Monday, December 17, 2018

திருப்பந்துறை - சிவானந்தேசுவரர் கோயில்

தேவார பாடல் :
பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு
                                                             ஒன்று, பூண்டு,
செம்மாந்து, "ஐயம் பெய்க!" என்று சொல்லி, செய் தொழில்
                                                             பேணியோர்; செல்வர்;
அம் மான் நோக்கு இயல், அம் தளிர்மேனி, அரிவை ஓர்பாகம்
                                                             அமர்ந்த
பெம்மான்; நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே. 

திருப்பேணு பெருந்துறை இறைவர், படம் பொருந்திய பெரிய நாகம், பல மலர்களோடு இணைந்த கொன்றை மலர், வெண்மையான பன்றிக் கொம்பு ஆகியவற்றை அணிந்து செம்மாப்பு உடையவராய்ப் பலர் இல்லங்களுக்கும் சென்று ‘ஐயம் இடுக’என்று கேட்டு, ஐயம் இட்ட கடமையாளர்களுக்குச் செல்வமாய் இருப்பவர்; அழகிய மான்விழி போன்ற விழிகளையும், தளிர் போன்ற மேனியையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட தலைவர்; நிலைத்த பழமையான புகழையுடையவர் என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: திருப்பந்துறை, தஞ்சாவூர் மாவட்டம். தேவார பெயர் திருப்பேணுப்பெருந்துறை

மூலவர்: சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்

அம்பாள்: மங்களாம்பிகை,மலையரசி

ஸ்தல விருட்சம்: வன்னி

தீர்த்தம்: மங்கள தீர்த்தம்

வழிபட்டோர்கள் : விநாயகர், முருகப்பெருமான், உமையம்மை, பிரம்ம தேவர்

ஸ்தல வரலாறு : 
பிரணவ மந்திரத்திறகு பொருள் தெரியாத பிரம்மாவை முருகப் பெருமான் சிறையில் அடைத்து விட்டார். பெரியவரான பிரம்மாவை நிந்தனை செய்து விட்டோமே என்று கவலை கொண்டார். மகாவிஷ்ணுவிடம் பரிகாரம் கேட்டார்,  சிவபெருமானை லிங்க உருவில் வழிபடும்படி மகாவிஷ்ணு முருகனுக்கு அறிவுரை கூறினார்.

அதன்படி முருகர் திருப்பனந்தாள் அருகிலுள்ள சேங்கனூரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஆனால் அவர் கவலை தீரவில்லை. மேலும் கவலைகள் கூடி மெளனியாகவே ஆகி ஊமையாய் சஞ்சரிக்கத் தொடங்கினார். அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் காவிரியின் கிளைநதியான அரிசொல் ஆறு எனப்படும் அரிசிலாற்றின் கரையோரம் இருந்த திருப்பந்துறை தலத்தை அடைந்தார். அங்கு வன்னி மரத்தடியில் குடி கொண்டிருக்கும் சிவானந்தேஸ்வரரைக் கண்டதும் முருகப்பெருமானது உள்ளம் மலர்ச்சி அடைந்தது. உள்ளம் நெகிழ்ந்து அதுவரை மெளனியாக இருந்த முருகர் சிவானந்தேஸ்வரரை தலையில் குடுமியோடும் கையில் சின் முத்திரையோடும் தண்டாயுதபாணியாக மாறி விதிப்படி பூஜித்தார். அவர் பூஜையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை வாஞ்சையோடு நோக்க அதுவரை மெளனமாய் இருந்த முருகர் மகிழ்வடைந்தார். பழைய நிலையை அடைந்து மனக்கவலை முற்றிலும் நீங்கி சர்வ கலைகளிலும் வல்லவரானார்.

ஆலய சிறப்புகள்: மழலை மகாலட்சுமி அவதரித்த திருத்தலம். பஞ்ச பூதங்கள் அமையப்பெற்ற தலம். இரண்டு பைரவர்கள் அமையப்பெற்ற தலம். நாச்சியார்கோயிலில் உள்ள திருமாலை மணந்துக்கொண்டார்.

தரிசன பயன்கள்: இத்தலம் மனக்கவலையை போக்கும் திருத்தலமாகவும், ஊமையாகிவிட்ட முருகனை பேச வைத்த தலமாகவும் திகழ்ந்து பேசும் சகதியை அளிக்கும் தலமாகவும், திக்குவாய் குறையை தீக்கும் தலமாகவும், வாக்கு வண்மையை அதிகரிக்கச் செய்யும் தலமாகவும் விளங்குகிறது. இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து 45 நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ கோரக்க சித்தர் - சரும வெள்ளைரோக நிவர்த்தி ஸ்தலம். வெள்ளை சருமம், தேமல் படை உள்ளவர்கள் பிரதி திங்கள், வியாழக்கிழமைகளிலும், பௌர்ணமி அன்றும் நடைபெறும் நல்லெண்ணெய் அபிஷேகத்தில் கலந்துகொண்டு அந்த அபிஷேக என்னை மற்றும் திருநீறை பூசி வர குணமாகும் என்பது நம்பிக்கை.


எப்படி செல்வது : கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலையில் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.

எங்கே தங்குவது: கும்பகோணம் 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரை

No comments:

Post a Comment