Saturday, December 29, 2018

திருவாய்மூர்- வாய்மூர்நாதர் கோயில்

தேவார பாடல் :
எங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண்டு
அங்கே வந்தடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனர தென்கொலோ.

தென்னனகள் நன்கு தோன்றுகின்ற திருவாய்மூரில் எழுந்தருளியுள்ள அருட்செல்வராகிய இறைவர். என்னை எங்கே என்று தேடி, இருந்த இடத்தைக் கண்டுகொண்டு அங்கே வந்து அடையாளம் அருளியவர், திருவாய்மூர்க்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்னை கொல்? என அப்பர் பாடியுள்ளார். அப்பர் 2 பதிகங்களும் திருஞானசம்பந்தர் 1 பதிகமும் பாடியுள்ளனர்.

ஊர்: திருவாய்மூர், நாகப்பட்டினம் மாவட்டம்

மூலவர்: வாய்மூர்நாதர்

அம்பாள்: பாலின் நன்மொழியாள்,க்ஷீரோப வசனி

ஸ்தல விருட்சம்: பலா

தீர்த்தம்: சூரிய தீர்த்தம்

வழிபட்டோர்கள் : 

ஸ்தல வரலாறு : இந்திரன் மகன் ஜெயந்தன் பைரவர் அருளால் சாப விமோசனம் பெற்ற திருத்தலம்.

ஆலய சிறப்புகள்: இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன, 8 பைரவர் மூர்த்திகள் இருந்ததாகக் கூறப்படுகிறது . ஆனால் இப்போது நான்குதான் தான் இருக்கின்றன.

திருநாவுக்கரசர் மறைக்காட்டில் ஆலயக் கதவினை திறக்க பதிகம் பாடிய பிறகு அன்றிரவு அங்கு தங்கினார். அப்போது தான் 10 பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய பிறகு கதவு திறந்ததையும் ஆனால் சம்பந்தர் பதிகத்தின் முதல் பாடலிலேயே கதவு மூடியதையும் நினைத்து சற்று மனக்கலக்கத்துடன் இருந்தார். அவர் உறங்கும் போது இறைவன் அவர் கனவில் தோன்றி அசரீரியாக நான் திருவாய்மூரில் கோவில் கொண்டுள்ளேன் இங்கு வருவாய் என்று கூறி அருளினார். அப்பர் விழித்தெழுந்து கனவில் தோன்றிய உருவம் வழிகாட்ட பின்சென்று திருவாய்மூர் அடைந்து இறைவனைப் பதிகம் பாடித் துதித்தார்.

தரிசன பயன்கள்: பைரவர் அருளால் திருமண தடை நீங்கும், வறுமை நீங்கி செல்வவளம் பெறலாம்.

எப்படி செல்வது : வேளாங்கன்னி -திருத்துறைப்பூண்டி சாலையில் 20 கிமீ தொலைவில் உள்ளது. சீராவட்டம் பேருந்து நிறுத்தத்தில் வலது புறம் 1.5 கிமீ செல்லவேண்டும். நாகபட்டினத்திலுருந்து 30 கிமீ

எங்கே தங்குவது: வேளாங்கன்னி  அல்லது நாகப்பட்டினம் 

தரிசன நேரம் :.காலை 7-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.



Wednesday, December 26, 2018

திருவிளநகர் - உச்சிரவனேஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், கோவண 
                                                      ஆடையர்,
குளிர் இள(ம்) மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு 
                                                        காவிரி 
நளிர் இளம்புனல் வார் துறை நங்கை கங்கையை 
                                                     நண்ணினார், 
மிளிர் இளம் பொறி அரவினார், மேயது விளநகர் அதே.

விளங்குகின்ற இளம்பிறை சென்னிமேல்
உடையவர். கோவண ஆடை உடுத்தவர். கங்கை நங்கையை
விரும்பியவர். ஒளியும் புள்ளிகளும் பொருந்திய இளநாகம்
அணிந்தவர். அவ்விறைவர் விரும்பி உறையும் தலம், தண்ணிய மழை  பொழியத்தக்க மேகங்கள் தவழும் பொழில்களைக் கொண்டதும், அழகிய நீர் நிறைந்ததும் குளிர்ந்த புதிய புனலைக் கொண்டு நீண்ட துறையுடன் விளங்குவதுமான விளநகராகும் என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்

ஊர்: திருவிளநகர்,மயிலாடுதுறை மாவட்டம்.

