Monday, December 10, 2018

நன்னிலம் - மதுவனேஸ்வரர் கோவில்

தேவார பாடல் :
தண் இயல் வெம்மையினான்; தலையில் கடைதோறும் பலி, 
பண் இயல் மென்மொழியார், இடக் கொண்டு உழல் பண்டரங்கன் 
புண்ணிய நால்மறையோர் முறையால் அடி போற்று இசைப்ப 
நண்ணிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.

புண்ணியத்தைச் செய்கின்ற, நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள், முறைப்படி தனது, திருவடிக்குப் போற்றி சொல்லி வழிபடும்படி, பலரும் அடைந்து வணங்கும் திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தண்ணிய இயல்பினையும், வெவ்விய இயல்பினையும் ஒருங்குடையவன்; வாயில்கள்தோறும் சென்று, பண்போலும் இயல்பினையுடைய இனிய மொழியையுடைய மகளிரிடம் தலையோட்டில் பிச்சை யேற்றுத்திரிகின்ற 'பாண்டரங்கம்' என்னும் கூத்தினை யுடையவன்

ஊர்: நன்னிலம், திருவாரூர் மாவட்டம்

மூலவர்: மதுவனேசுவரர், தேவாரண்யேசுவரர், பிரகாச நாதர்

அம்பாள்: மதுவனேசுவரி, தேவகாந்தார நாயகி, பெரிய நாயகி, பிரகாச நாயகி

ஸ்தல விருட்சம்: வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி, சண்பகம்

தீர்த்தம்: பிரம தீர்த்தம், சூல தீர்த்தம்

வழிபட்டோர்கள் : 
அகத்தியர் வழிபட்ட தலம். குபேரன், இந்திரன், யமன், வருணன் ஆகியோர் முறையே வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு முதலான திசைகளில் வழிபட்ட திருத்தலமிது

ஸ்தல வரலாறு : 
விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனின் கொடுமைகளுக்கு பயந்த தேவர்கள் சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களை தேனீக்களாக மாற்றிவிட்டார். தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு வழிபட்டதால் இறைவன் "மதுவனேஸ்வரர்" என்றும் அம்மன் "மதுவன நாயகி"' என்றும் பெயர் பெற்றனர்.

ஆலய சிறப்புகள்: 
மகா மேருவின் ஒரு துளி விழுந்த பகுதி சிறிய மலையாக மாறி அதன் மீது கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கோச்செங்கட் சோழன்கட்டிய 70 மாட கோயில்களில் ஒன்றாகும்.

தரிசன பயன்கள்: தேவர்கள் துன்பம் தீர்த்தது போல் சகல துன்பங்களும் இறைவனை வழிபட விலகும்.

எப்படி செல்வது : 
1) திருவாரூர் - ஆண்டிப்பந்தல் -திருக்கண்டீஸ்வரம்-நன்னிலம்  17 கிமீ.
2) மயிலாடுதுறை - பேரளம் - கூத்தனூர் -திருக்கண்டீஸ்வரம் - நன்னிலம்  32 கிமீ
3) கும்பகோணம் - நாச்சியார் கோயில் - நன்னிலம் - 30 கிமீ

எங்கே தங்குவது: 
திருவாரூர், கும்பகோணம் அல்லது மயிலாடுதுறை

தரிசன நேரம் :. காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.





No comments:

Post a Comment