Sunday, December 23, 2018

காஞ்சிபுரம் - கச்சிஅனேகதங்காவதேசுவரர் கோயில்

தேவார பாடல் :
தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு
மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை எரித்தெரி யாடி இடம்குல
வான திடங்குறை யாமறையா
மானை இடத்ததொர் கையன் இடம்மத
மாறு படப்பொழி யும்மலைபோல்
ஆனை யுரித்த பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே

தேனாகிய நெய்யை விரும்பி உழல்கின்ற சிவந்த சடையை யுடைய எம்பெருமானும், அழகு விளங்கும், ஐங்கணையை உடைய அத்தலைவனாகிய மன்மதனை எரித்தவனும், தீயில் நின்று ஆடுபவனும், மேலானவனும், மிக்க புள்ளிகள் பொருந்திய மானை இடப்பக்கத்திலுள்ள ஒரு கையில் தாங்கினவனும், மும்மதங்களும் ஒன்றினொன்று முற்பட்டுப் பாய்கின்ற மலைபோலும் யானையை உரித்த பெரியோனும் ஆகிய இறைவன் விரும்பி உறையும் இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள, ‘திருவனேகதங்காவதம்’ என்னும் திருக்கோயிலே என சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலம்.

ஊர்: காஞ்சிபுரம்

மூலவர்: அநேகதங்காபதேஸ்வரர்

அம்பாள்: காமாட்சி அம்மன்

ஸ்தல விருட்சம்:

தீர்த்தம்: 

வழிபட்டோர்கள் : விநாயகர்,குபேரன் 

ஸ்தல வரலாறு : யானை (அனேகதம்) முகத்தையுடைய விநாயகர் சிவலிங்கத் திருமேனியை நிறுவி வழிபட்ட தலம் ஆதலால் இது அநேகதங்காபதம் என்று பெயர் பெற்றது.அநேகதங்காபதேஸ்வரர் இரணியபுர அசுரரான கேசியை அழித்து கேசியின் மகளான சிவபக்தை வல்லபையை விநாயகருக்கு மணம் முடிக்க வரம் தநத சிறந்த தலமாகும்.

அநேகதங்காபதம் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்வார் - கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம்.காஞ்சி புரத்திலுள்ள இத்தலம். வடநாட்டில் உள்ள அநேகதங்காபதம் சிவஸ்தலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட இத்தலம் கச்சி அநேகதங்காபதம் என்ற பெயரால் வழங்குகிறது.

ஆலய சிறப்புகள்: குபேரன் வழிபட்ட பெருமையுடையது இத்தலம். பெரிய லிங்க திருமேனி.

தரிசன பயன்கள்: கொடிய துன்பமாகிய பிறவித்துயர் தீர்ந்து இறைவன் உறையும் திருக்கயிலாயத்தை அடைந்து அங்கு தங்கும் பேற்றினைப் பெறுவர் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.

இத்தலத்தில் உள்ள விநாயகரை வழிபட்டால் கல்வி மேன்மை பெறும். மாணவர்கள் கோயில் பிராகாரத்தில் அமர்ந்து படிப்பதை காணலாம்.

எப்படி செல்வது : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலிருந்து 1.5 கிமீ  தொலைவில் கைலாசநாதர் கோயில் அருகில் உள்ளது.

எங்கே தங்குவது: 
காஞ்சிபுரம்

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் 10:30 வரை;மாலை 5:30 முதல் 7:30 மணி வரை.






No comments:

Post a Comment