மூலவர்: துறைகாட்டும் வள்ளல், உச்சிவனேஸ்வரர், உசிரவனேசுவரர்

அம்பாள்: வேயுறுதோளியம்மை

ஸ்தல விருட்சம்:விழல்

தீர்த்தம்: காவிரி, மெய்ஞ் ஞான தீர்த்தம்

வழிபட்டோர்கள் : 

ஸ்தல வரலாறு : 
முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்னும் அந்தணன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். நாள் தோறும் இறைவனுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் தொண்டினைச் செய்து வந்தான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் இவன் பூக்கூடையுடன் ஆற்றைக்கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். இதனால் கலங்கிய இவன் தன்னைப்பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையை காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான். தலையளவு வெள்ளம் வந்துவிட்ட போதிலும் தன் கைகளால் பூக்கூடையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு தன் உயிரைப் பற்றி கவலைப் படாமல் இறைவனுக்கு செய்யும் கொண்டில் பங்கம் வந்துவிடக் கூடாதே என்ற் கவலைப்பட்டான். அவனுடைய உறுதியையும், அன்பையும் கண்ட இறைவன் அவனுக்கு அருள் சொரிந்து ஆற்றின் துறையைக் காட்டி அவனைக் கரையேறச் செய்தார். இதனால் இறைவன் "துறை காட்டும் வள்ளல்" ஆனார்.

ஆலய சிறப்புகள்: 
சம்பந்தர் ஒருமுறை இத்தலத்திற்கு விஜயம் செய்ய வந்தபோது காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்து கரையிலேயே நின்று பரிதவித்தார். துறை காட்டுபவர் யாரேனும் உள்ளார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்த இவரை வேடன் ஒருவன் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லி ஆற்றில் இறங்கினான். சம்பந்தரும் அவனைப் பின்தொடர்ந்து ஆற்றில் இறங்க வெள்ளம் பிரிந்து அவர்களுக்கு வழி விட்டது. மறுகரை சேர்ந்த சம்பந்தர் நன்றி சொல்ல வேடனைத் தேட அவன் மாயமாய் மறைந்து விட்டதைக் கண்டார். இறைவனே வேடனாய் வந்து துறை காட்டியதால் அவர் துறை காட்டும் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார்

தரிசன பயன்கள்: துறைகாட்டும் வள்ளல் அருள் நமக்கிருந்தால் பிறவிப் பெருங்கடலைச் சுலபமாகக் கடக்கலாம். வினை பயன்கள் விலகும்.

எப்படி செல்வது : மயிலாடுதுறையிலிருந்து சுமார் 10 கிமீ கிழக்கு திசையில் உள்ளது. மயிலாடுதுறை-அக்கூர் சாலையில் உள்ளது.

எங்கே தங்குவது: மயிலாடுதுறை 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை




Sunday, December 23, 2018

காஞ்சிபுரம் - கச்சிஅனேகதங்காவதேசுவரர் கோயில்

தேவார பாடல் :
தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு
மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை எரித்தெரி யாடி இடம்குல
வான திடங்குறை யாமறையா
மானை இடத்ததொர் கையன் இடம்மத
மாறு படப்பொழி யும்மலைபோல்
ஆனை யுரித்த பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே

தேனாகிய நெய்யை விரும்பி உழல்கின்ற சிவந்த சடையை யுடைய எம்பெருமானும், அழகு விளங்கும், ஐங்கணையை உடைய அத்தலைவனாகிய மன்மதனை எரித்தவனும், தீயில் நின்று ஆடுபவனும், மேலானவனும், மிக்க புள்ளிகள் பொருந்திய மானை இடப்பக்கத்திலுள்ள ஒரு கையில் தாங்கினவனும், மும்மதங்களும் ஒன்றினொன்று முற்பட்டுப் பாய்கின்ற மலைபோலும் யானையை உரித்த பெரியோனும் ஆகிய இறைவன் விரும்பி உறையும் இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள, ‘திருவனேகதங்காவதம்’ என்னும் திருக்கோயிலே என சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலம்.

ஊர்: காஞ்சிபுரம்

மூலவர்: அநேகதங்காபதேஸ்வரர்

அம்பாள்: காமாட்சி அம்மன்

ஸ்தல விருட்சம்:

தீர்த்தம்: 

வழிபட்டோர்கள் : விநாயகர்,குபேரன் 

ஸ்தல வரலாறு : யானை (அனேகதம்) முகத்தையுடைய விநாயகர் சிவலிங்கத் திருமேனியை நிறுவி வழிபட்ட தலம் ஆதலால் இது அநேகதங்காபதம் என்று பெயர் பெற்றது.அநேகதங்காபதேஸ்வரர் இரணியபுர அசுரரான கேசியை அழித்து கேசியின் மகளான சிவபக்தை வல்லபையை விநாயகருக்கு மணம் முடிக்க வரம் தநத சிறந்த தலமாகும்.

அநேகதங்காபதம் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்வார் - கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம்.காஞ்சி புரத்திலுள்ள இத்தலம். வடநாட்டில் உள்ள அநேகதங்காபதம் சிவஸ்தலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட இத்தலம் கச்சி அநேகதங்காபதம் என்ற பெயரால் வழங்குகிறது.

ஆலய சிறப்புகள்: குபேரன் வழிபட்ட பெருமையுடையது இத்தலம். பெரிய லிங்க திருமேனி.

தரிசன பயன்கள்: கொடிய துன்பமாகிய பிறவித்துயர் தீர்ந்து இறைவன் உறையும் திருக்கயிலாயத்தை அடைந்து அங்கு தங்கும் பேற்றினைப் பெறுவர் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.

