Sunday, February 24, 2019

திருத்தளூர் (திருத்துறையூர்) - சிஷ்டகுருநாதேசுவரர் திருக்கோயில்

தேவார பாடல் :
மலையாரரு வித்திரள்
    மாமணி யுந்திக்
குலையாரக்கொணர்ந் தெற்றிஓர்
    பெண்ணை வடபால்
கலையார் அல்குற் கன்னியர்
    ஆடுந் துறையூர்த்
தலைவாஉனை வேண்டிக்கொள்
    வேன்தவ நெறியே

மலையிற் பொருந்திய அருவிக் கூட்டம், பெரிய மணிகளைத் தள்ளிக் கொணர்ந்து கரை நிறைய எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண், நல்லஆடையை அணிந்த அல்குலையுடைய கன்னிப்பெண்கள் மூழ்கி விளையாடும் ஒரு துறையைச் சார்ந்த ஊராகிய திருத்துறையூரின்கண் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன் ; வேறொன்றையும் வேண்டேன் என சுந்தரரால் பாடப்பெற்றது.

ஊர்: திருத்தளூர்திருத்துறையூர் எனவும் வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ளது. பழைய பெயர் - திருத்துறையூர்

மூலவர்: சிஷ்டகுருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர்

அம்பாள்: சிவலோகநாயகி, பூங்கோதை

ஸ்தல விருட்சம்:கொன்றை

தீர்த்தம்: சூர்யபுஷ்கரிணி

வழிபட்டோர்கள் : சுந்தரமூர்த்தி நாயனார்

ஸ்தல வரலாறு :  சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு 'பித்தாய் பிறை சூடி பெருமானே' என பதிகம் பாடியபின்  திருவெண்ணெய் நல்லூரில் இருந்து சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடினார். அப்போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும், பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்தனர். கரையில் இறங்கிய பிறகு இறைவன் சுந்தரர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டார். சுந்தரர் சுற்றிலும் தேடிப்பார்த்தார். ஆனாலும் வயதான் தம்பதியைக் காணவில்லை. அப்போது "நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்" என்று அசரீரி வாக்கு கேட்க, சுந்தரர் மேலே பார்த்தபோது சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார். சுந்தரர் இறைவனை வணங்கி தனக்கு உபதேசம் செய்யும்படி கூறினார். சிவபெருமானும் சுந்தரருக்கு குருவாக இருந்து தவநெறி உபதேசம் செய்தார். எனவே தான் இறைவனுக்கு தவநெறி ஆளுடையார், சிஷ்டகுருநாதேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.

இவ்வூருக்குக் அருகில் கீழப்பாக்கம் என்றொரு ஊர் உள்ளது. இஙுகு ஒரு சிவலிங்கமும் உள்ளது. இவ்விடத்தில் தான் இறைவன் முதியவர் உருவில் சுந்தரருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்ததாகவும் பின்பு ரிஷபாரூடராக ஆலய விமானத்தில் காட்சி கொடுத்ததாகவும் தல புராணம் தெரிவிக்கிறது

ஆலய சிறப்புகள்: இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்பகழில் பாடியுள்ளார்.

சைவ சமயத்தின் சந்தானக் குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியார் பிறந்து வாழ்ந்தத் திருத்தலம் திருத்துறையூர். இவர் முக்தி அடைந்தத் திருத்தலமும் இதுவே. இவரது ஜீவசமாதியும் திருத்துறையூரிலேயே அமைந்துள்ளது.

தரிசன பயன்கள்: இத்தல இறைவனார் சுந்தரருக்குச் குருவாக அமர்ந்து உபதேசம் செய்தவர். எனவே குரு தோஷ நிவர்த்தித் தலமாக அமைந்துள்ளது

எப்படி செல்வது : பண்ருட்டியில் இருந்து சென்னை செல்லும் NH45C சாலையில் கந்தாரகோட்டை அடைந்து அங்கிருந்து இடதுபுறம் திரும்பிச் செல்லும் திருத்துறையூர் சாலையில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.

எங்கே தங்குவது: விழுப்புரம், கடலூர் 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் 11:30 மணி வரை மாலை 5 மணி முதல் 7:30 மணி வரை 










No comments:

Post a Comment