Monday, January 28, 2019

திருநாவலூர் - திருநாவலேஸ்வரர் கோயில் /சுந்தரர் அவதார ஸ்தலம்

தேவார பாடல் :
கோவலன் நான்முகன் வானவர்
கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு
வித்தவர் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும், அதனால், ‘அம்பு எய்தலில் வல்லவர்’ எனப் புகழத்தக்கவராயினாரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு, ‘திருமால், பிரமன், இந்திரன்’ என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரே யாகும் என சுந்தரரால் பாடப்பெற்றது.

ஊர்: திருநாவலூர், விழுப்புரம் மாவட்டம் . திருநாமநல்லூர்  என்றும் வழங்கப்படுகிறது

மூலவர்: திருநாவலூர் - திருநாவலேஸ்வரர்

அம்பாள்: திருநாவலேஸ்வரர், பக்த ஜனேஸ்வரர்

ஸ்தல விருட்சம்:நாவல்

தீர்த்தம்: கெடில நதி, கோமுகி தீர்த்தம்

வழிபட்டோர்கள் : மஹாவிஷ்ணு, சுக்கிரன் 

ஸ்தல வரலாறு : மஹாவிஷ்ணு பிரகலாதன் தந்தையான இரணியனை வதம் செய்ய திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார். நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர்.

ஆலய சிறப்புகள்: மகாவிஷ்ணு தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆலய பிரகாரத்தின்.வடக்குச் சுற்றில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

சுந்தரர் அவதாரத் திருத்தலம்.சுந்தரரின் தந்தையாரான சடைய நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய பெரும்பதி.சுந்தரரின் தாயாரான இசைஞானியார் வாழ்ந்து,தொண்டாற்றி, முத்தி பெற்றத் தலமுமாகும்.இங்குள்ள உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படுகிறது; இது முதற்பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தனால் கட்டுவிக்கப் பெற்றது என்பது கல்வெட்டுச் செய்தி.

தரிசன பயன்கள்: கேது தோஷ பரிகார ஸ்தலம்

எப்படி செல்வது : சென்னை - திருச்சி தேசீய நெடுஞ்சாலையில் விழுப்புரம் தாண்டி செல்லும் போது மடப்பட்டு என்ற ஊர் வரும் அதைத் தாண்டி பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே பிரிந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் உள்ளது. விழுப்புரத்திலிருந்து 26 கிமீ.

எங்கே தங்குவது: விழுப்புரம் 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரை




No comments:

Post a Comment