இத்தலத்தில் உள்ள விநாயகரை வழிபட்டால் கல்வி மேன்மை பெறும். மாணவர்கள் கோயில் பிராகாரத்தில் அமர்ந்து படிப்பதை காணலாம்.

எப்படி செல்வது : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலிருந்து 1.5 கிமீ  தொலைவில் கைலாசநாதர் கோயில் அருகில் உள்ளது.

எங்கே தங்குவது: 
காஞ்சிபுரம்

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் 10:30 வரை;மாலை 5:30 முதல் 7:30 மணி வரை.






Thursday, December 20, 2018

அழகாபுத்தூர்-படிக்காசுநாதர் கோயில்-தினம் ஒரு பொற்காசு அருளிய ஈசன்

தேவார பாடல் :
ழுமுத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப் 
புத்தூரன்(ன்) அடி போற்றி!ழு என்பார் எலாம் 
மொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய 
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே.

மொய்க்கின்ற முத்துக்கள் ஊர்ந்து வரும் தண்ணீரை உடைய அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறையும் பெருமான் "திருவடி போற்றி" என்று கூறுவோரெல்லாம், பொய்யுடையதாகி ஊர்கின்ற ஐந்து புலன்களோடு, பொருந்திய வன்மை உடையதாய் ஊர்கின்ற வினைகளையும் மாற்றும் வல்லமை உடையவர்கள் என அப்பர் பாடியுள்ளார். திருஞானசம்பந்தரும், சுந்தரரும் தலா ஒரு பதிகம் இயற்றியுள்ளனர்.

ஊர்: அழகாபுத்தூர்,தஞ்சாவூர் மாவட்டம். பழைய பெயர் அரிசிற்கரைப்புத்தூர்,செருவிலிபுத்தூர்

மூலவர்: சொர்ணபுரீசுவரர், படிக்காசு அளித்த நாதர்

அம்பாள்: அழகாம்பிகை, சௌந்தர நாயகி

ஸ்தல விருட்சம்:வில்வம்

தீர்த்தம்: அரிசிலாறு, அமிர்தபுஷ்கரிணி

வழிபட்டோர்கள் : புகழ்த்துணை நாயனார் 

ஸ்தல வரலாறு : 
புகழ்த்துணை நாயனார் சொர்ணபுரீஸ்வரருக்கு அரிசிலாற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து சிவாகம முறைப்படி தினந்தோறும் பூஜைகள் செய்து வந்தார். அவருடைய முதுமை பருவத்தில் ஊரில் பஞ்சம் வந்ததால் வறுமையில் வாடினார். அப்படியும் அவர் தன் கடமையிலிருந்து தவரவில்லை. பசியால் வாடி உயிரிழக்க நேர்ந்தாலும் ஆலயப்பணியை துறக்கும் எண்ணம் அவர் மனதில் எழவில்லை. ஒரு நாள் அரிசிலாற்றிற்குச் சென்று குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு இறைவன் சந்நிதிக்கு வந்தார். பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாட, கைகள் நடுங்க குடத்தைத் தூக்கி அபிஷேகம் செய்யச் சென்றார். குடம் தவறி இறைவனின் திருமுடி மீது விழுந்தது. சிவலிங்கத்தின் மீது விழுந்த குடத்தால் சிவபெருமானின் தலையிலேயே அடிபட்டு விட்டதாக எண்ணி புகழ்த்துணை நாயனார் மூர்ச்சித்து விழுந்தார். மூர்ச்சித்து விழுந்த அவர் கனவில் இறைவன் தோன்றி, "பஞ்சம் தீரும் வரை தினமும் உனக்கு பொற்காசு தருகிறேன், அதனார் உன் துனபங்கள் தீரும்" என்று அருளி மறைந்தார். விழித்தெழுந்த புகழ்த்துணை நாயனார் சுவாமிக்கு அருகிலுள்ள பீடத்தில் பொற்காசு இருக்கக் கண்டார். அதே இடத்தில் தினமும் அவருக்கு ஒரு பொற்காசு கிடைத்தது. அதைக் கொண்டு வறுமையை விரட்டி, இறைவனுக்கு மேலும் சிறந்த தொண்டு செய்து இறுதியில் இறைவன் திருவடியில் ஐக்கியமானார். இதனால் இறைவனுக்கு "படிக்காசு அளித்த நாதர்" என்ற பெயரும் ஏற்பட்டது.

ஆலய சிறப்புகள்: 
ஆறுமுகர் பன்னிருகரங்களுடன் மயில்வாகனராக விளங்குகிறார். இவருடைய வடிவில் வலப்பாலுள்ள ஆறுகரங்களுள் முதல் கரம் சக்கரமும், இடப்பாலுள்ள ஆறுகரங்களுள் முதலாவது கரம் சங்கும் ஏந்தியிருப்பது விசேஷம். இம்மாதிரி அமைப்புள்ள ஆறுமுகர் சந்நிதி காண்பதற்கு அரிது.

