் 2 பதிகங்களும், திருஞானசம்பந்தர் 1 பதிகமும் பெற்ற அற்புத ஸ்தலம்.

ஊர்: செம்பொனார்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம், பழைய பெயர் திருசெம்பொன்பள்ளி

மூலவர்: சுவர்ணபுரீசுவரர், தேவப்பிரியர், சுவர்ண லட்சுமீசர், செம்பொன் பள்ளியார்

அம்பாள்: மருவார் குழலி, புஷ்பாளகி, தாட்சாயணி, சுகந்த குந்தளாம்பிகை, சுகந்தவன நாயகி

ஸ்தல விருட்சம்: வன்னி, வில்வம்

தீர்த்தம்: சூரிய தீர்த்தம்

வழிபட்டோர்கள் : பிரம்ம தேவர், இந்திரன், குபேரன், வசிட்டர், அகத்தியர் முதலானோர் வழிபட்ட திருத்தலம்

ஸ்தல வரலாறு : தட்சன் தன் மகள் தாட்சாயினியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறாரன். பின் ஒரு சமயம் தட்சன் தனது அகந்தை காரணமாக தான நடத்தும் ஒரு யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயினி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது தட்சன் ஆணவத்தினால் சிவனையும் சக்தியையும் நிந்தித்து விடுகிறான். தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டடும் என்று சாபம் இடுகிறார். அத்துடன் சிவனிடம் தட்சனை தண்டிக்கும் படி வேண்டுகிறார். சிவனும் வீரபத்திரர், பத்திரகாளி ஆகியோரை தோற்றுவித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்ஹாரம் செய்து விடுகிறார். தாட்சாயிணியும் சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். சிவபெருமான் தாட்சாயிணியை மன்னித்து மருவார் குழலியம்மை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் இருந்து அருளாட்சி செய் என்று அருள்பாலிக்கிறார். இத்தலம் தாட்சாயணிக்கு அருள்புரிந்ததும், வீரபத்திரர் தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.

ஆலய சிறப்புகள்: லட்சுமி இத்தல இறைவனை வழிபட்டு திருமாலை தன் கணவனாக அடைந்ததாள். எனவே இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்ற பெயர் வந்தது. இந்திரன் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து விருத்திராசூரனை வெல்ல வச்சிராயுதம் பெற்றான். இதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்றும் பெயர் உண்டு. வட்டவடிவமான ஆவுடையார் மேல் லிங்க உருவில் எழுந்தருளியுள்ள இத்தல மூர்த்தியான சுவர்ணபுரீஸ்வரர் திருமாலால் பூஜிக்கப்பட்டவர்.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்

எப்படி செல்வது : மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் 11 கிமீ தொலைவில் உள்ளது.

எங்கே தங்குவது: மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில் 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.




No comments:

Post a Comment