Tuesday, January 22, 2019

திருவக்கரை-சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்/வக்ரகாளியம்மன் திருக்கோவில்

தேவார பாடல் :கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான்,
பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண் 
                                                  அமர்ந்தான்,
மறையவன் தன் தலையில் பலி கொள்பவன்-வக்கரையில்
உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே.

இறைவன் நஞ்சுண்ட கறுத்த கண்டத்தை உடையவன். சுடுகாட்டில் திருநடனம் செய்பவன். பிறைச் சந்திரனையும், கொன்றைமாலையையும் அணிந்தவன். உமாதேவியைத்
தன்திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். பிரமன் தலையைக் கொய்து அதன் ஓட்டில் பிச்சை ஏற்பவன். திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவனான
சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த திருவடிகளைத்
தியானிப்பீர்களாக என திருஞானசம்பந்தரால் மூன்றாம் திருமுறையில் பாடல் பெற்றுள்ளது.

ஊர்: திருவக்கரை, விழுப்புரம் மாவட்டம்

மூலவர்: சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர்

அம்பாள்: அமிர்தேசுவரி, வடிவாம்பிகை

ஸ்தல விருட்சம்:வில்வம்

தீர்த்தம்: சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்

வழிபட்டோர்கள் : வக்கிராசுரன், அவன் பூசித்த வக்கிர லிங்கம் சன்னதியில் உள்ளது.

ஸ்தல வரலாறு : வக்கிராசுரனை இத்தலத்தில் மகாவிஷ்ணு போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. கீழே சிந்திய இரத்தத்தில் இருந்து மீண்டும் அசுரர்கள் தோன்றினார்கள். அவ்வாறு அசிரர்கள் மீண்டும் தோன்றாதபடி அக்குருதியைக் காளி தன் வாயால் உறிஞ்சினாள். வக்கிராசுரன் தங்கை துன்முகி போரிட வந்தபோது அவளை அஷ்டபுஜகாளி அழித்தாள். துன்முகி அழிந்த போது அவள் கருவுற்று இருந்ததால், அவள் வயிற்றிலுள்ள குழந்தையை காளி தன் காதில் குண்டலமாக அணிந்து கொண்டாள்.

ஆலய சிறப்புகள்: லிங்கம் முகமாக அமைந்த அற்புத திருத்தலம். சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட லிங்கம் மும்முக லிங்கம் எனப்படும் . இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் என்று சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்று கூறுவர்.

இந்த ஆலயத்தின் முகப்பில் உள்ள அஷ்டபுஜகாளி சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது. சிவன் கோயில் என்பதை விட காளி கோயில் என்றே புகழ் பெற்றுள்ளது.

வக்கிராசுரனை அழித்த திருமால் வரதராஜப் பெருமாளாக கையில் பிரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் காட்சி அளிக்கிறார். வக்கிரதாண்டவம் என கூறப்படும் நிலையாக நடராஜ பெருமான் கால் மாற்றி காட்சி தருகிறார்.

இங்குள்ள மரங்கள் கல்லாக மாறிய தொன்மையுடையவை.

தரிசன பயன்கள்: தீவினைகள் அகல, குழந்தைப் பேறு பெற, நல்ல மணவாழ்க்கை அமைய, மங்கலங்கள் பெருக, மக்கள் நம்பிக்கையுடன், வக்ரகாளியை பௌர்ணமியன்று தரிசிக்க வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

எப்படி செல்வது : திண்டிவனத்திலிருந்து மயிலம், வானூர் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் சென்று பெரும்பாக்கம் என்ற் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் கிளைப் பாதையில் 7 கி.மீ. சென்றால் திருவக்கரையை அடையலாம். திண்டிவனத்திலிருந்து சுமார் 28 கி.மி. தொலைவில் உள்ளது. விழுப்புரத்திலிருந்தும் திருவக்கரை செல்லலாம். விழுப்புரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள திருவக்கரைக்கு நகரப்பேருந்து வசதி உள்ளது.

எங்கே தங்குவது: திண்டிவனம்,விழுப்புரம் 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தொடர்ந்து தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

No comments:

Post a Comment