மூவரும் பாடிய சிறப்பான கோயில் இது.

தரிசன பயன்கள்: இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொண்டால் விஷக்கடி நீக்கம் பெறுவது இன்றும் பிரசித்தமாகவுள்ளது.

எப்படி செல்வது : 
கும்பகோணம் நாச்சியார்கோயில் பாதையில் திருநறையூருக்கு முன் உள்ள தலம். கும்பகோணத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது.

எங்கே தங்குவது: கும்பகோணம் 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.



Monday, December 17, 2018

திருப்பந்துறை - சிவானந்தேசுவரர் கோயில்

தேவார பாடல் :
பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு
                                                             ஒன்று, பூண்டு,
செம்மாந்து, "ஐயம் பெய்க!" என்று சொல்லி, செய் தொழில்
                                                             பேணியோர்; செல்வர்;
அம் மான் நோக்கு இயல், அம் தளிர்மேனி, அரிவை ஓர்பாகம்
                                                             அமர்ந்த
பெம்மான்; நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே. 

திருப்பேணு பெருந்துறை இறைவர், படம் பொருந்திய பெரிய நாகம், பல மலர்களோடு இணைந்த கொன்றை மலர், வெண்மையான பன்றிக் கொம்பு ஆகியவற்றை அணிந்து செம்மாப்பு உடையவராய்ப் பலர் இல்லங்களுக்கும் சென்று ‘ஐயம் இடுக’என்று கேட்டு, ஐயம் இட்ட கடமையாளர்களுக்குச் செல்வமாய் இருப்பவர்; அழகிய மான்விழி போன்ற விழிகளையும், தளிர் போன்ற மேனியையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட தலைவர்; நிலைத்த பழமையான புகழையுடையவர் என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: திருப்பந்துறை, தஞ்சாவூர் மாவட்டம். தேவார பெயர் திருப்பேணுப்பெருந்துறை

மூலவர்: சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்

அம்பாள்: மங்களாம்பிகை,மலையரசி

ஸ்தல விருட்சம்: வன்னி

தீர்த்தம்: மங்கள தீர்த்தம்

வழிபட்டோர்கள் : விநாயகர், முருகப்பெருமான், உமையம்மை, பிரம்ம தேவர்

ஸ்தல வரலாறு : 
பிரணவ மந்திரத்திறகு பொருள் தெரியாத பிரம்மாவை முருகப் பெருமான் சிறையில் அடைத்து விட்டார். பெரியவரான பிரம்மாவை நிந்தனை செய்து விட்டோமே என்று கவலை கொண்டார். மகாவிஷ்ணுவிடம் பரிகாரம் கேட்டார்,  சிவபெருமானை லிங்க உருவில் வழிபடும்படி மகாவிஷ்ணு முருகனுக்கு அறிவுரை கூறினார்.

அதன்படி முருகர் திருப்பனந்தாள் அருகிலுள்ள சேங்கனூரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஆனால் அவர் கவலை தீரவில்லை. மேலும் கவலைகள் கூடி மெளனியாகவே ஆகி ஊமையாய் சஞ்சரிக்கத் தொடங்கினார். அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் காவிரியின் கிளைநதியான அரிசொல் ஆறு எனப்படும் அரிசிலாற்றின் கரையோரம் இருந்த திருப்பந்துறை தலத்தை அடைந்தார். அங்கு வன்னி மரத்தடியில் குடி கொண்டிருக்கும் சிவானந்தேஸ்வரரைக் கண்டதும் முருகப்பெருமானது உள்ளம் மலர்ச்சி அடைந்தது. உள்ளம் நெகிழ்ந்து அதுவரை மெளனியாக இருந்த முருகர் சிவானந்தேஸ்வரரை தலையில் குடுமியோடும் கையில் சின் முத்திரையோடும் தண்டாயுதபாணியாக மாறி விதிப்படி பூஜித்தார். அவர் பூஜையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை வாஞ்சையோடு நோக்க அதுவரை மெளனமாய் இருந்த முருகர் மகிழ்வடைந்தார். பழைய நிலையை அடைந்து மனக்கவலை முற்றிலும் நீங்கி சர்வ கலைகளிலும் வல்லவரானார்.

ஆலய சிறப்புகள்: மழலை மகாலட்சுமி அவதரித்த திருத்தலம். பஞ்ச பூதங்கள் அமையப்பெற்ற தலம். இரண்டு பைரவர்கள் அமையப்பெற்ற தலம். நாச்சியார்கோயிலில் உள்ள திருமாலை மணந்துக்கொண்டார்.

