Thursday, November 1, 2018

திருவதிகை ( பண்ருட்டி) - வீரட்டேஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

திருக்கெடிலம் என்னும் ஆற்றிற்கு வடபால் விளங்கும் திருவதிகையில் உள்ள திருவீரட்டானம் எனப் பெயரிய மாநகராகிய திருக்கோயிலுள் எழுந்தருளிய சிவபெருமானே, அடியேனுக்கு மருளும் பிணி மாயை ஒரு கூற்று ஆயினவாறு வந்து வருத்தும் சூலை நோயை விலக்கமாட்டீர். (இந்நோயை அடைதற்கு அடியாகக்)கொடுமை பல செய்தன (உளவோ எனின், அவற்றை) நான் அறியேன். விடையானே. இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாமல் (நின்) அடி (மலர்)க்கே வணங்குவன். இந்நோய் என் வயிற்றின் உள்ளே அடியில் பற்றித் தன்னைத் தோற்றாமல் குடரொடு துடக்குண்டு என்னை முடக்கியிடலால், அடியேன் ஆற்றாமல் வருந்துகின்றேன். இவ்வருத்தம் அகற்றி அடியேனை ஆட்கொண்டருள்வாய் என அப்பரால் பாட பெற்றது.

அப்பர் மொத்தம் 16 பதிகம் பாடியுள்ளார். இது தவிர, சுந்தரரும், ஞானசம்பந்தரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.

ஊர்: திருவதிகை,பண்ருட்டி அருகில். பழைய பெயர் - அதிகாபுரி, திருஅதிகை வீரட்டானம்

மூலவர்: அதிகை வீரட்டேஸ்வரர்

அம்பாள்: திரிபுர சுந்தரி

ஸ்தல விருட்சம்: சரங்கொன்றை

தீர்த்தம்: சூலத்தீர்த்தம்

வழிபட்டோர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர்.

ஸ்தல வரலாறு : சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவர். இவர்கள் பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “”நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள். வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள். வானவர்களைக் கடுந்துயருக்கு ஆளாக்கிய இம்மூவரையும் யாராலும் வெல்ல முடியவில்லை. மேலும் அவர்கள் சிவ பக்தர்களாகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களை சிவபெருமான் மட்டுமே அழிக்க முடியும் என்று கருதிய தேவர்கள், பிரம்மனுடனும், திருமாலுடனும் சென்று சிவபெருமானை வேண்டினர். உடனே இறைவன் இட்ட ஆணைப்படி தேவதச்சன் விஸ்வகர்மா, ரதம் ஒன்றை தயாரிக்க, வில் அம்பு சகிதமாக (மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்ததாம்) நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கி, பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான். “தேவர்களையும் காக்க வேண்டும், சிறந்த சிவ பக்தர்களாகிய அந்த அரக்கர்களையும் வதம் செய்யக் கூடாது’ என்று கருணை கொண்ட இறைவன், வில்லை வளைக்காமல், நாணைப் பூட்டாமல் அண்ட சராசரங்கள் நடுங்கும் வண்ணம் ஒரு புன்னகை செய்தார். அப்போது தோன்றிய அக்னியினால் முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. தன்னைப் பூஜித்து வந்த அந்த மூவரில் இருவரை தன் வாயில் காப்போராகவும், ஒருவரை குடமுழா முழுக்குபவராகவும் தமது அருகில் இருக்கும்படி ஆணையிட்டார் அந்த திரிபுராந்தக மூர்த்தி.

ஆலய சிறப்புகள்: சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.இவர் முதன்முதலில் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்த தலம். ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம். அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம்.திலகவதியார் தன் தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் "சூலை தந்து ஆட்கொள்வோம்" என்று பதிலுறைத்த பதி.

சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூர்) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, "ஆற்றேன் அடியேன்" என்று "கூற்றாயினவாறு" பதிகம் பாடிச் சூலை நீங்கப்பெற்ற அற்புதத்தலம்.

இக்கோயிலில் உள்ள முருகபெருமானை திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியுள்ளார். மிக பிரமாண்டமான அழகிய சிற்பங்கள் கொண்ட அற்புதமான கோயில்.

தரிசன பயன்கள்: வயிற்று வலி (அல்சர்) உபாதைகள் சூலைத் தீர்த்தம் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும்.எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும்.

எப்படி செல்வது : 
கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருவதிகை கோவில் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. சென்றால் அதிகை வீரட்டேஸ்வரர் கோவிலை அடையலாம். பண்ருட்டிக்கு அருகில் சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய ஊர்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது.

எங்கே தங்குவது: கடலூர்  

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.





No comments:

Post a Comment