Tuesday, November 13, 2018

திருவட்டத்துறை- தீர்த்தபுரீசுவரர்- ஞானசம்பந்தர் முத்துசிவிகை பெற்ற கோயில்

தேவார பாடல் :
புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய 
மடையின் ஆர் மணிநீர் நெல்வாயிலார், 
நடையின் நால்விரல்கோவணம் நயந்த 
உடையினார், எமது உச்சியாரே.

வயற்பக்கங்களில் நண்டுகளை உடையதும்,
வாய்க்கால்களை அடுத்துள்ள நீர்மடையில் நீலமணி போன்று
தெளிந்த நீரை உடையதுமான நெல்வாயில் இறைவர்
ஒழுக்கத்திற்குக்காட்டாக   நால்விரல் அளவுள்ள கோவண
ஆடையை உடையவர். அவர் எம் முடிமேல் திகழும்

மாண்பினர் என ஞானசம்பந்தரால் பாட பெற்றது. இக் கோவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல்பெற்றது. மேலும் இத்தலம் நடுநாட்டுத்தலங்களில் முதல் தலமாகும்.

ஊர்: திருவட்டத்துறை (திருவட்டுறை எனவும் வழங்கப்படுகிறது ). விருத்தாசலம் அருகில் உள்ளது.பழைய பெயர் திருநெல்வாயில் அறதுறை.

மூலவர்: தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்

அம்பாள்: ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி

ஸ்தல விருட்சம்:ஆலமரம்

தீர்த்தம்: வடவெள்ளாறு

வழிபட்டோர்கள் : மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள்

ஸ்தல வரலாறு : 
திருஞானசம்பந்தருக்கு அரத்துறைநாதர் முத்துச் சிவிகையும், முத்துக்குடையும், முத்துச் சின்னங்களையும் வழங்கி அருளிய தலம் இதுவாகும். சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து திருக்கோயில் செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருநெல்வாயில் அரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் சம்பந்தர் தங்கினார். அன்றிரவு திருநெல்வாயிலிலுள்ள அடியார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி சம்பந்தர் கால்கள் நோகாமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும் அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதே போன்று சம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விபரங்களைக் கூறி முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டர். மறுநாள் காலை திருநெல்வாயில் அரத்துறை அடியார்கள், கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு மாறன்பாடி சென்று சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து, முத்துக்குடை நிழலில் அரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர். சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடி வணங்கினார்.

ஆலய சிறப்புகள்: இறைவன் சுயம்பு மூர்த்தி, அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார.வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது அதனால் சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்க்க வெள்ளம் வடிந்தது என்றும், இதனால் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தரிசன பயன்கள்: 
செவ்வாயும், சனியும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டதால், சனி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதிகம். இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்திற்குரிய மரமாகும், ஆகவே மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.


எப்படி செல்வது : விருதாச்சலத்திலிருந்து தென்மேற்கு திசையில் சுமார் 25 கிமீ தொலைவில் கொடிகளம் என்னும் ஊர் அருகே உள்ளது.கொடிகளத்திலிருந்து உள்ளே சுமார் 1 கிமீ செல்லவேண்டும். குறுகிய சாலை ஒரு கார் மட்டுமே போகலாம். அனால் இருபுறமும் வயல்கள் நிறைந்த அழகான வழி. பகல் பொழுதில் செல்வது உகந்தது.

எங்கே தங்குவது: விருத்தாசலம் 

தரிசன நேரம் :. தினந்தோறும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்







No comments:

Post a Comment