தரிசன பயன்கள்: இத்தலம் மனக்கவலையை போக்கும் திருத்தலமாகவும், ஊமையாகிவிட்ட முருகனை பேச வைத்த தலமாகவும் திகழ்ந்து பேசும் சகதியை அளிக்கும் தலமாகவும், திக்குவாய் குறையை தீக்கும் தலமாகவும், வாக்கு வண்மையை அதிகரிக்கச் செய்யும் தலமாகவும் விளங்குகிறது. இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து 45 நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ கோரக்க சித்தர் - சரும வெள்ளைரோக நிவர்த்தி ஸ்தலம். வெள்ளை சருமம், தேமல் படை உள்ளவர்கள் பிரதி திங்கள், வியாழக்கிழமைகளிலும், பௌர்ணமி அன்றும் நடைபெறும் நல்லெண்ணெய் அபிஷேகத்தில் கலந்துகொண்டு அந்த அபிஷேக என்னை மற்றும் திருநீறை பூசி வர குணமாகும் என்பது நம்பிக்கை.


எப்படி செல்வது : கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலையில் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.

எங்கே தங்குவது: கும்பகோணம் 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரை

Thursday, December 13, 2018

திருவாஞ்சியம்-வாஞ்சிநாத சுவாமி கோயில்

தேவார பாடல் :
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்- 
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம், 
புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம் 
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.

படைக்கலங்களும், பூதமும், பாம்பும், மான்தோல் உடையும் தாங்கிய உத்தமராகிய பெருமானுக்கு இடமாகிய, பக்கமெலாம் பொருந்திய பூம்பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்தை அடையவல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை - அப்பர் பாடல். மேலும் திருஞானசம்பந்தரும் சுந்தரரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.

ஊர்: திருவாஞ்சியம், திருவாரூர் மாவட்டம். பழைய பெயர் -ஸ்ரீவாஞ்சியம், வாஞ்சியம்பதி, சந்தனவனம், ஜாந்தாரண்யம், பூகைலாசம்

மூலவர்: வாஞ்சி நாதேசுவரர், வாஞ்சிலிங்கேசுவரர்

அம்பாள்: மங்கள நாயகி, வாழவந்த நாயகி

ஸ்தல விருட்சம்: சந்தனம்

தீர்த்தம்: குப்த கங்கை, இமய தீர்த்தம்

வழிபட்டோர்கள் : மஹாவிஷ்ணு

ஸ்தல வரலாறு : 
தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் ஸ்ரீவாஞ்சியம் எனப்படுகிறது.

யமதர்மராஜா தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் மற்றவர்களால் வெறுக்கப்படுவதையும், தமது பணி காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தால் மனஅமைதி இழந்து தவிப்பதையும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார். அவர் திருவாஞ்சியம் சென்று வழிபடச் சொல்ல, அதன்படி இயமனும் திருவாஞ்சியத்தில் தவம் இருந்தார். தவத்திற்கிறங்கி வந்த சிவபெருமானிடம் தமது குறைகளைக் கூற, அவரும் அருளி, இத்தலத்து க்ஷேத்திர பாலகனாக எமனை நியமித்தார். எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற வரமும் அளித்தார். அதன்படி நாள்தோறும் எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும்.

குப்தகங்கை தீர்த்தம்-மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்கள் பாவங்கள் தீர்ப்பதால் தன்னிடம் சேர்ந்துவிட்ட பாவங்களைக் போக்கிக் கொள்ள கங்கை இறைவனை வேண்டினாள். இறைவனும் எமனுக்கே பாவவிமோசனம் தந்த இத்தலத்தில் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்யும்படி கூறினார். கங்கையும் தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற 999 கலைகளுடன் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் ஜக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள்.

ஆலய சிறப்புகள்: 
1. காசிக்கு சமமான 6 ஸ்தலங்களில் திருவாஞ்சியமும் ஒன்று. மற்றவை திருவையாறு, திருவெண்காடு,திருவிடைமருதூர், திருசாய்க்காடு மற்றும் மயிலாடுதுறை ஆகும்.

2. பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது தப்பிப் பிழைத்த காசியைப் போலவே இதுவும் ஒன்று. இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும்.

3. யமதர்மனுக்கு தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சம். கோவிலின் அக்னி மூலையில் எமனுக்கும், சித்ரகுப்தனுக்கும் தெற்கு நோக்கிய தனி சந்நிதி உள்ளது.

4. பைரவர் இங்கு யோகநிலையில் காணப்படுகிறார். பைரவர் சநிதிக்கு அடுத்து ராகு-கேது சந்நிதி இருக்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இவர்கள் உருவச்சிலையும் இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

5.இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. இவை மூன்றும் முறையே லக்ஷ்மி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

6.  கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோயில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம். ஆனால் வாஞ்சியம் திருக்கோயிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகின்றது.

தரிசன பயன்கள்: 
மரணபயம், மனக்கிலேசம், பைரவ உபாதை  உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை.

ராகு , கேது பரிகார ஸ்தலம், திருமண தடை நீங்கும் . மேலும் இத்தலத்தில் ஆயுஷ் ஹோமம் செய்துகொண்டால் ஆயுள் விருத்தி உண்டு என கூறப்படுகிறது.

