Thursday, February 28, 2019

காஞ்சிபுரம் - திருமேற்றளீசுவரர் கோயில் - மஹாவிஷ்ணு லிங்க ஸ்வரூபம் பெற்ற கோயில்

தேவார பாடல் :
ஞானசம்பந்தர் பாடிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை. சுந்தரர் அருளிய பாடல் கீழே வருமாறு

நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்; 
வந்தாய்; போய் அறியாய்; மனமே புகுந்து நின்ற 
சிந்தாய்! எந்தைபிரான்! திரு மேற்றளி உறையும் 
எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே.

அவியாத ஒளிபொருந்திய விளக்குப் போல்பவனே, என் தந்தைக்கும் பெருமானே, கச்சித்திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே, உன்னையே நினைந்திருந்த என் உள்ளத்திலே புகுந்துநின்ற சிந்தனைப் பொருளே, என் உள்ளத்தில் புகுந்த நீ பின் நீங்கியறியாய்; ஆதலின், இனி அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன்.

ஊர்: காஞ்சிபுரம்


மூலவர்: திருமேற்றளீஸ்வரர்,ஓதவுருகீஸ்வரர்

அம்பாள்: காமாட்சி அம்மன்

ஸ்தல விருட்சம்: காரை

தீர்த்தம்: விஷ்ணு தீர்த்தம்

வழிபட்டோர்கள் : மகாவிஷ்ணு

ஸ்தல வரலாறு : 
மகாவிஷ்ணுவிற்கு சிவனின் லிங்க வடிவம் பெற வேண்டும் என்ற ஆவல் எழ  சிவசொரூபம் கிடைக்க அருளும்படி சிவனிடம் வேண்டினார். விஷ்ணுவின் மன திடத்தை கண்டு வியந்த சிவன் அவருக்கு அருள்புரிய எண்ணம் கொண்டார். அவரிடம் இத்தலத்தில் மேற்கு நோக்கி சுயம்புவாக வீற்றிருக்கும் தன்னை வேண்டி தவம் செய்து வழிபட்டு வர லிங்க வடிவம் கிடைக்கப் பெறும் என்றார். அதன்படி இத்தலம் வந்த மகாவிஷ்ணு தீர்த்தத்தில் நீராடி வேகவதி நதிக்கரையில் சிவனை நோக்கி கிழக்கு பார்த்து நின்ற கோலத்திலேயே தவம் செய்தார். சிவத்தல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர் இத்தலம் வந்த போது தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன்தான் என்று எண்ணி, சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவாறே பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணு லிங்க வடிவம் பெற்றபோது சம்பந்தர் தனது பதகத்தைப் பாடி முடித்தார். எனவே, இறுதியில் அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும், அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம். சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர் ஓதஉருகீஸ்வரர் என்ற பெயருடன் இவ்வாலயத்தில் கிழக்கு நோக்கி சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.

ஆலய சிறப்புகள்: இரு மூலவர் சந்நிதிகள் கொண்ட கோயில். ஆலயம் அமைந்துள்ள தெருவின் மற்றோரு கோடியில் திருஞானசம்பந்தருக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது. மூலத்திருமேனி திருமேற்றளிக் கோபுரத்தை நோக்கியவாறு கைகளைக் குவித்து வணங்கும் நிலையில் நின்ற கோலத்தில் உள்ளது. இவரின் உற்சவத் திருமேனி வலக்கை சுட்டிய விரலுடன் இடக்கையில் பொற்கிண்ணம் ஏந்திய நிலையில் பக்கத்தில் உள்ளது. இத்தெருவின் நடுவில் "உற்றுக்கேட்ட முத்தீசர்" ஆலயம் உள்ளது. ஞானசம்பந்தர் இத்தலம் வந்து பதிகம் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாக வரலாறு.

தரிசன பயன்கள்: 

எப்படி செல்வது :  காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் பிள்ளையார்பாளயம் என்னும் இடத்தில் திருமேற்றளித் தெருவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

எங்கே தங்குவது: காஞ்சிபுரம்

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

Sunday, February 24, 2019

திருத்தளூர் (திருத்துறையூர்) - சிஷ்டகுருநாதேசுவரர் திருக்கோயில்

தேவார பாடல் :
மலையாரரு வித்திரள்
    மாமணி யுந்திக்
குலையாரக்கொணர்ந் தெற்றிஓர்
    பெண்ணை வடபால்
கலையார் அல்குற் கன்னியர்
    ஆடுந் துறையூர்த்
தலைவாஉனை வேண்டிக்கொள்
    வேன்தவ நெறியே

மலையிற் பொருந்திய அருவிக் கூட்டம், பெரிய மணிகளைத் தள்ளிக் கொணர்ந்து கரை நிறைய எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண், நல்லஆடையை அணிந்த அல்குலையுடைய கன்னிப்பெண்கள் மூழ்கி விளையாடும் ஒரு துறையைச் சார்ந்த ஊராகிய திருத்துறையூரின்கண் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் என சுந்தரரால் பாடப்பெற்றது.

