Friday, February 15, 2019

திருநாரையூர்-சௌந்தரநாதர் கோயில்/விநாயகர் முதல் படை வீடு

தேவார பாடல் :
உரையினில் வந்தபாவ முணர்நோய்களும்ம செயறீங்கு குற்ற முலகில்
வரையினி லாமைசெய்த வவைதீரும் வண்ண மிகவேத்தி நித்த நினைமின்
வரைசிலை யாகவன்று மதின்மூன் றெரித்து வளர்கங்குல் நங்கை வெருவத்
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே

மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங் களைச் செற்று, வளரும் கங்குலில் உமையம்மை அஞ்சக் கடல் நஞ் சினை உண்ட சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கையால் தொழுதால் வாக்கு; மனம் காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும். அங்குள்ள பெருமானை அவ்வாறு தீருமாறு மிக ஏத்தி நித்தமும் நினைவீராக என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். மேலும் அப்பர் 2 பதிகங்களும் திருஞானசம்பந்தர் 3 பதிகங்களும் ஆகா மொத்தம் 5 பதிகங்களை கொண்ட அற்புத ஸ்தலம்.

ஊர்: திருநாரையூர், கடலூர் மாவட்டம்

மூலவர்: சவுந்தர்யேஸ்வரர்

அம்பாள்: திரிபுரசுந்தரி

ஸ்தல விருட்சம்: புன்னை

தீர்த்தம்: செங்கழுநீர்

வழிபட்டோர்கள் : கந்தர்வர்

ஸ்தல வரலாறு : கந்தர்வன் ஒருவன் ஆகாய வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் சாப்பிட்ட ஒரு பழத்தின் கொட்டையை கீழே போட்டான். அது அங்கு தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவர் மீது விழுந்தது. தவம் கலைந்த மகரிஷி, அவனை நாரையாக பிறக்கும்படி செய்து விட்டார். அவன் சாப விமோசனம் கேட்டு கதறியழுத போது இத்தலத்திலுள்ள சௌந்தரேஸ்வரரை தினமும் காசி கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து விமோசனம் பெறுக என்று கூறினார். சாபம் அடைந்த நாரை அதன்படி தினந்தோறும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டது. தனது வாயில் கங்கை நீரைக் கொண்டு வந்து இங்கிருந்த லிங்கத்திற்கு கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து கந்தர்வனாக மீண்டும் சுய வடிவம் பெற்றது. நாரை வந்து பூஜித்த தலம் என்பதால் இவ்வூர் "திருநாரையூர்" எனப்பட்டது.

அவ்வாறே செய்து வந்த நாரைக்கு, ஒருநாள் சோதனை நேர்ந்தது. காசியிலிருந்து கங்கை நீர் கொண்டு வரும் போது கடும் புயலும் மழையும் வீச, பறக்க முடியாமல் தவித்த நாரையின் சிறகுகள் காற்றின் வேகத்தால் பிய்ந்து விழுந்தன.
அவ்வாறு நாரையின் சிறகுகள் விழுந்த இடம், ’சிறகிழந்த நல்லூர்’ என வழங்கப்படுகிறது. அவ்வூர் திருநாரையூரிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது.சிறகிழந்து சிரமப்பட்ட நிலையிலும் தவழ்ந்து வந்து வழிபட்டு மோட்சம் பெற்றது நாரை. அதனால் இந்த ஊர் திருநாரையூர் என்று வழங்கப்பட்டது.

ஆலய சிறப்புகள்: சிவாலயமாக இருந்தாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் "பொள்ளாப் பிள்ளையார்" என அழைக்கப்படுகிறார். "பொள்ளா" என்றால் "உளியால் செதுக்கப்படாத" என்று அர்த்தம். அதாவது, இந்தப் பிள்ளையார் உளியார் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே நோன்றியவர்.

பொள்ளாப் பிள்ளையாரின் எல்லையற்ற கருணையினால்தான் தேவாரப் பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. மூவர் பாடிய தேவார பாடல்களை தொகுக்க ராஜராஜ சோழன் முயற்சித்தான். அவனுக்கு பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், இங்கு வந்து தனக்கு உதவும்படி கேட்டான். நம்பி, விநாயகரிடம் முறையிட்டார். அப்போது ஒலித்த அசரீரி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தென்மேற்கு மண்டபத்தில் திருமுறை சுவடிகள் இருப்பதாகக் கூறியது. இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிராகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது.

முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் இருப்பதைப்போல, அவரது அண்ணன் விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. இவற்றில் திருநாரையூர் தலம் முதல் படை வீடாகும். திருவண்ணாமலை, விருத்தாச்சலம், திருக்கடையூர், மதுரை, காசி ஆகியவை பிற தலங்களாகும். முழுமுதற்கடவுளான விநாயகரை முதல் படைவீடான இத்தலத்தில் வணங்குவது சிறப்பான பலம் தரும்.

தரிசன பயன்கள்: பிணி நோய்களும் கெடும், தீவினையால் உலகிற் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும்

எப்படி செல்வது : சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், சிதம்பரத்தில் இருந்து சுமார் 17 கி.மி. தொலைவிலும், காட்டுமன்னார்குடியில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவிலும் திருநாரையூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது.

எங்கே தங்குவது: சிதம்பரம், சீர்காழி 

தரிசன நேரம் :.6 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை 3-30 மணி முதல் இரவு 7-30 மணி வரை





No comments:

Post a Comment