மஹாலக்ஷ்மி மற்றும் மகிஷாசுரமர்தினியின் சந்நிதிகளும் இங்குள்ளன. சிம்ம வாகனத்துடன் நின்ற நிலையில் எட்டு கைகளுடன் காட்சி தரும் மகிஷாசுரமர்தினியை இராகு காலத்தில் 108 தாமரை மலர்களால் அர்ச்சிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது.

எப்படி செல்வது : 
1) திருவாரூர் - வடக்கண்டம் -மங்கள் அய்யம்பேட்டை - பருத்தியூர் - திருவாஞ்சியம்  17 கிமீ.
2) மயிலாடுதுறை - பேரளம் - கூத்தனூர் -திருக்கண்டீஸ்வரம் - நன்னிலம் -திருவாஞ்சியம் 36 கிமீ
3) கும்பகோணம் - நாச்சியார் கோயில் - மதூர் - அச்சுதமங்கலம்  அரசு பள்ளிக்கு முன் வலது பக்கம் தெற்கே  பிரியும் சாலையில் இரண்டு கிமீ -திருவாஞ்சியம்  - 28 கிமீ

எங்கே தங்குவது: 
திருவாரூர், கும்பகோணம் அல்லது

எங்கே தங்குவது: கும்பகோணம், திருவாரூர் அல்லது மயிலாடுதுறை 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.





Monday, December 10, 2018

நன்னிலம் - மதுவனேஸ்வரர் கோவில்

தேவார பாடல் :
தண் இயல் வெம்மையினான்; தலையில் கடைதோறும் பலி, 
பண் இயல் மென்மொழியார், இடக் கொண்டு உழல் பண்டரங்கன் 
புண்ணிய நால்மறையோர் முறையால் அடி போற்று இசைப்ப 
நண்ணிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.

புண்ணியத்தைச் செய்கின்ற, நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள், முறைப்படி தனது, திருவடிக்குப் போற்றி சொல்லி வழிபடும்படி, பலரும் அடைந்து வணங்கும் திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தண்ணிய இயல்பினையும், வெவ்விய இயல்பினையும் ஒருங்குடையவன்; வாயில்கள்தோறும் சென்று, பண்போலும் இயல்பினையுடைய இனிய மொழியையுடைய மகளிரிடம் தலையோட்டில் பிச்சை யேற்றுத்திரிகின்ற 'பாண்டரங்கம்' என்னும் கூத்தினை யுடையவன்

ஊர்: நன்னிலம், திருவாரூர் மாவட்டம்

மூலவர்: மதுவனேசுவரர், தேவாரண்யேசுவரர், பிரகாச நாதர்

அம்பாள்: மதுவனேசுவரி, தேவகாந்தார நாயகி, பெரிய நாயகி, பிரகாச நாயகி

ஸ்தல விருட்சம்: வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி, சண்பகம்

தீர்த்தம்: பிரம தீர்த்தம், சூல தீர்த்தம்

வழிபட்டோர்கள் : 
அகத்தியர் வழிபட்ட தலம். குபேரன், இந்திரன், யமன், வருணன் ஆகியோர் முறையே வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு முதலான திசைகளில் வழிபட்ட திருத்தலமிது

ஸ்தல வரலாறு : 
விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனின் கொடுமைகளுக்கு பயந்த தேவர்கள் சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களை தேனீக்களாக மாற்றிவிட்டார். தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு வழிபட்டதால் இறைவன் "மதுவனேஸ்வரர்" என்றும் அம்மன் "மதுவன நாயகி"' என்றும் பெயர் பெற்றனர்.

ஆலய சிறப்புகள்: 
மகா மேருவின் ஒரு துளி விழுந்த பகுதி சிறிய மலையாக மாறி அதன் மீது கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கோச்செங்கட் சோழன்கட்டிய 70 மாட கோயில்களில் ஒன்றாகும்.

தரிசன பயன்கள்: தேவர்கள் துன்பம் தீர்த்தது போல் சகல துன்பங்களும் இறைவனை வழிபட விலகும்.

எப்படி செல்வது : 
1) திருவாரூர் - ஆண்டிப்பந்தல் -திருக்கண்டீஸ்வரம்-நன்னிலம்  17 கிமீ.
2) மயிலாடுதுறை - பேரளம் - கூத்தனூர் -திருக்கண்டீஸ்வரம் - நன்னிலம்  32 கிமீ
3) கும்பகோணம் - நாச்சியார் கோயில் - நன்னிலம் - 30 கிமீ

எங்கே தங்குவது: 
திருவாரூர், கும்பகோணம் அல்லது மயிலாடுதுறை

தரிசன நேரம் :. காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.





Friday, December 7, 2018

திருக்கொண்டீஸ்வரம் - பசுபதீஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பிறவி மாயப்
புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்;
அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே!” அஞ்சல்!” என்னாய்

திரை உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

அலைகள் உலாவுகின்ற வயல்களால் சூழப்பட்ட திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே! இடையில் பாம்பினை விளங்குமாறு அணிந்த அண்ணலே! ஐம்புல வேட்கையை நீக்கும் ஆற்றல் இல்லேனாய், நீக்குதற்கு அரிய பிறவியாகிய வஞ்சனைப் படுகுழியிலே விழுந்து அதனினின்றும் கரையேறும் வழியைக் காணேனாய் உள்ள அடியேனுக்கு அஞ்சேல் என்று அருள் செய்வாயாக என அப்பர் நான்காம் திருமுறையில் பாடியுள்ளார். மேலும் ஒரு பதிகம் ஐந்தாம் திருமுறையில் உள்ளது.