ஊர்: திருத்தளூர்திருத்துறையூர் எனவும் வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ளது. பழைய பெயர் - திருத்துறையூர்

மூலவர்: சிஷ்டகுருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர்

அம்பாள்: சிவலோகநாயகி, பூங்கோதை

ஸ்தல விருட்சம்:கொன்றை

தீர்த்தம்: சூர்யபுஷ்கரிணி

வழிபட்டோர்கள் : சுந்தரமூர்த்தி நாயனார்

ஸ்தல வரலாறு :  சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு 'பித்தாய் பிறை சூடி பெருமானே' என பதிகம் பாடியபின்  திருவெண்ணெய் நல்லூரில் இருந்து சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடினார். அப்போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும், பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்தனர். கரையில் இறங்கிய பிறகு இறைவன் சுந்தரர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டார். சுந்தரர் சுற்றிலும் தேடிப்பார்த்தார். ஆனாலும் வயதான் தம்பதியைக் காணவில்லை. அப்போது "நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்" என்று அசரீரி வாக்கு கேட்க, சுந்தரர் மேலே பார்த்தபோது சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார். சுந்தரர் இறைவனை வணங்கி தனக்கு உபதேசம் செய்யும்படி கூறினார். சிவபெருமானும் சுந்தரருக்கு குருவாக இருந்து தவநெறி உபதேசம் செய்தார். எனவே தான் இறைவனுக்கு தவநெறி ஆளுடையார், சிஷ்டகுருநாதேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.

இவ்வூருக்குக் அருகில் கீழப்பாக்கம் என்றொரு ஊர் உள்ளது. இஙுகு ஒரு சிவலிங்கமும் உள்ளது. இவ்விடத்தில் தான் இறைவன் முதியவர் உருவில் சுந்தரருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்ததாகவும் பின்பு ரிஷபாரூடராக ஆலய விமானத்தில் காட்சி கொடுத்ததாகவும் தல புராணம் தெரிவிக்கிறது

ஆலய சிறப்புகள்: இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்பகழில் பாடியுள்ளார்.

சைவ சமயத்தின் சந்தானக் குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியார் பிறந்து வாழ்ந்தத் திருத்தலம் திருத்துறையூர். இவர் முக்தி அடைந்தத் திருத்தலமும் இதுவே. இவரது ஜீவசமாதியும் திருத்துறையூரிலேயே அமைந்துள்ளது.

தரிசன பயன்கள்: இத்தல இறைவனார் சுந்தரருக்குச் குருவாக அமர்ந்து உபதேசம் செய்தவர். எனவே குரு தோஷ நிவர்த்தித் தலமாக அமைந்துள்ளது

எப்படி செல்வது : பண்ருட்டியில் இருந்து சென்னை செல்லும் NH45C சாலையில் கந்தாரகோட்டை அடைந்து அங்கிருந்து இடதுபுறம் திரும்பிச் செல்லும் திருத்துறையூர் சாலையில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.

எங்கே தங்குவது: விழுப்புரம், கடலூர் 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் 11:30 மணி வரை மாலை 5 மணி முதல் 7:30 மணி வரை 










Thursday, February 21, 2019

பனையபுரம் - பனங்காட்டீஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்விரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே

வானில் உலவும் வன்மை உடைய முப்புரங்களைக் கொடிய கணையால் எய்து வீழ்த்தினாய். இசைபாடுவோரின் விரிந்த பண்ணிசையொலி சேர்ந்துள்ள புறவார்பனங்காட்டூரில் உமையொருபாகனாக வீற்றிருக்கும் பிஞ்ஞகா! பிறைசேரும் நெற்றியில் கண் பொருந்தியவனே! உன்னை நேசித்தவர்கட்கு அருள்வாயாக என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: பனையபுரம், விழுப்புரம் மாவட்டம், பழைய பெயர் புறவார் பனங்காட்டூர, பரவைபுரம்.

மூலவர்: பனங்காட்டீஸ்வரர்,பனங்காட்டீசன்,நேத்ரோதாரகேஸ்வர சுவாமி

அம்பாள்: சத்யாம்பிகை,மெய்யாம்பிகை, புறவம்மை

ஸ்தல விருட்சம்: பனை

தீர்த்தம்: பத்ம தீர்த்தம்

வழிபட்டோர்கள் : சூரியன்

ஸ்தல வரலாறு : சிவபெருமானை நிந்தித்துத் தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவன். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சூரியன் சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான்.

