Tuesday, February 12, 2019

திருவெண்ணெய்நல்லூர்-கிருபாபுரீசுவரர் கோயில்

தேவார பாடல் :
பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.

பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய, `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! என சுந்தரரால் முதல் பதிகம் பாடப்பெற்ற ஸ்தலம்.

ஊர்: திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம் மாவட்டம். பழைய பெயர் - திருவருள்துறை.

மூலவர்: கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்)

அம்பாள்: மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்)

ஸ்தல விருட்சம்: மூங்கில் மரம்

தீர்த்தம்: தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்

வழிபட்டோர்கள் : பார்வதி தேவி

ஸ்தல வரலாறு : சிவபெருமான் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனத் தலபுராணம் கூறுகிறது.

இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். ஆலாலசுந்தரரைத் தடுத்தாட்கொள்வதாகத் திருக் கயிலாயத் தில் முன்பு உறுதி கூறிய சிவபெருமான் நம்பியாரூரரைத் தடுத்தாட் கொள்ள விரும்பி முதிய வேதியராய்த் திருமேனிகொண்டு தளர்ந்த நடையோடு தண்டூன்றித் சுந்தரர் திருமணத்திற்கு சென்றார் .இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச் சென்று அவரை ஆட்கொண்டார்.

ஆலய சிறப்புகள்: சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் எழுந்தருளியிருந்த தலமும் இது. இம் மெய்கண்ட தேவருக்கு அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார் ஆவர். அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில்மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.

இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் "பித்தா பிறைசூடி" என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது. ஆலயத்திற்கு வெளியே வழக்காடு மன்றம் ஒன்று அமைந்துள்ளது. மேலும் இறைவன் அணிந்து வந்ததாக கூறப்படும் பாத ரட்சை ஒன்று கருவறையில் காணலாம்.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள் மேலும் வழக்கு சம்பந்தமான சிக்கல்கள் தீர இறைவன் அருள்புரிகிறார்.

எப்படி செல்வது : திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றின் தென்கரையில் திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. திருக்கோவிலூரில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூரில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.

எங்கே தங்குவது: விழுப்புரம் 

தரிசன நேரம் :.காலை 6:30 மணி முதல் 12 வரையிலும், மாலை 5 மணி முதல் 8:30 மணி வரை.




No comments:

Post a Comment