Tuesday, January 1, 2019

திருவடிசூலம் - ஞானபுரீசுவரர் கோயில்

தேவார பாடல் :
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ, வார் சடை முடிமிசை
                                                             வளர்மதி சூடி,
கரி வளர்தரு கழல்கால் வலன் ஏந்தி, கனல் எரி ஆடுவர், காடு
                                                             அரங்கு ஆக;
விரி வளர்தரு பொழில் இனமயில் ஆல, வெண் நிறத்து அருவிகள
                                                             திண்ணென வீழும்,
எரி வளர் இனமணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர்

                                                             வணம் என்னே?

 மரங்கள் வளர்ந்த விரிந்த பொழில்களில் இளமயில்கள் ஆடுவதும், வெண்மையான நிறத்துடன் அருவிகள் திண்ணென்ற ஒலிக் குறிப்போடு வீழ்வதும், எரி போன்று ஒளிரும் ஓரினமான மணிகள் காடுகளில் அழகுற விளங்குவதுமாய மலைச் சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், வரிகளையும் ஒளியையும் உடைய பாம்பை இடையிலே கட்டி, நீண்ட சடைமுடிமீது வளரும் பிறை மதியைச் சூடி யானை உருவம் பொறித்த வீரக் கழலைக்காலின்கண் வெற்றி பெறச் சூடிச் சுடுகாட்டைத் தமது அரங்காகக் கொண்டு ஆடும் இவ்விறைவரது இயல்பு யாதோ? என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: திருவடிசூலம், காஞ்சிபுரம் மாவட்டம், தேவார பெயர் திருஇடைசுரம்.

மூலவர்: இடைச்சுரநாதர், ஞானபுரீசுவரர்

அம்பாள்: இமய மடக்கொடி, கோவர்த்தனாம்பிகை

ஸ்தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: மதுர தீர்த்தம்

வழிபட்டோர்கள் : அம்பாள், பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம். ஆதலால் இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

ஸ்தல வரலாறு : திருஞானசம்பந்தர் தனது சிவஸ்தல யாத்திரையின் போது இவ்வழியே வந்து கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில் ஏறியதாலும் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது சிவபெருமான்  ஒரு இடையனாக தோன்றி தன்வசமிருந்த தயிரை அவருக்கு அளித்து பசியாற்றினார். மேலும் அருகில் ஒரு சிவன் கோயில் இருப்பதாகவும் பெருமான் கூற அவர் காட்டி பாதையில் நடந்தார் ஞானசம்பந்தர். கோயில் வந்தவுடன் அவருக்கு கட்சி கொடுத்து மறைந்தார்.

ஆலய சிறப்புகள்: இத்தலத்தின் சிறப்பு மூலவர் லிங்கத் திருமேனி. இந்த சுயம்பு லிங்கம் ஒரு மரகதலிங்கம். சதுரபீட ஆவுடையார். சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது அவ்வொளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது.கருவறை அகழி அமைப்புடன் காணப்படுகிறது.

அழகிய மலைகள் சூழ்ந்த இடத்தில இந்த கோயில் அமைந்துள்ளது. அருகில் 51 அடி உயரம் கொண்ட அம்பாள் சிலையுடன் ஒரு கருமாரி அம்மன்  கோயில் உள்ளது, மேலும் அந்த கோயில் வளாகத்தில் ஒரு அழகிய பெருமாள் கோயிலும் உள்ளது.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்

எப்படி செல்வது : 
செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.

எங்கே தங்குவது: சென்னை,செங்கல்பட்டு 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் இரவு 7 மணி வரை.



No comments:

Post a Comment