Friday, January 4, 2019

திருக்கச்சூர் - கச்சபேஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
முது வாய் ஓரி கதற, முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே! 
மது வார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள் தன் மணவாளா! 
கதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே? 
அதுவே ஆம் ஆறு இதுவோ? கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! .

பெரிய வாயை உடைய நரிகள் கூப்பிடப் புறங்காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே, கொன்றையினது தேன் ஒழுகுகின்ற புதிய பூவைச் சூடுகின்ற, மலையான் மகள் மணவாளனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ சென்று, முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உண் அடியவர் கவலைகொள்ளாரோ?

ஊர்: திருக்கச்சூர், காஞ்சிபுரம் மாவட்டம்

மூலவர்: கச்சபேசர், விருந்திட்டவரதர்

அம்பாள்: அஞ்சனாட்சியம்மை

ஸ்தல விருட்சம்: ஆல்

தீர்த்தம்: கூர்ம (ஆமை) தீர்த்தம்

வழிபட்டோர்கள் : 

ஸ்தல வரலாறு : அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது.

ஆலய சிறப்புகள்: சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமை திருக்கச்சூருக்கு உண்டு.அதனால் விருந்திட்ட ஈஸ்வரர் என்ற பெயரும் மூலவருக்கு உண்டு.

இரண்டு கோயில்கள் இங்கு உள்ளது, மலையடிவாரத்தில் உள்ள கோயில் திருக்கச்சூர் ஆலக்கோயில் (கச்சபேஸ்வரர்) என்று அழைக்கப்படுகிறது. மலைமேல் உள்ள கோயிலின் பெயர் மருந்தீஸ்வரர் (ஒளஷதஈஸ்வரர் ) கோயில். சுந்தர மூர்த்தி நாயனார் பசித்திருந்த சமயம் இத்தல இறைவனார் பிச்சையேற்று உணவு கொணர்ந்து தமது அடியாரின் பசியாற்றிய தலம். இத்தலத்தில் கொடி மரத்தின் கீழுள்ள திருமண் திருநீற்றுத் தன்மையுடன் உள்ளது.இந்த இரு கோயில்களையும் சேர்ந்து தரிசிப்பது நல்லது.

தரிசன பயன்கள்: இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது. மலைக்கோயில் மருந்தீஸ்வரர் கோயில் சகல பிணிகளையும் தீர்ப்பதாக நம்பிக்கை.

எப்படி செல்வது : சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி ரயில்வே கேட் தாண்டி சுமாராக 1 கி.மி. தூரம் சென்ற பின் வலதுபுறம் பிரியும் சாலையில் மேலும் 1 கி.மி. தூரம் சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம். ஊரின் நடுவே கோவில் உள்ளது. சிங்கப்பெருமாள்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது.

எங்கே தங்குவது: சென்னை, செங்கல்பட்டு 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை


No comments:

Post a Comment