ஊர்: திருக்கொண்டீச்சரம், திருவாரூர் மாவட்டம்

மூலவர்: பசுபதீஸ்வரர், பசுபதீசுவரர், பசுபதி நாதர்

அம்பாள்: சாந்த நாயகி

ஸ்தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: க்ஷீர புஷ்கரணி

வழிபட்டோர்கள் : பார்வதி தேவி காமதேனு வடிவில் வழிபட்ட ஸ்தலம், குரு பகவான்.

ஸ்தல வரலாறு : ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கயிலையில் இருந்து பூலோகத்திற்கு வந்தாள். பசுவாக மாறிய அன்னை வில்வவனத்தில் இறைவனைத் தேடி வரும்போது தனது கூர்மையான கொம்புகளால் பூமியை ஆழத் தோண்டுகிறாள். அவ்வாறு அன்னை பூமியைத் தோண்டிய போது, பூமியில் லிங்க உருவில் மறைந்திருந்த சுவாமியின் சிரசை கொம்பு இரு பாகமாகக் கிழித்து விட்டது. பாணமாக உள்ள லிங்கத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பசு வடிவம் கொண்ட அம்பிகை பாலைச் சொரிந்து ரத்தம் வருவதை நிறுத்த முற்பட்டாள். பால் லிங்கத்தின் மீது பட்டவுடன் அம்பிகை தன் சுயவுரு பெற்றாள். லிங்கத்தினிலிருந்து இன்னும் ரத்தம் வடிவதைக் கண்ட அம்பிகை தனது கரத்தினால் லிங்கத்தின் சிரசைப் பற்ற, ரத்தம் வருவது நின்று இறைவன் வெளிப்பட்டு அம்பிகைக்கு சாபவிமோசனம் அருளுகிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம்.

ஆலய சிறப்புகள்: குரு பகவான் மற்றும் அவர் ஆட்சி செய்யும் வியாழக்கிழமையும்  வழிபட்ட தலம் . அதனால் ஒவ்வொரு கார்த்திகை வியாழக்கிழமையும் சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது.

தரிசன பயன்கள்: வியாழக்கிழமை பிறந்தவர்கள் ஜாதகத்தில் குரு வியாழன் பாதிப்பு உள்ளவர்கள் வியாழக்கிழமை இத்தலத்தில் புனித நீராடினால் கிரக கோளாறுகள் நீங்கும்.

எப்படி செல்வது : 
1) திருவாரூர் - ஆண்டிப்பந்தல் -திருக்கண்டீஸ்வரம் 15 கிமீ.
2) மயிலாடுதுறை - பேரளம் - கூத்தனூர் -திருக்கண்டீஸ்வரம் 30 கிமீ
3) கும்பகோணம் - நாச்சியார் கோயில் - நன்னிலம் - திருக்கண்டீஸ்வரம் 32 கிமீ

எங்கே தங்குவது: திருவாரூர், கும்பகோணம் அல்லது மயிலாடுதுறை 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.






Tuesday, December 4, 2018

சிதலப்பதி - மதிமுக்தீஸ்வரர் கோயில் - இராமர் சிரார்த்தம் செய்த ஸ்தலம்

தேவார பாடல் :
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, புலர் காலையே, 
அடிகள் ஆரத் தொழுது, ஏத்த நின்ற(வ்) அழகன்(ன்) இடம் கொடிகள் ஓங்கிக் குலவும் விழவு ஆர் திலதைப்பதி, வடி கொள் சோலை(ம்) மலர் மணம் கமழும் மதிமுத்தமே.

வைகறைப்போதில் தொண்டர்கள் பலரும் கூடி நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவோடு திருவடிகளை மனமாரத் தொழுதேத்தநின்ற அழகனது இடம், கொடிகள் ஓங்கி அசைந்தாடுவதும் திருவிழாக்கள் இடையறாமல் நிகழ்வதுமாகிய
திருத்திலதைப்பதியிலுள்ள அழகிய சோலைகளின் மலர்கள் மணம்

கமழ்ந்து விளங்கும் மதிமுத்தம் கோயிலாகும் என இரண்டாம் திருமுறையில் ஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: சிதலப்பதி, திருவாரூர் மாவட்டம், தேவார பெயர் திருத்திலதைப்பதி

