Thursday, January 10, 2019

தக்கோலம்-ஜலநாதீசுவரர் கோயில்

தேவார பாடல் : 
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று,
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில்
தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த
ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே.

தமக்கு ஒப்பாரில்லாத வலிய அவுணர்களின் அரணங்களாக விளங்கிய முப்புரங்களை மறையுமாறு முற்காலத்தில் ஒரு வெங்கணையால் நீறுபடச் செய்தழித்த எங்கள் நிமலன் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம், யாதென வினவில், தேன் நிறைந்த பெரிய பொழில்களும், விளங்கிய செங்கயல்கள் பாயும் வயல்களும், சூழ்ந்துள்ள திருவூறலாகும். அப்பெருமானுடைய ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளை நாம் தியானிப்போம் என திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது.

ஊர்: தக்கோலம், புராண பெயர் திருவூறல், வேலூர் மாவட்டம்.

மூலவர்: ஜலநாதீஸ்வரர் (ஜலநாதேசுவரர், உமாபதீசுவரர்)

அம்பாள்: கிரிராஜ கன்னிகாம்பாள் (மோகன வல்லியம்மை)

ஸ்தல விருட்சம்:

தீர்த்தம்: பார்வதி சத்ய கங்கை தீர்த்தம், குசத்தலை நதி

வழிபட்டோர்கள் : சம்வர்த்த முனிவர், உத்தி முனிவர்.

ஸ்தல வரலாறு : தேவகுரு பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா காமதேனுவின் சாபத்திற்கு ஆளானார்.சாபத்திற்கு விமோசனம் பெற நாரதரிடம் அறிவுரை வேண்டினார் தீர்க்கதாவின் தந்தை உத்தி முனிவர். நாரதரது அறிவுரைப்படி திருவூறல் வந்து சிவபெருமானை வழிபட்டு மகனுக்கு சாபவிமோசனம் வேண்டினார்.

இறைவனார், நந்தியை வழிபட்டு, அவரது வாயிலிருந்து தெய்வ கங்கையை வரவைத்து அத்தீர்த்தம் கொண்டு தம்மை வழிபட சாபவிமோசனம் கிட்டும் எனக்கூற அதன்படி தீர்க்கதா செய்து சாபவிமோசனம் பெற்றார். இதனால் இத்தல இறைவனார் ஜலநாதீஸ்வரர் என்ற பெயரில் வழிபடப்பட்டு வருகின்றார்

ஆலய சிறப்புகள்: 
தக்கன் தலையைக் கொய்த தலம், தக்கன் ஓலமிட்டு அழுததால் தக்கோலம் என பெயர் என்றும் கூறப்படுகிறது.
சுயம்புலிங்கமான இத்தல இறைவனார், உத்தராயண காலத்தில் இளம் சிகப்பு நிறத்திலும் தட்சிணாயன காலத்தில் வெள்ளை நிறத்திலும் காட்சிதருகின்றார்.மணலால் செய்த சுயம்புலிங்கம் என்பதால் இவருக்கு மஞ்சள் காப்பு மட்டுமே.நந்தியின் வாய் வழியே கங்கை நீர் வந்ததாகக் கூறப்படுகிறது

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்.

எப்படி செல்வது : அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் வழியாக தக்கோலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.

எங்கே தங்குவது: காஞ்சிபுரம் 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரை.


No comments:

Post a Comment