கல்வெட்டுகள் மூலம் இரண்டாம் ராஜேந்திர சோழ மன்னனின் (கி.பி 1052-1064) தேவியான பரவை நங்கை இத்தல இறைவனார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்ததால் ஏராளம் கொடையளித்தது தெரியவருகின்றது. இவரது பெயராலேயே ’பரவைபுரம்’ என்றழைக்கப்பட்டு பின்னர் பனையபுரம் என்றானது

ஆலய சிறப்புகள்: சூரியன் வழிபட்ட பாஸ்கர தலங்களில் பனங்காட்டூர் என்ற் இத்தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.

இந்த தலத்தில் இருக்கும் சத்யாம்பிகை மிகவும் சக்தி உடைய அம்மனாக அருள் பாலிக்கிறார். வழக்குகளில் சுமுக தீர்வு ஏற்பட அம்மன் சாட்சியாக சத்தியம் செய்வது வழக்கமாக உள்ளது. பொய் சத்தியம் கூறினால் கண் பார்வை பாதிக்கும் என்பது நம்பிக்கை.

தரிசன பயன்கள்: கண் பார்வையைக் காப்பவர் என்ற பொருளில் இத்தல இறைவனார் ’நேத்ரோதாரகேஸ்வர சுவாமி’ என்ற திருப்பெயர் பெற்றுள்ளார்

எப்படி செல்வது : திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் விக்கரவாண்டியைக் கடந்தவுடன் பண்ருட்டி செல்ல சாலை இடதுபுறம் பிரியும். அச்சாலையில் சென்றால் பனயபுரம் கூட்டு ரோடு வரும். இங்கு புதுச்சேரி செல்ல இடதுபுறம் திரும்பினால் ஆலயம் மிக அருகிலுள்ளது.

எங்கே தங்குவது: விழுப்புரம் 

தரிசன நேரம் : காலை 6:30 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் 8:30 மணி வரை





Monday, February 18, 2019

எலுமியன்கோட்டூர்-தெய்வநாயகேசுவரர் கோயில்

தேவார பாடல் :
மலையினார்பருப்பதந் துருத்திமாற்பேறு மாசிலாச்சீர்மறைக் காடுநெய்த்தானம்
நிலையினானெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கலையினார்மடப்பிணை துணையொடுந்துயிலக் கானலம்பெடைபுல்கிக் கணமயிலாலும்
இலையினார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ! என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: இலம்பையங்கோட்டூர், காஞ்சிபுரம் மாவட்டம்

மூலவர்: அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகரர்

அம்பாள்: கனக குஜாம்பிகை, தாயினும் நல்லாள், கோடேந்து முலையம்மை

ஸ்தல விருட்சம்:மரமல்லிகை

தீர்த்தம்: சந்திர தீர்த்தம், மல்லிகை தீர்த்தம், ரம்பை தீர்த்தம், நாகதீர்த்தம், தாமரை தீர்த்தம், பூதகண தீர்த்தம்

வழிபட்டோர்கள் : ரம்பை

ஸ்தல வரலாறு : திரிபுர சம்ஹாரத்தின் போது இறைவன் தேரேறி புறப்பட்டுச் சென்றார். அவருடன் சென்ற தேவர்கள் விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவர் தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே விழாமல் மகாவிஷ்ணு அதைத் தாங்கிப் பிடித்தார். அப்போது சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை கீழே விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.அந்த இடம் தான் இத்தலம் என்று தல புராணம் கூறுகிறது. தேவர்கள் படைக்கு தலைமை ஏற்று திரிபுர சம்ஹாரம் செய்ததாலும், அவர்களால் வழிபடப் பெற்றதாலும் இத்தல இறைவன் தெய்வநாதேஸ்வரர் என்று கெயர் பெற்றார்.

மேலும் தேவலோக மங்கையான அரம்பை இத்தல இறைவனை பூஜித்து தனக்கு என்றும் மாறாத இளமை வேண்டுமென்று பிரார்த்தித்தாள். அரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் ஆயிற்று. பிறகு நாளடைவில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்குகிறது.

ஆலய சிறப்புகள்: ஞானசம்பந்தர் மற்ற தொண்டை நாட்டுத் தலங்களை தரிசித்துக் கொண்டு இத்தலம் வழியே வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறு பிள்ளையாகவும், பின் ஒரு முதியவர் போன்றும் தோன்றி வழிமறித்து இக்கோவில் இருப்பதை உணர்த்த கூட வந்த அடியார்கள் அதை தெரிந்து கொள்ளவில்லை. பினபு இறைவன் ஒரு வெள்ளைப் பசு உருவில் வந்து சம்பந்தர் எறி வந்த சிவிகையை முட்டியது. சீர்காழிப் பிள்ளையான சம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் படி அதைத் தொடர்ந்து செல்ல இத்தலத்தின் அருகே வந்தவுடன் பசு மறைந்து விட்டது.

தரிசன பயன்கள்: மன இறுக்கம் உள்ளோர் திங்களன்றும் வியாழனன்றும் தெய்வநாயகேஸ்வரரையும் யோகதட்சிணாமூர்த்தியையும் 11 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட இழந்த வலிமையைப் பெறுவர் என்பது தொன்நம்பிக்கை. சர்ம சம்பந்த நோய்களுக்கும் பரிகார தலமாக உள்ளது.

குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.

எப்படி செல்வது : திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம். சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம்.

எங்கே தங்குவது: சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரை




Sunday, February 17, 2019

கூவம்-திரிபுராந்தகர் கோயில்

தேவார பாடல் :
உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே

அழகே உருவான உமாதேவியோடு ஒன்றிநின்ற, செல்வரான சிவபெருமான் தம் சடைமுடியில் திங்களும், கங்கையும் சூடியவர். வானவர்கள் அஞ்சித் தொழுது போற்றுமாறு, வெகுண்டெழுந்து போர்க்கோலம் பூண்டு வில்லேந்தி, அப்பெருமான் வீற்றிருந்தருளுகிற இடம் திருவிற்கோலம் ஆகும் என திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது.

ஊர்: கூவம், திருவள்ளூர் மாவட்டம், பழைய பெயர் கூவரம்.

மூலவர்: திரிபுராந்தகர்,திருவிற்கோலநாதர், திரிபுராந்தகேசுவரர்

அம்பாள்: சோமாஸ்கந்தர்

ஸ்தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: அக்னி தீர்த்தம்

வழிபட்டோர்கள் : 

ஸ்தல வரலாறு : இத்தலம் சிவபெருமான் நிகழ்த்திய திரிபுர சம்ஹாரத்துடன் சம்பந்தம் கொண்டதாகும். சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட போது முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டு கிளம்பாததால் சிவன் ஏறிய தேரின் அச்சு முறிந்து விட்டது. பிறகு விநாயகர் வழிபாடு செய்து புறப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் வில் கையிலேந்தி காட்சி கொடுப்பதால் இத்தலம் திருவிற்கோலம் என்ற பெயரில் ஒரு பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. இத்தலத்திலுள்ள விநாயகருக்கு அச்சிறுத்த விநாயகர் என்று பெயர்.

ஆலய சிறப்புகள்: முன்பு ஒரு காலத்தில் சென்னையில் ஓடி கொண்டிருக்கும் கூவம் நதியின் பிறிப்பிடமாக இந்த இடம் கருதப்படுகிறது. இந்த கோவிலிலுள்ள அக்னி தீர்த்தத்தில் கடுமையான வறட்சி காலத்திலும் இந்த அக்னி தீர்த்தம் வற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மை படரும் என்றும் சொல்லப்படுகின்றது.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்

எப்படி செல்வது : 
சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள ஊர் திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக கூவம் செல்கிறது. கூவம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 1கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது

எங்கே தங்குவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் 

தரிசன நேரம் :.காலை 6 முதல் 11 மணி வரையிலும் மாலை 4 முதல் இரவு 7-30 மணி வரை






Friday, February 15, 2019

திருநாரையூர்-சௌந்தரநாதர் கோயில்/விநாயகர் முதல் படை வீடு

தேவார பாடல் :
உரையினில் வந்தபாவ முணர்நோய்களும்ம செயறீங்கு குற்ற முலகில்
வரையினி லாமைசெய்த வவைதீரும் வண்ண மிகவேத்தி நித்த நினைமின்
வரைசிலை யாகவன்று மதின்மூன் றெரித்து வளர்கங்குல் நங்கை வெருவத்
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே

மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங் களைச் செற்று, வளரும் கங்குலில் உமையம்மை அஞ்சக் கடல் நஞ் சினை உண்ட சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கையால் தொழுதால் வாக்கு; மனம் காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும். அங்குள்ள பெருமானை அவ்வாறு தீருமாறு மிக ஏத்தி நித்தமும் நினைவீராக என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். மேலும் அப்பர் 2 பதிகங்களும் திருஞானசம்பந்தர் 3 பதிகங்களும் ஆகா மொத்தம் 5 பதிகங்களை கொண்ட அற்புத ஸ்தலம்.

