Sunday, March 10, 2019

வடகுரங்காடுதுறை-தயாநிதீசுவரர் கோயில்

தேவார பாடல் :
கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் புன்னையே, கொகுடி,                                                           முல்லை,
வேங்கையே, ஞாழலே, விம்மு பாதிரிகளே, விரவி எங்கும்
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
வீங்கு நீர்ச் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே

கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும்
புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தைச் சிவபெருமான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளுபவர் என திருஞானசம்பந்தரால் பாடல்பெற்றது.

ஊர்: வடகுரங்காடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம், பழைய பெயர் திருவடகுரங்காடுதுறை.

மூலவர்: தயாநிதீஸ்வரர் (வாலி நாதர், சித்தலிங்கேஸ்வரர், குலை வணங்கி நாதர்

அம்பாள்: அழகு சடைமுடியம்மை (ஜடாமகுட நாயகி)

ஸ்தல விருட்சம்: தென்னை

தீர்த்தம்: 

வழிபட்டோர்கள் : வாலி, அனுமன்

ஸ்தல வரலாறு : இத்தலத்தில் இராமாயண வாலி இங்குவந்து தான் வலிமை பெற வேண்டினார். அதனால் இறைவன் வாலிநாதர் என்று அழைக்கப்படுகிறார்.வாலி வணங்கியமையால் வடகுரங்காடுதுறை என்றும், சுக்ரீவன் வழிபட்ட தலம் தென்குரங்காடுதுறை என்றும் அழைக்கப்படுகிறது. அனுமனும் இத்தலத்தில் பூசை செய்துள்ளார்.

ஆலய சிறப்புகள்: நல்ல வெய்யில் காலத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒருமுறை நடந்து வந்து கொண்டிருந்தாள். வெய்யிற் காலமானதால் தாகம் தாங்க முடியவில்லை. தாகமும், களைப்பும் மேலிட அவள் மயக்கமுற்றாள். இதலத்தில் கோவில் கொண்டுள்ள ஈசன் இதை அறிந்தார். தாயுமானவராக திருச்சிராப்பள்ளியில் ஒரு பக்தைக்கு அருள் செய்த இறைவன் இங்கு அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். இறைவனருளால் அப்பெண் தாகம் நீங்கி புத்துணர்வு அடைந்தாள். தென்னங்குலைகளை வளைத்து அருள் புரிந்ததால் இறைவன் குலைவணங்குநாதர் என்று பெயர் பெற்றார்.

வடக்கு கோஷ்டத்தில் காணப்படும் விஷ்னு துர்க்கை மிகவும் சக்தி உடைய தெய்வம். எட்டு கைகளுடன் காணப்படும் துர்க்கைக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீலநிறமாக மாறிவிடுவது சிறப்பாகும்

தரிசன பயன்கள்: இத்தலத்தில் துர்க்கைக்கு ராகுகாலபூஜை செய்யும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிப் பெண்கள் இத்தல இறைவனை வணங்கி வந்தால் எவ்வித தொல்லையும் இன்றி சுகப்பிரசவம் நடக்கும்.

எப்படி செல்வது : கும்பகோணம் - திருவையாறு சாலையில் சென்றால் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டிய பின்னர், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அதற்கடுத்து உள்ளது ஆடுதுறை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது.

எங்கே தங்குவது: கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர்.

தரிசன நேரம் : காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை


No comments:

Post a Comment