Sunday, November 25, 2018

பெண்ணாகடம் பிரளயகாலேசுவரர் கோயில்

தேவார பாடல் :
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய
                                                             வாழ்க்கை ஒழியத் தவம்
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம், அடிகள் அடி நிழல்
                                                             கீழ் ஆள் ஆம் வண்ணம்,
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள் தோறும்
                                                             மறையின் ஒலி
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம்
                                                             தொழுமின்களே!

வெளிப்படுதற்குரிய காலம் வருந்துணையும் ஒடுங்கியிருக்கும் நோய் இனிவரும் பிறப்புகள், துன்பங்கள் ஆகியனவாய இவைகளை உடைய இவ்வாழ்க்கை நீங்கத்தவம் புரிதற்குரிய இடத்தை விரும்பி நிற்கும் நீவிர் எல்லீரும் அகழும் மதிலும் சூழ்ந்து எல்லா இடங்களிலும் உள்ள வீடுகள் தோறும் வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானின் அடிநிழலின்கீழ் அவருக்கு ஆளாகுமாறு அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக என ஞானசம்பந்தரால் பாடப்பெற்றது. அப்பரும் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

ஊர்: பெண்ணாகடம், தேவார பெயர் - தூங்கானை  மாடம்

மூலவர்: பிரளயகாலேஸ்வரர், சுடர்க்கொழுந்துநாதர்

அம்பாள்: ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி

ஸ்தல விருட்சம்: செண்பகம்

தீர்த்தம்: கயிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு

வழிபட்டோர்கள் : காமதேனு, ஐராவதம்

ஸ்தல வரலாறு : 
 தேவலோக பெண்கள், காமதேனு மற்றும் இந்திரனின் ஐராவதம் என்னும் யானை ஆகியோர் வந்து வழிபட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. பெண் + ஆ (காமதேனு) + கடம் (யானை) என்பதே பெண்ணாடகம் என்று வழங்கப்படுகிறது.

ஒரு பிரளய காலத்தில் இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கின. இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது

ஆலய சிறப்புகள்: மூலவரின் விமானம் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. யானையின் கால் வடிவத்தில் கஜப்பிரஷ்ட விமானம், ஐராவத யானை எப்போதும் இறைவனை வணங்குவதாக உள்ளது. இதனால் தூங்கானை மாடம் என பெயர் பெற்றது. மேலும் மூலவரை கருவறை வெளியே உள்ப்ரகாரத்தில் மற்ற மூன்று திசையிலும் காண ஏதுவாக சாளரம் உள்ளது. வேறு எங்கும் காண முடியாத தனி சிறப்பாகும்.

சோழமன்னன் ஒருவன் இத்தலம் வரும் போது வெள்ளாற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி மன்னன் சிவனை வேண்டிய போது, அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார். இப்போதும், 30 மீட்டர் உயரத்தில் உள்ள கட்டு மலைக்கோயில் என்ற மேட்டுப்பகுதியில் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி கோயிலுக்குள் உள்ளது. இது தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில். ஏறுதற்குப் படிகள் உள்ளன. கட்டுமலைக் கோயிலின் கீழ்ப்பகுதியில் பிரளயகாலேஸ்வரி அம்மனுக்கு சிலையுள்ளது.

மெய்கண்டார் மற்றும் 63 நாயன்மார்களில் ஒருவரான  கலிக்கம்பநாயனார் அவதரித்த தலம், திருநாவுக்கரசர் தமது திருமேனியில் திரிசூலக் குறியும் இடப முத்திரையும் பெற்ற தலமிது.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்.

எப்படி செல்வது : 
விருத்தாசலம் டவுனில்  இருந்து தென்மேற்கே 18 கி.மி. தொலைவில் பெண்ணாடம் இருக்கிறது. விருதாச்சலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் பேருந்தில் இந்த ஊர் செல்லலாம்.

எங்கே தங்குவது: விருத்தாசலம் 

தரிசன நேரம் :.தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்











2 comments: