Thursday, February 21, 2019

பனையபுரம் - பனங்காட்டீஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்விரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே

வானில் உலவும் வன்மை உடைய முப்புரங்களைக் கொடிய கணையால் எய்து வீழ்த்தினாய். இசைபாடுவோரின் விரிந்த பண்ணிசையொலி சேர்ந்துள்ள புறவார்பனங்காட்டூரில் உமையொருபாகனாக வீற்றிருக்கும் பிஞ்ஞகா! பிறைசேரும் நெற்றியில் கண் பொருந்தியவனே! உன்னை நேசித்தவர்கட்கு அருள்வாயாக என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: பனையபுரம், விழுப்புரம் மாவட்டம், பழைய பெயர் புறவார் பனங்காட்டூர, பரவைபுரம்.

மூலவர்: பனங்காட்டீஸ்வரர்,பனங்காட்டீசன்,நேத்ரோதாரகேஸ்வர சுவாமி

அம்பாள்: சத்யாம்பிகை,மெய்யாம்பிகை, புறவம்மை

ஸ்தல விருட்சம்: பனை

தீர்த்தம்: பத்ம தீர்த்தம்

வழிபட்டோர்கள் : சூரியன்

ஸ்தல வரலாறு : சிவபெருமானை நிந்தித்துத் தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவன். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சூரியன் சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான்.

கல்வெட்டுகள் மூலம் இரண்டாம் ராஜேந்திர சோழ மன்னனின் (கி.பி 1052-1064) தேவியான பரவை நங்கை இத்தல இறைவனார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்ததால் ஏராளம் கொடையளித்தது தெரியவருகின்றது. இவரது பெயராலேயே ’பரவைபுரம்’ என்றழைக்கப்பட்டு பின்னர் பனையபுரம் என்றானது

ஆலய சிறப்புகள்: சூரியன் வழிபட்ட பாஸ்கர தலங்களில் பனங்காட்டூர் என்ற் இத்தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.

இந்த தலத்தில் இருக்கும் சத்யாம்பிகை மிகவும் சக்தி உடைய அம்மனாக அருள் பாலிக்கிறார். வழக்குகளில் சுமுக தீர்வு ஏற்பட அம்மன் சாட்சியாக சத்தியம் செய்வது வழக்கமாக உள்ளது. பொய் சத்தியம் கூறினால் கண் பார்வை பாதிக்கும் என்பது நம்பிக்கை.

தரிசன பயன்கள்: கண் பார்வையைக் காப்பவர் என்ற பொருளில் இத்தல இறைவனார் ’நேத்ரோதாரகேஸ்வர சுவாமி’ என்ற திருப்பெயர் பெற்றுள்ளார்

எப்படி செல்வது : திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் விக்கரவாண்டியைக் கடந்தவுடன் பண்ருட்டி செல்ல சாலை இடதுபுறம் பிரியும். அச்சாலையில் சென்றால் பனயபுரம் கூட்டு ரோடு வரும். இங்கு புதுச்சேரி செல்ல இடதுபுறம் திரும்பினால் ஆலயம் மிக அருகிலுள்ளது.

எங்கே தங்குவது: விழுப்புரம் 

தரிசன நேரம் : காலை 6:30 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் 8:30 மணி வரை





No comments:

Post a Comment