Thursday, December 20, 2018

அழகாபுத்தூர்-படிக்காசுநாதர் கோயில்-தினம் ஒரு பொற்காசு அருளிய ஈசன்

தேவார பாடல் :
ழுமுத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப் 
புத்தூரன்(ன்) அடி போற்றி!ழு என்பார் எலாம் 
மொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய 
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே.

மொய்க்கின்ற முத்துக்கள் ஊர்ந்து வரும் தண்ணீரை உடைய அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறையும் பெருமான் "திருவடி போற்றி" என்று கூறுவோரெல்லாம், பொய்யுடையதாகி ஊர்கின்ற ஐந்து புலன்களோடு, பொருந்திய வன்மை உடையதாய் ஊர்கின்ற வினைகளையும் மாற்றும் வல்லமை உடையவர்கள் என அப்பர் பாடியுள்ளார். திருஞானசம்பந்தரும், சுந்தரரும் தலா ஒரு பதிகம் இயற்றியுள்ளனர்.

ஊர்: அழகாபுத்தூர்,தஞ்சாவூர் மாவட்டம். பழைய பெயர் அரிசிற்கரைப்புத்தூர்,செருவிலிபுத்தூர்

மூலவர்: சொர்ணபுரீசுவரர், படிக்காசு அளித்த நாதர்

அம்பாள்: அழகாம்பிகை, சௌந்தர நாயகி

ஸ்தல விருட்சம்:வில்வம்

தீர்த்தம்: அரிசிலாறு, அமிர்தபுஷ்கரிணி

வழிபட்டோர்கள் : புகழ்த்துணை நாயனார் 

ஸ்தல வரலாறு : 
புகழ்த்துணை நாயனார் சொர்ணபுரீஸ்வரருக்கு அரிசிலாற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து சிவாகம முறைப்படி தினந்தோறும் பூஜைகள் செய்து வந்தார். அவருடைய முதுமை பருவத்தில் ஊரில் பஞ்சம் வந்ததால் வறுமையில் வாடினார். அப்படியும் அவர் தன் கடமையிலிருந்து தவரவில்லை. பசியால் வாடி உயிரிழக்க நேர்ந்தாலும் ஆலயப்பணியை துறக்கும் எண்ணம் அவர் மனதில் எழவில்லை. ஒரு நாள் அரிசிலாற்றிற்குச் சென்று குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு இறைவன் சந்நிதிக்கு வந்தார். பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாட, கைகள் நடுங்க குடத்தைத் தூக்கி அபிஷேகம் செய்யச் சென்றார். குடம் தவறி இறைவனின் திருமுடி மீது விழுந்தது. சிவலிங்கத்தின் மீது விழுந்த குடத்தால் சிவபெருமானின் தலையிலேயே அடிபட்டு விட்டதாக எண்ணி புகழ்த்துணை நாயனார் மூர்ச்சித்து விழுந்தார். மூர்ச்சித்து விழுந்த அவர் கனவில் இறைவன் தோன்றி, "பஞ்சம் தீரும் வரை தினமும் உனக்கு பொற்காசு தருகிறேன், அதனார் உன் துனபங்கள் தீரும்" என்று அருளி மறைந்தார். விழித்தெழுந்த புகழ்த்துணை நாயனார் சுவாமிக்கு அருகிலுள்ள பீடத்தில் பொற்காசு இருக்கக் கண்டார். அதே இடத்தில் தினமும் அவருக்கு ஒரு பொற்காசு கிடைத்தது. அதைக் கொண்டு வறுமையை விரட்டி, இறைவனுக்கு மேலும் சிறந்த தொண்டு செய்து இறுதியில் இறைவன் திருவடியில் ஐக்கியமானார். இதனால் இறைவனுக்கு "படிக்காசு அளித்த நாதர்" என்ற பெயரும் ஏற்பட்டது.

ஆலய சிறப்புகள்: 
ஆறுமுகர் பன்னிருகரங்களுடன் மயில்வாகனராக விளங்குகிறார். இவருடைய வடிவில் வலப்பாலுள்ள ஆறுகரங்களுள் முதல் கரம் சக்கரமும், இடப்பாலுள்ள ஆறுகரங்களுள் முதலாவது கரம் சங்கும் ஏந்தியிருப்பது விசேஷம். இம்மாதிரி அமைப்புள்ள ஆறுமுகர் சந்நிதி காண்பதற்கு அரிது.

மூவரும் பாடிய சிறப்பான கோயில் இது.

தரிசன பயன்கள்: இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொண்டால் விஷக்கடி நீக்கம் பெறுவது இன்றும் பிரசித்தமாகவுள்ளது.

எப்படி செல்வது : 
கும்பகோணம் நாச்சியார்கோயில் பாதையில் திருநறையூருக்கு முன் உள்ள தலம். கும்பகோணத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது.

எங்கே தங்குவது: கும்பகோணம் 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.



No comments:

Post a Comment