Thursday, February 28, 2019

காஞ்சிபுரம் - திருமேற்றளீசுவரர் கோயில் - மஹாவிஷ்ணு லிங்க ஸ்வரூபம் பெற்ற கோயில்

தேவார பாடல் :
ஞானசம்பந்தர் பாடிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை. சுந்தரர் அருளிய பாடல் கீழே வருமாறு

நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்; 
வந்தாய்; போய் அறியாய்; மனமே புகுந்து நின்ற 
சிந்தாய்! எந்தைபிரான்! திரு மேற்றளி உறையும் 
எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே.

அவியாத ஒளிபொருந்திய விளக்குப் போல்பவனே, என் தந்தைக்கும் பெருமானே, கச்சித்திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே, உன்னையே நினைந்திருந்த என் உள்ளத்திலே புகுந்துநின்ற சிந்தனைப் பொருளே, என் உள்ளத்தில் புகுந்த நீ பின் நீங்கியறியாய்; ஆதலின், இனி அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன்.

ஊர்: காஞ்சிபுரம்


மூலவர்: திருமேற்றளீஸ்வரர்,ஓதவுருகீஸ்வரர்

அம்பாள்: காமாட்சி அம்மன்

ஸ்தல விருட்சம்: காரை

தீர்த்தம்: விஷ்ணு தீர்த்தம்

வழிபட்டோர்கள் : மகாவிஷ்ணு

ஸ்தல வரலாறு : 
மகாவிஷ்ணுவிற்கு சிவனின் லிங்க வடிவம் பெற வேண்டும் என்ற ஆவல் எழ  சிவசொரூபம் கிடைக்க அருளும்படி சிவனிடம் வேண்டினார். விஷ்ணுவின் மன திடத்தை கண்டு வியந்த சிவன் அவருக்கு அருள்புரிய எண்ணம் கொண்டார். அவரிடம் இத்தலத்தில் மேற்கு நோக்கி சுயம்புவாக வீற்றிருக்கும் தன்னை வேண்டி தவம் செய்து வழிபட்டு வர லிங்க வடிவம் கிடைக்கப் பெறும் என்றார். அதன்படி இத்தலம் வந்த மகாவிஷ்ணு தீர்த்தத்தில் நீராடி வேகவதி நதிக்கரையில் சிவனை நோக்கி கிழக்கு பார்த்து நின்ற கோலத்திலேயே தவம் செய்தார். சிவத்தல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர் இத்தலம் வந்த போது தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன்தான் என்று எண்ணி, சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவாறே பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணு லிங்க வடிவம் பெற்றபோது சம்பந்தர் தனது பதகத்தைப் பாடி முடித்தார். எனவே, இறுதியில் அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும், அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம். சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர் ஓதஉருகீஸ்வரர் என்ற பெயருடன் இவ்வாலயத்தில் கிழக்கு நோக்கி சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.

ஆலய சிறப்புகள்: இரு மூலவர் சந்நிதிகள் கொண்ட கோயில். ஆலயம் அமைந்துள்ள தெருவின் மற்றோரு கோடியில் திருஞானசம்பந்தருக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது. மூலத்திருமேனி திருமேற்றளிக் கோபுரத்தை நோக்கியவாறு கைகளைக் குவித்து வணங்கும் நிலையில் நின்ற கோலத்தில் உள்ளது. இவரின் உற்சவத் திருமேனி வலக்கை சுட்டிய விரலுடன் இடக்கையில் பொற்கிண்ணம் ஏந்திய நிலையில் பக்கத்தில் உள்ளது. இத்தெருவின் நடுவில் "உற்றுக்கேட்ட முத்தீசர்" ஆலயம் உள்ளது. ஞானசம்பந்தர் இத்தலம் வந்து பதிகம் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாக வரலாறு.

தரிசன பயன்கள்: 

எப்படி செல்வது :  காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் பிள்ளையார்பாளயம் என்னும் இடத்தில் திருமேற்றளித் தெருவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

எங்கே தங்குவது: காஞ்சிபுரம்

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

No comments:

Post a Comment