Monday, March 4, 2019

கீழையூர்-கடைமுடிநாதர் கோயில்

தேவார பாடல் :
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர் 
விருத்தனை, பாலனை, வினவுதிரேல்,
ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன், வள நகர் கடைமுடியே.

வேதப் பொருளாய் விளங்குபவனும், அறவடிவினனும், அமுதம்போல இனியவனும், மூத்தவனும், இளையோனும், உலக மக்கள் பலராலும் இவ்வொருவனையன்றித் துணையில்லை என்று கருதி வழிபடும் முடிந்த பொருளாயுள்ளவனும், ஆகிய பெருமான் எவ்விடத்தான் என நீர் வினவுவீராயின் அவன் எழுந்தருளிய வளநகர் கடைமுடி என்னும் தலமாகும். சென்று வழிபடுவீராக என திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.

ஊர்: கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம், பழைய பெயர் திருக்கடைமுடி 

மூலவர்: கடைமுடிநாதர், அந்திசம்ரட்சணீசுவரர்

அம்பாள்: அபிராமவல்லி

ஸ்தல விருட்சம்:கிளுவை

தீர்த்தம்: கருணாதீர்த்தம்

வழிபட்டோர்கள் : பிரம்ம தேவர், கண்வ மகரிஷி

ஸ்தல வரலாறு : பிரம்மா இத்தலத்தின் இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு பிரம்ம தீர்த்தம் எனப் பெயரிட்டு அப்புனித நீரால் இறைவனை வழி பட்டுள்ளார். மகிழ்ந்த சிவன், அவருக்கு இங்கிருந்த கிளுவை மரத்தடியில் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். கண்வ மகரிஷியும் (சகுந்தலையின் வளர்ப்புத்தந்தை) இத்தல இறைவனை வழிபட்டு தன் புண்ணிய பலன்களைப் பெருக்கிக் கொண்டார்.

ஆலய சிறப்புகள்: இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தி.இங்கு காவிரி ஆறு உத்தரவாகினியாக வடக்கு நோக்கிப் பின்னர் மேற்காகச் செல்வது முக்கியமான ஒன்று. மேற்கு பார்த்த சிவத்தலங்கள் தமிழகத்தில் சில இடங்களிலேயே உள்ளன. அதில் இதுவும் ஒன்று. லிங்க மூர்த்தம் 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாக அமைந்துள்ளது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும்.

தரிசன பயன்கள்: அபிராமி அன்னையை அருகிலுள்ள கண்வமஹான் துறையில் நீராடி வெள்ளிக்ககிழமை தரிசனம் செய்து ஸெளபாக்கிய திரவியங்கள் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

எப்படி செல்வது : மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மேலப்பாதியைக் கடந்து பூம்புகாருக்கு முன்னால் உள்ள கீழையூரில் இத்தலம் அமைந்துள்ளது.  மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - பொறையார் சாலையிலுள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருசெம்பொனார்கோவிலில் (காவிரி தென்கரைத் தலம்) இருந்து திருநனிபள்ளி (புஞ்சை) வழியாகவும் இத்தலத்திற்கு செல்லலாம்.

எங்கே தங்குவது: மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில் 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை





No comments:

Post a Comment