மூலவர்: முக்தீஸ்வரர்

அம்பாள்: பொற்கொடியம்மை

ஸ்தல விருட்சம்:மந்தாரை

தீர்த்தம்: சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு

வழிபட்டோர்கள் : 
சூரியன், சந்திரன், யானை, சிங்கம், ஸ்ரீராமர், லட்சுமணர்

ஸ்தல வரலாறு : 
இராமர் தன்  தந்தை தசரதனுக்கு பல  ஸ்தலங்களில் தர்ப்பணம் செய்கிறார். எனினும், அவர் அளித்த  பிண்டம் ஏற்றுக்கொள்ளப்படாமல் புழு பூத்து   பலனில்லாமல் போனது. தந்தைக்கு முக்தி கிடைக்கவேண்டும் என்ற ஆவலில் இந்த ஸ்தலத்தில் நான்கு பிண்டம் படைக்கிறார். சிவனின் அருளால் அந்த பிண்டங்கள் நான்கு லிங்கமாக மாறியது. அதனால் தசரத மஹாராஜாவிற்கு முக்தி கிடைத்தது. எனவே மூலவர் முக்தீஸ்வரர் என பெயர் பெற்றுள்ளார். ராமர் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார். இந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. கருவறைக்குப் பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், ராமர், லட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும் நிலையுலுள்ள சிற்பத்தையும் கோயில் பிராகாரத்தில் காணலாம்.

ஆலய சிறப்புகள்: இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சரத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (சிதலப்பதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது.

மற்றொரு சிறப்பு கோவில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் சந்நிதி. யானை முகத்திற்கு முந்தைய விநாயகர் என்பதால், இங்கு விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து, வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, மனித முகத்துடன் அழகான கோலத்தில் காட்சி தருகின்றார்.

இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார். இராமராக சிவபூஜை செய்யும் உருவிலும், கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி அருகில் மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

தரிசன பயன்கள்: செல்வ செழிப்பு, தர்ப்பணம் செய்தால் பிதுர்களுக்கு நல்லது.

எப்படி செல்வது : மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டதில் இருந்து சுமார் 2 கி.மி. கும்பகோணத்திலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார் கோயில் - திருவீழிமிழிலை - கூத்தனுர் வழியாக. புகழ் பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயில் 2 கிமீ தூரத்தில் உள்ளது.

எங்கே தங்குவது: கும்பகோணம் அல்லது மயிலாடுதுறை 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் பகல் 12-45 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.



ஆதி விநாயகர் ஆலயம் 

Saturday, December 1, 2018

சிறுகுடி- சூட்சுமபுரீஸ்வரர் கோவில்-செவ்வாய் தோஷம் நீங்க

தேவார பாடல் :
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய
படம் மலி அரவு உடையீரே;
படம் மலி அரவு உடையீர்! உமைப் பணிபவர்

அடைவதும், அமருலகு அதுவே

வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய திருச்செறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே! அவ்வாறு  படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள் சிவலோகம் அடைவர் என திருஞானசம்பந்தரால் பாட பாடல் பெற்றது.

ஊர்: சிறுகுடி,திருவாரூர் மாவட்டம்

மூலவர்: மங்களநாதர், சிறுகுடியீசர், சூட்சுமபுரீசுவரர்

அம்பாள்: மங்கள நாயகி

ஸ்தல விருட்சம்:வில்வம்

தீர்த்தம்: மங்கள தீர்த்தம்

வழிபட்டோர்கள் : பார்வதி தேவி,கருடன், செவ்வாய்,கந்தர்வர்கள்

ஸ்தல வரலாறு : 
இத்தலத்தில் பார்வதி தேவி கைபிடியளவு மணலால் பிடித்து வைத்து சிவலிங்கம் உண்டாக்கி  மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டார்சுவாமி அம்பாளுக்கு சூட்சுமமாய்  காட்சி கொடுத்து ஏற்றுக்கொண்டார்.சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று. திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாய் மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத்த தலத்திற்கு சூட்சுமபுரி என்றும் இறைவனுக்கு சூட்சுமபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டாயின. இறைவன் சிறுகுடியீசர் என்றும அழைக்கப்படுகிறார்.

ஆலய சிறப்புகள்: வைத்தீஸ்வரன் கோயில் போல் செவ்வாய் தோஷம் தீர்க்கும் ஸ்தலம். அழகிய வயல் சூழ்ந்த கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் எதிரே தாமரை பூத்த தடாகம் உள்ளது.

தரிசன பயன்கள்: செவ்வாய் தோஷ நிவர்த்தி

எப்படி செல்வது : கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரம் கடந்து மாந்தை என்னும் ஊர் வந்தபின் வலது புறம் திரும்பி 4 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து 30 கிமீ. மயிலாடுதுறையில் இருந்து வருவதென்றால் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் கொல்லுமாங்குடி என்னும் ஊர் அருகே வலதுபுறம் திரும்பி மாந்தை சென்று கோயிலை அடையலாம். இது 24 கிமீ தூரம் ஆகும். திருபாம்புரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து மேற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது. பேரளத்தில் இருந்தும் திருபாம்புரம் வழியாக இத்தலத்திறகு வர சாலை வசதி உள்ளது.

எங்கே தங்குவது: கும்பகோணம் அல்லது மயிலாடுதுறை 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.