Friday, January 25, 2019

ஓணகாந்தன்தளி-ஓணகாந்தேஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்; 
கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்; 
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு, 
உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே! 

திருவோணகாந்தன்தளி' என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, 'நெய், பால், தயிர் முதலியவற்றால் உம்மை நாள்தோறும் வழிபடுவாரது கையில்காசு ஒன்றும் காணப்படுகின்றதில்லை. அவ்வாறே, உமது கழலணிந்த பாதத்தைக் கும்பிட்டு ஏதேனும் பெற்றாலன்றி, இவ்வுலகத்தில், புலன்களாகிய ஐவர் தண்டலாளர் ஐந்து பக்கம் பற்றி ஈர்த்துச் சுழற்றச் சுழன்று, அச்சுழற்சியாலாகிய துன்பம் என்னும் ஆழ்ந்த குழியில் அகப்பட்டு ஏறமாட்டாது என சுந்தரரால் பாட பெற்றது. சுந்தரர் பொருள் வேண்டி இறைவனை சற்றே வஞ்ச புகழிச்சியோடு பதிகம் பாடியுள்ளார்.

ஊர்: ஓணகாந்தன்தளி,காஞ்சிபுரம் - பஞ்சுப்பேட்டை

மூலவர்: ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், சலேந்தரேஸ்வரர்

அம்பாள்: காமாட்சி அம்மன்

ஸ்தல விருட்சம்: வன்னி, புளியமரம்

தீர்த்தம்: ஓணகாந்த தீர்த்தம், தான் தோன்றி தீர்த்தம்

வழிபட்டோர்கள் :  
ஓணன், காந்தன்,சலந்தரன்

ஸ்தல வரலாறு : 
ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற காரணத்தால் இத்தலம் ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது. ஓணன், காந்தன் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன. முதல் சந்நிதியில் ஓணேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அடுத்து 2-வது சந்நிதியில் காந்தேஸ்வரர் தரிசனம் தருகிறார். 3-வது கருவறையில் சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே சிறு கோவிலாக உள்ளது

ஆலய சிறப்புகள்: 
ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்பு மிக்க ஆலயம் இதுவாகும். இது தவிர மற்றொரு விநாகயரான ஓங்கார கணபதியும் காந்தேஸ்வரர் சந்நிதியில் வெளியே காணப்படுகிறார். இவரின் சிலையில் பக்தியுடன் காது வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாக சொல்லப்படுகிறது. இங்கு சுந்தரர் பதிகம் பாடி இறைவனிடமிருந்து புளியங்காய்களை பொன்காய்களாகப் பெற்றார் என்பது ஐதிகம்.

தரிசன பயன்கள்: பொன், பொருள் வேண்டுவோர் இறைவனை வழிபட்டு இக்கோயில் பதிகத்தை பாட கேட்டது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

எப்படி செல்வது : 
ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு எதிரில் கோவில் உள்ளது. சாலையோரத்திலேயே கோவிலும் மின் நிலையமும் அமைந்துள்ளது.

எங்கே தங்குவது: காஞ்சிபுரம் 

தரிசன நேரம் :. காலை 7:30 முதல் 10:30 மணி வரை , மாலை 5:30 முதல் 7:30 வரை 

No comments:

Post a Comment