Wednesday, February 6, 2019

திருஆமாத்தூர் - அழகிய நாதர்

தேவார பாடல் :
காண்டனன் காண்டனன் காரிகை
யாள்தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்
தூர்எம் மடிகட்காட்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று
சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித்
தல்லா தவர்கட்கே.

அடியேன், திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனை, உமையம்மைக்குக் கணவனாகக் கண்டேன்; அவனுக்கு அடிமை பூண்டேன்; அடிமையைப் பலகாலும் செய்தேன்; இவை பொய்யல்ல; இன்னும் சொல்லுவேன்; கேண்மின்; வேத நெறியைப் போற்றுவோரல்லாதவர்களை நீங்கினேன் என சுந்தரர் பாடியுள்ளார். மேலும் திருநாவுக்கரசர் 2 பதிகங்களும், திருஞானசம்பந்தர் 2 பதிகங்களும் பாடியுள்ளனர்.

ஊர்: திருஆமாத்தூர், விழுப்புரம் மாவட்டம்

மூலவர்: அழகிய நாதர், அபிராமேஸ்வரர்

அம்பாள்: அழகிய நாயகி, முத்தாம்பிகை

ஸ்தல விருட்சம்:வன்னி

தீர்த்தம்: ஆம்பலப்பொய்கை

வழிபட்டோர்கள் : காமதேனு

ஸ்தல வரலாறு : ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை நதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது.

வட்டப்பாறை வரலாறு - இந்த கோயிலுக்கு எதிரே அம்மன் சன்னதி உள்ளது. அம்பிகை சந்நிதியின் பிரகாரச் சுற்றில் தென் புறம் ஒரு வட்டப் பாறையும், அருகில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.

வட்டப்பாறை அம்மன் சந்நிதி தொடர்பாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது - அண்ணன் ஒருவன் இளையவனான தன் தம்பியை ஏமாற்றிச் சொத்தினைத் தனக்குச் சேர்த்துக் கொண்டான். வயது வந்து உண்மையறிந்த தம்பி அண்ணனிடம் சென்று தனக்குரிய சொத்தைத் தருமாறு கேட்டான். அண்ணன் மறுக்க, தம்பி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்தார் வட்டப்பாறை அம்பாள் சந்நிதியில் அண்ணனை சத்தியம் செய்து தருமாறு கூறினர். அண்ணன் இதற்கென ஒரு சூழ்ச்சி செய்தான். தம்பியின் சொத்தால் பெற்ற மதிப்பைத் திரட்டிப் பொன் வாங்கி அதைத் தன் கைத்தடியில் பூணுக்குள் மறைத்துக் கொண்டான். அத்தடியுடன் பஞ்சாயத்து நடக்கும் அவைக்கு வந்து, தம்பியிடம் தடியைத் தந்துவிட்டு, அம்பாள் சந்நிதியில் இருகைகளாலும் "‘தன்னிடம் தம்பியின் சொத்து ஏதுமில்லை, எல்லாம் அவனிடமே உள்ளது" என்று சத்தியம் செய்து கொடுத்தான். சூழ்ச்சியறியாத அனைவரும் வேறுவழியின்றி அவனைத் தம்பியுடன் அனுப்பி விட்டனர். தம்பியிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட கைத்தடியுடன் சென்ற அண்ணன், இத்தலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள தும்பூர் நாகம்மன் கோயிலை அடைந்தபோது அம்பாளின் தெய்வ சக்தி தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று இறுமாப்புக் கொண்டு அம்பாளையும் சேர்த்துத் திட்டினானாம். அப்போது கரும்பாம்பு ஒன்று தோன்றி அவனைக் கடித்துச் சாகடித்தது என்று வரலாறு சொல்லப்படுகிறது. அவ்வாறு கடித்துச் சாகடித்த இடத்தில் இன்றும் பெரிய நாகச்சிலை ஒன்றுள்ளது. இந்நிகழ்ச்சியை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் முத்தாம்பிகை அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம் உள்ளது.

ஆலய சிறப்புகள்: இறைவன் ஒரு சுயம்பு மூர்த்தியாவார். பசுக்கள் பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறை போல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு தென்படுகிறது. இறைவன் சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படுகிறார்

அம்பாள் தனி கோயிலில் எதிரே வீற்றிருப்பது சிறப்பு. மூவர் பாடல் பெற்ற தலம்.

தரிசன பயன்கள்: இந்த திரு ஆமாத்தூர் தலத்தை யார் புகழ்ந்து பேசினாலும் அல்லது மற்றவர்கள் புகழக் கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தல புராண வரலாறு கூறுகிறது. தீராத சிக்கல்கள்,  பங்காளி இடையே நடக்கும் சொத்து சண்டைக்கு  தீர்வு கிடைக்கும்.

எப்படி செல்வது : விழுப்புரம் - திருவண்ணாமலை - செஞ்சி பேருந்துச் சாலையில், 2. கி.மீ. சென்றால் "திருவாமாத்தூர்" கைகாட்டி உள்ளது. அங்கு இடப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில் 6 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். விழுப்புரம் - சூரப்பட்டு நகரப் பேருந்து திருவாமாத்தூர் வழியாகச் செல்கிறது. விழுப்புரம் சென்னையில் இருந்து 160 கி.மி. தொலைவில் உள்ளது.

எங்கே தங்குவது: விழுப்புரம் 

தரிசன நேரம் :. காலை 6 மணி 12 முதல் மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் 8:30 மணி வரை .







No comments:

Post a Comment