Tuesday, January 15, 2019

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்/அஷ்ட வீரட்ட ஸ்தலம்

தேவார பாடல் :
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

கெடில ஆற்றின் வடகரையில்விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் டலாடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன் என திருநாவுக்கரசர் தன் முதல் பதிகத்தில் பாடியுள்ளார்.

ஊர்: திருவதிகை, பன்ருட்டி அருகில், கடலூர் மாவட்டம். பழைய பெயர் அதிகாபுரி, திருஅதிகை வீரட்டானம்.

மூலவர்: வீரட்டானேசுவரர்

அம்பாள்: பெரியநாயகி

ஸ்தல விருட்சம்:சரங்கொன்றை

தீர்த்தம்: சூலத்தீர்த்தம்

வழிபட்டோர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர். இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.

ஸ்தல வரலாறு : வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களை காத்து ரட்சிக்க சிவபெருமான் திரிபுர தகனம் செய்த ஸ்தலம்.

திருநாவுக்கரசர் வரலாறு : பன்ருட்டி  அருகே திருவாமூர் என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலவதியும், மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர். மருள்நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இற்ந்துபோக, இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார். தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. சூலைநோயின் கொடுமை தாங்கமுடியாமல் தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிச் சென்று அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும் தன்னுடைய முதல் பாடலாக "கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்" என பாட சூலை நோயும் தீர்ந்தது. மேலும் நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். -

ஆலய சிறப்புகள்: அஷ்ட வீரட்ட ஸ்தலங்களில் ஒன்று. அனைத்து தலங்களினும் அதிக சிறப்புடையதால் அதிகை என பெயர் பெற்றது. திருநாவுக்கரசரை சூலை நோய் தீர்த்து சைவ சமயத்திற்கு மாற்றிய சிறப்பு.

நால்வரும் பாடிய அற்புத தலம் .இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். உள் சுற்றின் தென்மேற்கே உள்ள பஞ்சமுக லிங்கம் காணவேண்டிய ஒன்று. மூன்று திக்குகளை நோக்கி நானகு முகங்கள் உள்ளன. ஒரு முகம் மேல் நோக்கி உள்ளதாக ஐதீகம். எனவே பஞ்சமுக லிங்கம் என்று கூறுவர். இது ஒரு அரிய தரிசனம் ஆகும்.

கருவறையில் காட்சி அளிக்கும் வீரட்டேஸ்வரர் 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம் ஆவார். இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி தருகிறது.

பல்லவர் காலத்து கோயில் - அற்புதமான நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்த சிற்பங்கள் நிறைந்த கோயில்.

தரிசன பயன்கள்: தீராத வயிற்று வலி தீரும் ஐயனை வழிபட .

எப்படி செல்வது : பன்ருட்டி அருகே உள்ளது. பன்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர்-பன்ருட்டி  சாலையில் 1 கிமீ தொலைவில் உள்ளது.

எங்கே தங்குவது: கடலூர் 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரை.








No comments:

Post a Comment