Wednesday, November 7, 2018

பாடி - வலிதாய நாதர் கோயில்

தேவார பாடல் :
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி,
ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னி
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம்,
சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே.

வலிதாயம் சித்தம் வைத்த அடியார்களை இடர் நோய் அடையா என வினை முடிபு கொள்க. சிவனடியார்கள், விளங்குகின்ற அழகிய மலர்களை அகங் கையில் ஏந்தி மந்திரத்தோடு நீர் வார்த்துப் பூசிக்க அவர்களோடு ஒரே இசையில் அம்மந்திரங்களைச் சொல்லி உலக மக்கள் தாமும் வெளிநின்று தொழுதேத்துமாறு ஊமத்தை மலரை முடிமிசைச் சூடிய பெருமான் பிரியாதுறையும் வலிதாயம் என்ற தலத்தைத் தம் சித்தத்தில் வைத்துள்ள அடியவர்கள் மேல் துன்பங்களோ நோய்களோ வந்தடைய மாட்டா என திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.

ஊர்: பாடி , சென்னை (லூகாஸ் டிவிஎஸ் அருகில்). பழைய பெயர் - திருவலிதாயம்

மூலவர்: வலிதாய நாதர், வல்லீஸ்வரர்

அம்பாள்: ஜகதாம்பாள், தாயம்மை

ஸ்தல விருட்சம்: பாதிரி, கொன்றை

தீர்த்தம்: பாரத்வாஜ தீர்த்தம்

வழிபட்டோர்கள் : பாரத்வாஜ மஹரிஷி, ராமர், அனுமன், சூரியன், சந்திரன்

ஸ்தல வரலாறு : 
ஒரு சமயம் பாரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி ஆனார். அவர் திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார். நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறு அவரால் உருவாக்கப்பட்ட பாரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பாரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால் இத்தலம் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாக விளங்குகிறது.

ஆலய சிறப்புகள்: குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. குரு பகவான் தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தே சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு.ஆலங்குடி குரு கோயிலுக்கு இணையான ஸ்தலமாக போற்றப்படுகிறது.திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

தரிசன பயன்கள்: குரு பரிகார ஸ்தலம்விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்து கொண்டு கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்கள். இதனால், நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை

எப்படி செல்வது : சென்னை அண்ணாநகரில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. சென்னை-திருவள்ளூர் சாலையில் லூகாஸ் டிவிஎஸ் கம்பெனி எதிரில் உள்ள தெருவில் சென்றால் கோயிலை அடையலாம்.

எங்கே தங்குவது: சென்னை அண்ணாநகர் 

தரிசன நேரம் :
காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரை




No comments:

Post a Comment