Sunday, February 10, 2019

திருமாணிக்குழி-வாமனபுரீசுவரர் கோயில்

தேவார பாடல் :
பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு பங்கர் புனல் தங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம்
கன்னி இளவாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்வாய்
மன்னி இளமேதிகள் படிந்து மனை சேர் உதவிமாணிகுழியே.

சிவபெருமான் பொன்மயமான இமயமலை அரசனின் மகளான உமாதேவியைத் தன்திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். கங்கைநீர் தங்கிய சடையில் வன்னிப் பத்திரத்துடன் பொன்னூமத்தம் பூவை அணிந்த வலிய அறிவுருவான அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, வரப்பின்மேல் இள வள்ளைக் கொடிகள் படர்ந்த சேற்றையுடைய வயலில், இள வாளை மீன்கள் துள்ளிப்பாய, இள எருமைகள் அதில் படிந்து வீடுசேரும், நீர்வளமும் நிலவளமுமிக்க திருமாணிகுழி ஆகும்.

ஊர்: திருமாணிக்குழி,கடலூர் மாவட்டம்

மூலவர்: வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர்

அம்பாள்: அம்புஜாட்சி, மாணிக்கவல்லி

ஸ்தல விருட்சம்: கொன்றை

தீர்த்தம்: சுவேத, கெடில நதி

வழிபட்டோர்கள் : திருமால்

ஸ்தல வரலாறு : 
திருமால் பிரம்மசாரியாக வந்து மாகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து சிவபெருமானை ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோயில் மாணிகுழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி). இத்தலத்தை சம்பந்தர் உதவிமாணிகுழி என்றே தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். இதனால் உதவி என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் மாணிகுழி என்னும் கோயிற் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, அவன் இறைவனை தியானித்து உதவி கேட்டு முறையிட, இறைவனும் அவ்வணிகனை திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார். இதனால் இத்தலம் உதவி என்றும் இறைவன் உதவிநாயகர் என்றும் இறைவி உதவி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதற்கு மேலும் சான்றாகக் கல்வெட்டிலும் இத்தலம் "உதவி" என்றே குறிக்கப் பெறுகின்றது.

ஆலய சிறப்புகள்: இங்கு மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது.,எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது. மேலும் மகாவிஷ்ணு மாணியாக, அதாவது பிரம்மசாரியாக வழிபடுவதற்கு இடையூறு இல்லாமல் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. தீபாராதனையின் போது மட்டும் திரையை விலக்கி சற்று நேரம் மட்டும் இறைவனை தரிசிக்க அர்ச்சகர்கள் வாய்ப்பு தருவார்கள். அச்சமயம் மட்டுமே சிறிய ஆவுடையார் மீதுள்ள சிறிய சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கும் பேறு கிடைக்கும். இறைவனை மறைத்திருக்கும் திரைச்சீலையில் பீமருத்திரர் உருவம் சித்திரமாய் தீட்டப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை, பூஜை முதலியன முதலில் பீமருத்திரருக்குத் தான் நடைபெறும். பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்

எப்படி செல்வது : கடலூர் நகரில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் மேற்கு திசையில் திருமாணிகுழி உள்ளது. கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோவில் அடையலாம்.

எங்கே தங்குவது: கடலூர், புதுச்சேரி 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 முதலி இரவு 8-30 வரை



No comments:

Post a Comment