Wednesday, November 28, 2018

திருப்பாம்புரம்-சேஷபுரீஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய் செல்வர்,
வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர்,
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல்,விண்ணவர் ஏத்தும்
பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே.

விண்ணவர் போற்றும் திருப்பாம்புர நன்னகர் இறைவர் சிறந்த அணிகலன்கள் விளங்கும் அழகிய மார்பில் முப்புரி நூல் அணிந்தவர். திரிபுரங்களை எரித்த வீரச் செல்வர். கச்சணிந்த அழகிய தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்திய நீலமணிபோலும் திகழ்கின்ற கண்டத்தையுடைய தலைவர். உலகில் அழகிய புகழோடு விளங்கும் மறைகளை அருளியவர். நெற்றிக்கண்ணர் என திருஞானசம்பந்தர் இறைவனை போற்றுகிறார்.

ஊர்: திருப்பாம்புரம், திருவாரூர் மாவட்டம்

மூலவர்: சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர்

அம்பாள்: பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி(வண்டார் குழலி)

ஸ்தல விருட்சம்: வன்னி

தீர்த்தம்: ஆதிசேஷ தீர்த்தம்

வழிபட்டோர்கள் : ஆதிசேஷன் மற்றும் அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன்,சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள்.

ஸ்தல வரலாறு : 
ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நானகாம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

ஆலய சிறப்புகள்: 
ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் எட்டடி நீளம் கொண்ட ஒரு  நல்ல பாம்பு மூலவர் சன்னதியில் லிங்க திருமேனிமேல் தன்னுடைய சட்டையை உரித்து மாலையாக அணிவித்து சென்றுக்கிருக்கிறது. அவ்வாறு இருக்கும் காட்சியை புகைப்படமாக மூலவர் சன்னதியில் காணலாம். மேலும் அந்த பாம்பின் சட்டையை போட்டோ பிரேம்  செய்துள்ளனர்.

திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் கோயில் வழிபட்டால் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தரிசன பயன்கள்: ராகு -கேது தோஷம்,களத்திர தோஷம், ஜாகத்தில் கால சர்ப்பதோஷம், 18 வருட ராகு தசா நடந்தால், கேது 7 வருட தசா நடந்தால், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்..

எப்படி செல்வது : கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரம் கடந்து மாந்தை என்னும் ஊர் வந்தபின் வலது புறம் திரும்பி 4 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து 30 கிமீ. மயிலாடுதுறையில் இருந்து வருவதென்றால் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் கொல்லுமாங்குடி என்னும் ஊர் அருகே வலதுபுறம் திரும்பி மாந்தை சென்று கோயிலை அடையலாம். இது 24 கிமீ தூரம் ஆகும். சிறுகுடி என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து கிழக்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது. பேரளத்தில் இருந்தும் திருபாம்புரம் வரலாம்.

எங்கே தங்குவது: கும்பகோணம் அல்லது மயிலாடுதுறை.

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை








No comments:

Post a Comment