Friday, November 16, 2018

காஞ்சிபுரம் - ஏகாம்பரேஸ்வரர் கோவில் - பஞ்ச பூத ஸ்தலம் (பூமி)

தேவார பாடல் :
கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை; கரவார்பால்
விரவாடும் பெருமானை; விடை ஏறும் வித்தகனை;
அரவு ஆட, சடை தாழ, அங்கையினில் அனல் ஏந்தி,
இரவு ஆடும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!

பெருமானை மறைத்தலும் மறத்தலும் செய்து உலகப் பொருள்களில் திளைக்கும் வலிய நெஞ்சினை உடையவர்கள் உணர்தற்கு அரியவனாய், வஞ்சனையில்லாத அடியவர் உள்ளத்தில் கலந்து கூத்து நிகழ்த்தும் பெருமானாய், காளையை இவரும் திறனுடையவனாய், பாம்புகள் படமெடுத்து ஆடவும் சடை தொங்கவும், உள்ளங்கையில் தீயினை ஏந்தி இரவினில் கூத்தாடும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் என அப்பரால் பாட பெற்ற திருக்கோயில்.

அப்பர் மொத்தம் 7 பதிகமும், ஞானசம்பந்தர் 4 பதிகமும் மற்றும் சுந்தரர் 1 பதிகமும் இயற்றியுள்ளனர்.

ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம்

மூலவர்: ஏகாம்பரேஸ்வரர்,ஏகாம்பரநாதர், திருவேகம்பர்

அம்பாள்: ஏலவார்குழலி

ஸ்தல விருட்சம்: மாமரம்

தீர்த்தம்: சிவகங்கை(குளம்), கம்பாநதி

வழிபட்டோர்கள் : பிரம்மா, விஷ்ணு, உருத்திரர், விஸ்வாமித்திரர்

ஸ்தல வரலாறு :  பார்வதி தேவி சிவனை வேண்டி தவம் செய்து சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். இறைவனின் கண்களை  பார்வதி தேவி ஒரு முறை தற்செயலாக மூடியதால் உலகில் இருள் சூழந்து ஜீவராசிகள் வாடியது. இதற்கு பிராயச்சித்தமாக  இறைவன் பார்வதி தேவியை பூலோகத்தில் பிறந்து தன்னை நோக்கி தவம் செய்யுமாறு பணித்தார். அவரும் இங்கு வந்து புனித தலமான இந்த காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கிப் பூஜித்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி அம்பிகை லிங்கத்தை தழுவி கட்டிக்கொண்டார். அவ்வாறு உமையம்மை தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார்.

சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள் புரிந்தார். அம்பிகையை அங்கேயே திருமணம் புரிந்து கொண்ட சிவபெருமான் அம்பிகைக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தார். இரண்டு நாழி நெல் கொடுத்து அதைக் கொண்டு 32 அறங்களைச் செய்யப் பணித்தார். அவ்வாறே அம்பிகை பார்வதியும் காமாட்சி என்ற பெயரில் காமக் கோட்டத்தில் அமர்ந்து அறங்களைச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஆலய சிறப்புகள்: பஞ்ச பூத ஸ்தலங்களில் பூமியை குறிப்பதாகும். இங்கு பிருத்வி லிங்கமாக சிவபெருமான் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். மூல லிங்கம் மணலால் ஆனதால் இதற்கு அபிஷேகங்கள் செய்வது கிடையது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும். இந்த ஆலயம் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

விஸ்வாமித்திரர் காயத்ரி மந்திரத்தை இயற்றி உலகிற்கு அளித்த கோயில். சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தடியில் "உன்னைப் பிரியேன்" என்று சத்தியம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். சிவபெருமானை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டு பின் திருவாரூர் செல்வதற்காக சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து திருவொற்றியூரில் இருந்து சத்தியத்தை மீறி புறப்பட்டதால் சுந்தரர் தனது இரு கண் பார்வையும் இழந்தார். அப்படி பார்வை இழந்த கண்களில் இடக்கண் பார்வையை சுந்தரர் காஞ்சீபுரம் தலத்தில் பதிகம் பாடி பெற்றார்.108 வைணவ திவ்யதேசங்களில் காஞ்சீபரத்தில் மட்டுமே 15 திவயதேசங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றான நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி இந்த ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ளது.

ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், அப்பர் பல்லவ பேரரசர் மகேந்திர வர்மன் காலத்தில் வாழ்ந்தபோது இக்கோயிலின் அருகில் தன்னுடைய மடத்தை நிறுவி சிவத்தொண்டு செய்ததாக அறியப்படுகிறது.

தரிசன பயன்கள்: அற்புதமான திருக்கோயில், வேண்டிய பலன் கிடைக்கும். குறிப்பாக கணவன் மனைவி உறவு பலப்படும்.

எப்படி செல்வது : காஞ்சிபுரம் சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவில் உள்ளது. பேருந்து மற்றும் ரயில் மூலம் செல்லலாம். காரில் செல்வதென்றால் பெங்களூரு நெடுஞசாலை அல்லது வாலாஜாபாத் நெடுஞசாலை வழியாக செல்லலாம்.

எங்கே தங்குவது: காஞ்சிபுரம் 

தரிசன நேரம் :. 6 மணி முதல் பகல் 12-30 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

No comments:

Post a Comment