ஊர்: திருநாரையூர், கடலூர் மாவட்டம்

மூலவர்: சவுந்தர்யேஸ்வரர்

அம்பாள்: திரிபுரசுந்தரி

ஸ்தல விருட்சம்: புன்னை

தீர்த்தம்: செங்கழுநீர்

வழிபட்டோர்கள் : கந்தர்வர்

ஸ்தல வரலாறு : கந்தர்வன் ஒருவன் ஆகாய வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் சாப்பிட்ட ஒரு பழத்தின் கொட்டையை கீழே போட்டான். அது அங்கு தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவர் மீது விழுந்தது. தவம் கலைந்த மகரிஷி, அவனை நாரையாக பிறக்கும்படி செய்து விட்டார். அவன் சாப விமோசனம் கேட்டு கதறியழுத போது இத்தலத்திலுள்ள சௌந்தரேஸ்வரரை தினமும் காசி கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து விமோசனம் பெறுக என்று கூறினார். சாபம் அடைந்த நாரை அதன்படி தினந்தோறும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டது. தனது வாயில் கங்கை நீரைக் கொண்டு வந்து இங்கிருந்த லிங்கத்திற்கு கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து கந்தர்வனாக மீண்டும் சுய வடிவம் பெற்றது. நாரை வந்து பூஜித்த தலம் என்பதால் இவ்வூர் "திருநாரையூர்" எனப்பட்டது.

அவ்வாறே செய்து வந்த நாரைக்கு, ஒருநாள் சோதனை நேர்ந்தது. காசியிலிருந்து கங்கை நீர் கொண்டு வரும் போது கடும் புயலும் மழையும் வீச, பறக்க முடியாமல் தவித்த நாரையின் சிறகுகள் காற்றின் வேகத்தால் பிய்ந்து விழுந்தன.
அவ்வாறு நாரையின் சிறகுகள் விழுந்த இடம், ’சிறகிழந்த நல்லூர்’ என வழங்கப்படுகிறது. அவ்வூர் திருநாரையூரிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது.சிறகிழந்து சிரமப்பட்ட நிலையிலும் தவழ்ந்து வந்து வழிபட்டு மோட்சம் பெற்றது நாரை. அதனால் இந்த ஊர் திருநாரையூர் என்று வழங்கப்பட்டது.

ஆலய சிறப்புகள்: சிவாலயமாக இருந்தாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் "பொள்ளாப் பிள்ளையார்" என அழைக்கப்படுகிறார். "பொள்ளா" என்றால் "உளியால் செதுக்கப்படாத" என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியார் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே நோன்றியவர்.

பொள்ளாப் பிள்ளையாரின் எல்லையற்ற கருணையினால்தான் தேவாரப் பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. மூவர் பாடிய தேவார பாடல்களை தொகுக்க ராஜராஜ சோழன் முயற்சித்தான். அவனுக்கு பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், இங்கு வந்து தனக்கு உதவும்படி கேட்டான். நம்பி, விநாயகரிடம் முறையிட்டார். அப்போது ஒலித்த அசரீரி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தென்மேற்கு மண்டபத்தில் திருமுறை சுவடிகள் இருப்பதாகக் கூறியது. இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிராகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது.

முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் இருப்பதைப்போல, அவரது அண்ணன் விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. இவற்றில் திருநாரையூர் தலம் முதல் படை வீடாகும். திருவண்ணாமலை, விருத்தாச்சலம், திருக்கடையூர், மதுரை, காசி ஆகியவை பிற தலங்களாகும். முழுமுதற்கடவுளான விநாயகரை முதல் படைவீடான இத்தலத்தில் வணங்குவது சிறப்பான பலம் தரும்.

தரிசன பயன்கள்: பிணி நோய்களும் கெடும், தீவினையால் உலகிற் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும்

எப்படி செல்வது : சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், சிதம்பரத்தில் இருந்து சுமார் 17 கி.மி. தொலைவிலும், காட்டுமன்னார்குடியில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவிலும் திருநாரையூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது.

எங்கே தங்குவது: சிதம்பரம், சீர்காழி 

தரிசன நேரம் :.6 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை 3-30 மணி முதல் இரவு 7-30 மணி வரை





Tuesday, February 12, 2019

திருவெண்ணெய்நல்லூர்-கிருபாபுரீசுவரர் கோயில்

தேவார பாடல் :
பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.

பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய, `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! என சுந்தரரால் முதல் பதிகம் பாடப்பெற்ற ஸ்தலம்.

ஊர்: திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம் மாவட்டம். பழைய பெயர் - திருவருள்துறை.

மூலவர்: கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்)

அம்பாள்: மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்)

ஸ்தல விருட்சம்: மூங்கில் மரம்

தீர்த்தம்: தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்

வழிபட்டோர்கள் : பார்வதி தேவி

ஸ்தல வரலாறு : சிவபெருமான் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனத் தலபுராணம் கூறுகிறது.

இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். ஆலாலசுந்தரரைத் தடுத்தாட்கொள்வதாகத் திருக் கயிலாயத் தில் முன்பு உறுதி கூறிய சிவபெருமான் நம்பியாரூரரைத் தடுத்தாட் கொள்ள விரும்பி முதிய வேதியராய்த் திருமேனிகொண்டு தளர்ந்த நடையோடு தண்டூன்றித் சுந்தரர் திருமணத்திற்கு சென்றார் .இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச் சென்று அவரை ஆட்கொண்டார்.

ஆலய சிறப்புகள்: சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் எழுந்தருளியிருந்த தலமும் இது. இம் மெய்கண்ட தேவருக்கு அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார் ஆவர். அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில்மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.

இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் "பித்தா பிறைசூடி" என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது. ஆலயத்திற்கு வெளியே வழக்காடு மன்றம் ஒன்று அமைந்துள்ளது. மேலும் இறைவன் அணிந்து வந்ததாக கூறப்படும் பாத ரட்சை ஒன்று கருவறையில் காணலாம்.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள் மேலும் வழக்கு சம்பந்தமான சிக்கல்கள் தீர இறைவன் அருள்புரிகிறார்.

எப்படி செல்வது : திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றின் தென்கரையில் திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. திருக்கோவிலூரில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூரில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.

எங்கே தங்குவது: விழுப்புரம் 

தரிசன நேரம் :.காலை 6:30 மணி முதல் 12 வரையிலும், மாலை 5 மணி முதல் 8:30 மணி வரை.




Sunday, February 10, 2019

திருமாணிக்குழி-வாமனபுரீசுவரர் கோயில்

தேவார பாடல் :
பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு பங்கர் புனல் தங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம்
கன்னி இளவாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்வாய்
மன்னி இளமேதிகள் படிந்து மனை சேர் உதவிமாணிகுழியே.

சிவபெருமான் பொன்மயமான இமயமலை அரசனின் மகளான உமாதேவியைத் தன்திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். கங்கைநீர் தங்கிய சடையில் வன்னிப் பத்திரத்துடன் பொன்னூமத்தம் பூவை அணிந்த வலிய அறிவுருவான அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, வரப்பின்மேல் இள வள்ளைக் கொடிகள் படர்ந்த சேற்றையுடைய வயலில், இள வாளை மீன்கள் துள்ளிப்பாய, இள எருமைகள் அதில் படிந்து வீடுசேரும், நீர்வளமும் நிலவளமுமிக்க திருமாணிகுழி ஆகும்.

ஊர்: திருமாணிக்குழி,கடலூர் மாவட்டம்

மூலவர்: வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர்

அம்பாள்: அம்புஜாட்சி, மாணிக்கவல்லி

ஸ்தல விருட்சம்: கொன்றை

தீர்த்தம்: சுவேத, கெடில நதி

வழிபட்டோர்கள் : திருமால்

ஸ்தல வரலாறு : 
திருமால் பிரம்மசாரியாக வந்து மாகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து சிவபெருமானை ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோயில் மாணிகுழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி). இத்தலத்தை சம்பந்தர் உதவிமாணிகுழி என்றே தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். இதனால் உதவி என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் மாணிகுழி என்னும் கோயிற் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, அவன் இறைவனை தியானித்து உதவி கேட்டு முறையிட, இறைவனும் அவ்வணிகனை திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார். இதனால் இத்தலம் உதவி என்றும் இறைவன் உதவிநாயகர் என்றும் இறைவி உதவி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதற்கு மேலும் சான்றாகக் கல்வெட்டிலும் இத்தலம் "உதவி" என்றே குறிக்கப் பெறுகின்றது.

ஆலய சிறப்புகள்: இங்கு மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது.,எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது. மேலும் மகாவிஷ்ணு மாணியாக, அதாவது பிரம்மசாரியாக வழிபடுவதற்கு இடையூறு இல்லாமல் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. தீபாராதனையின் போது மட்டும் திரையை விலக்கி சற்று நேரம் மட்டும் இறைவனை தரிசிக்க அர்ச்சகர்கள் வாய்ப்பு தருவார்கள். அச்சமயம் மட்டுமே சிறிய ஆவுடையார் மீதுள்ள சிறிய சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கும் பேறு கிடைக்கும். இறைவனை மறைத்திருக்கும் திரைச்சீலையில் பீமருத்திரர் உருவம் சித்திரமாய் தீட்டப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை, பூஜை முதலியன முதலில் பீமருத்திரருக்குத் தான் நடைபெறும். பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்

எப்படி செல்வது : கடலூர் நகரில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் மேற்கு திசையில் திருமாணிகுழி உள்ளது. கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோவில் அடையலாம்.

