Sunday, February 3, 2019

திருவாண்டார் கோயில் - வடுகீஸ்வரர்

தேவார பாடல் :
சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்;
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்;
கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார்
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே.

சுடும் தன்மை மிக்க தீப மாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலத்தினரும், கொடிய மழுவாயுதம் ஒன்றைக் கையில் உடையவரும், விடையை ஊர்ந்து வருபவரும், நீர் வளம் மிக்க வடுகூர் இறைவர் ஆவார். மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும் ஆவர்.

ஊர்: திருவாண்டார் கோயில், புதுச்சேரி மாநிலம். தேவார பெயர் வடுகூர்.

மூலவர்: வடுகீஸ்வரர், வடுகநாதர், வடுகூர் நாதர்.

அம்பாள்: திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கண்ணி.

ஸ்தல விருட்சம்: வன்னி

தீர்த்தம்: வாமதேவ தீர்த்தம்.

வழிபட்டோர்கள் : முண்டாசுரன்

ஸ்தல வரலாறு : முண்டாசுரன் என்ற அசுரன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து அவரிடமிருந்து தேவாசுரர்களாலும், பிறரால் சாகாமலும் இருக்க வரங்கள் பெற்றான். வரங்கள் பெற்ற முண்டாசுரன் தேவர்கள், பிரம்மா ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். பிரம்மா முதலியோர் சிவனிடம் சரனடைந்தனர். சிவனின் ஆணைப்படி வடுகபைரவர் தோன்றி முண்டாசுரனை வதம் செய்கிறார். ஆகையால் இத்தலத்தில் சிவபெருமான் வடுகநாதர் என்றும், வடுகபைரவர் அசுரனைக் கொன்ற கொலைப்பழி தீர தவம் செய்து பேறு பெற்றதால் இத்தலம் வடுகூர் என்றும் பெயர் பெற்றது. ஆண்டார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர். கோயிலின் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று. ஆண்டார் கோயில் என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில்

ஆலய சிறப்புகள்: இறைவனின் அறுபத்து நான்கு (அஷ்டாஷ்ட) வடிவங்களுள் வடுகக்கோலமும் ஒன்றாகும். அஷ்டபைரவ மூர்த்தங்களுள் வடுக பைரவக் கோலமும் அடங்கும். அவையாவன - 1. அசிதாங்க பைரவர் 2. ருருபைரவர் 3. சண்டபைரவர் 4. குரோத பைரவர் 5. உன்மத்த பைரவர் 6. கபால பைரவர் 7. பீஷணபைரவர் 8. சம்ஹார பைரவர்.சம்ஹார பைரவரே வடுகபைரவர் என்றழைக்கப்படுபவராவார்.

இக்கோயில் சோழர்காலக் கலைப் பாணியில் அமைந்துள்ளது. சுவாமி விமானம் தஞ்சைக் கோயிலமைப்பிலுள்ளது. கோயில் தொல் பொருள் ஆய்வுத் துறையினரால் புதுப்பிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

தரிசன பயன்கள்: பைரவர் வழிபாட்டிற்கு விஷேச தலம். கார்த்திகை அஷ்டமியில் பைரவருக்கு இங்கு விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன.

எப்படி செல்வது : விழுப்புரம் - பாண்டிச்சேரி (வழி கோலியனூர், கண்டமங்கலம்) பேருந்துச் சாலையில் சென்று, கோலியனூர், வளவனார் தாண்டி, புதுவை மாநில எல்லைக்குள் நுழைந்து, சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலுள்ள 'திருவாண்டார் கோயிலை' அடையலாம். ஊரின் தொடக்கத்திலேயே இந்திய உணவுக் கார்ப்பரேஷன் அலுவலகத்தின் எதிரில் சாலையோரத்திலேயே கோயிலும் உள்ளது.

எங்கே தங்குவது: புதுச்சேரி 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை






No comments:

Post a Comment