எங்கே தங்குவது: கடலூர், புதுச்சேரி 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 முதலி இரவு 8-30 வரை



Wednesday, February 6, 2019

திருஆமாத்தூர் - அழகிய நாதர்

தேவார பாடல் :
காண்டனன் காண்டனன் காரிகை
யாள்தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்
தூர்எம் மடிகட்காட்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று
சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித்
தல்லா தவர்கட்கே.

அடியேன், திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனை, உமையம்மைக்குக் கணவனாகக் கண்டேன்; அவனுக்கு அடிமை பூண்டேன்; அடிமையைப் பலகாலும் செய்தேன்; இவை பொய்யல்ல; இன்னும் சொல்லுவேன்; கேண்மின்; வேத நெறியைப் போற்றுவோரல்லாதவர்களை நீங்கினேன் என சுந்தரர் பாடியுள்ளார். மேலும் திருநாவுக்கரசர் 2 பதிகங்களும், திருஞானசம்பந்தர் 2 பதிகங்களும் பாடியுள்ளனர்.

ஊர்: திருஆமாத்தூர், விழுப்புரம் மாவட்டம்

மூலவர்: அழகிய நாதர், அபிராமேஸ்வரர்

அம்பாள்: அழகிய நாயகி, முத்தாம்பிகை

ஸ்தல விருட்சம்:வன்னி

தீர்த்தம்: ஆம்பலப்பொய்கை

வழிபட்டோர்கள் : காமதேனு

ஸ்தல வரலாறு : ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை நதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது.

வட்டப்பாறை வரலாறு - இந்த கோயிலுக்கு எதிரே அம்மன் சன்னதி உள்ளது. அம்பிகை சந்நிதியின் பிரகாரச் சுற்றில் தென் புறம் ஒரு வட்டப் பாறையும், அருகில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.

வட்டப்பாறை அம்மன் சந்நிதி தொடர்பாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது - அண்ணன் ஒருவன் இளையவனான தன் தம்பியை ஏமாற்றிச் சொத்தினைத் தனக்குச் சேர்த்துக் கொண்டான். வயது வந்து உண்மையறிந்த தம்பி அண்ணனிடம் சென்று தனக்குரிய சொத்தைத் தருமாறு கேட்டான். அண்ணன் மறுக்க, தம்பி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்தார் வட்டப்பாறை அம்பாள் சந்நிதியில் அண்ணனை சத்தியம் செய்து தருமாறு கூறினர். அண்ணன் இதற்கென ஒரு சூழ்ச்சி செய்தான். தம்பியின் சொத்தால் பெற்ற மதிப்பைத் திரட்டிப் பொன் வாங்கி அதைத் தன் கைத்தடியில் பூணுக்குள் மறைத்துக் கொண்டான். அத்தடியுடன் பஞ்சாயத்து நடக்கும் அவைக்கு வந்து, தம்பியிடம் தடியைத் தந்துவிட்டு, அம்பாள் சந்நிதியில் இருகைகளாலும் "‘தன்னிடம் தம்பியின் சொத்து ஏதுமில்லை, எல்லாம் அவனிடமே உள்ளது" என்று சத்தியம் செய்து கொடுத்தான். சூழ்ச்சியறியாத அனைவரும் வேறுவழியின்றி அவனைத் தம்பியுடன் அனுப்பி விட்டனர். தம்பியிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட கைத்தடியுடன் சென்ற அண்ணன், இத்தலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள தும்பூர் நாகம்மன் கோயிலை அடைந்தபோது அம்பாளின் தெய்வ சக்தி தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று இறுமாப்புக் கொண்டு அம்பாளையும் சேர்த்துத் திட்டினானாம். அப்போது கரும்பாம்பு ஒன்று தோன்றி அவனைக் கடித்துச் சாகடித்தது என்று வரலாறு சொல்லப்படுகிறது. அவ்வாறு கடித்துச் சாகடித்த இடத்தில் இன்றும் பெரிய நாகச்சிலை ஒன்றுள்ளது. இந்நிகழ்ச்சியை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் முத்தாம்பிகை அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம் உள்ளது.

ஆலய சிறப்புகள்: இறைவன் ஒரு சுயம்பு மூர்த்தியாவார். பசுக்கள் பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறை போல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு தென்படுகிறது. இறைவன் சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படுகிறார்

அம்பாள் தனி கோயிலில் எதிரே வீற்றிருப்பது சிறப்பு. மூவர் பாடல் பெற்ற தலம்.

தரிசன பயன்கள்: இந்த திரு ஆமாத்தூர் தலத்தை யார் புகழ்ந்து பேசினாலும் அல்லது மற்றவர்கள் புகழக் கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தல புராண வரலாறு கூறுகிறது. தீராத சிக்கல்கள்,  பங்காளி இடையே நடக்கும் சொத்து சண்டைக்கு  தீர்வு கிடைக்கும்.

எப்படி செல்வது : விழுப்புரம் - திருவண்ணாமலை - செஞ்சி பேருந்துச் சாலையில், 2. கி.மீ. சென்றால் "திருவாமாத்தூர்" கைகாட்டி உள்ளது. அங்கு இடப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில் 6 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். விழுப்புரம் - சூரப்பட்டு நகரப் பேருந்து திருவாமாத்தூர் வழியாகச் செல்கிறது. விழுப்புரம் சென்னையில் இருந்து 160 கி.மி. தொலைவில் உள்ளது.

எங்கே தங்குவது: விழுப்புரம் 

தரிசன நேரம் :. காலை 6 மணி 12 முதல் மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் 8:30 மணி வரை .







Sunday, February 3, 2019

திருவாண்டார் கோயில் - வடுகீஸ்வரர்

தேவார பாடல் :
சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்;
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்;
கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார்
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே.

சுடும் தன்மை மிக்க தீப மாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலத்தினரும், கொடிய மழுவாயுதம் ஒன்றைக் கையில் உடையவரும், விடையை ஊர்ந்து வருபவரும், நீர் வளம் மிக்க வடுகூர் இறைவர் ஆவார். மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும் ஆவர்.

ஊர்: திருவாண்டார் கோயில், புதுச்சேரி மாநிலம். தேவார பெயர் வடுகூர்.

மூலவர்: வடுகீஸ்வரர், வடுகநாதர், வடுகூர் நாதர்.

அம்பாள்: திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கண்ணி.

ஸ்தல விருட்சம்: வன்னி

தீர்த்தம்: வாமதேவ தீர்த்தம்.

வழிபட்டோர்கள் : முண்டாசுரன்

ஸ்தல வரலாறு : முண்டாசுரன் என்ற அசுரன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து அவரிடமிருந்து தேவாசுரர்களாலும், பிறரால் சாகாமலும் இருக்க வரங்கள் பெற்றான். வரங்கள் பெற்ற முண்டாசுரன் தேவர்கள், பிரம்மா ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். பிரம்மா முதலியோர் சிவனிடம் சரனடைந்தனர். சிவனின் ஆணைப்படி வடுகபைரவர் தோன்றி முண்டாசுரனை வதம் செய்கிறார். ஆகையால் இத்தலத்தில் சிவபெருமான் வடுகநாதர் என்றும், வடுகபைரவர் அசுரனைக் கொன்ற கொலைப்பழி தீர தவம் செய்து பேறு பெற்றதால் இத்தலம் வடுகூர் என்றும் பெயர் பெற்றது. ஆண்டார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர். கோயிலின் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று. ஆண்டார் கோயில் என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில்

ஆலய சிறப்புகள்: இறைவனின் அறுபத்து நான்கு (அஷ்டாஷ்ட) வடிவங்களுள் வடுகக்கோலமும் ஒன்றாகும். அஷ்டபைரவ மூர்த்தங்களுள் வடுக பைரவக் கோலமும் அடங்கும். அவையாவன - 1. அசிதாங்க பைரவர் 2. ருருபைரவர் 3. சண்டபைரவர் 4. குரோத பைரவர் 5. உன்மத்த பைரவர் 6. கபால பைரவர் 7. பீஷணபைரவர் 8. சம்ஹார பைரவர்.சம்ஹார பைரவரே வடுகபைரவர் என்றழைக்கப்படுபவராவார்.

இக்கோயில் சோழர்காலக் கலைப் பாணியில் அமைந்துள்ளது. சுவாமி விமானம் தஞ்சைக் கோயிலமைப்பிலுள்ளது. கோயில் தொல் பொருள் ஆய்வுத் துறையினரால் புதுப்பிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

தரிசன பயன்கள்: பைரவர் வழிபாட்டிற்கு விஷேச தலம். கார்த்திகை அஷ்டமியில் பைரவருக்கு இங்கு விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன.

எப்படி செல்வது : விழுப்புரம் - பாண்டிச்சேரி (வழி கோலியனூர், கண்டமங்கலம்) பேருந்துச் சாலையில் சென்று, கோலியனூர், வளவனார் தாண்டி, புதுவை மாநில எல்லைக்குள் நுழைந்து, சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலுள்ள 'திருவாண்டார் கோயிலை' அடையலாம். ஊரின் தொடக்கத்திலேயே இந்திய உணவுக் கார்ப்பரேஷன் அலுவலகத்தின் எதிரில் சாலையோரத்திலேயே கோயிலும் உள்ளது.

எங்கே தங்குவது: புதுச்சேரி 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை