Sunday, January 13, 2019

இரும்பை-மாகாளேசுவரர் கோயில்

தேவார பாடல் :
மண்டு கங்கை சடையில் கரந்தும், மதி சூடி, மான் 
கொண்ட கையான், புரம் மூன்று எரித்த குழகன்(ன்), இடம் 
எண்திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பைதனுள்,
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே.

கங்கையைச் சடையில் கரந்து, பிறைமதியைச்
சூடி, மான் ஏந்திய கையால் கணைதொடுத்து முப்புரங்களை எரித்த  குழகனது இடம், எண்திசையும் புகழ்பெற்று விளங்கும் திருஇரும்பை  நகரில் உள்ளதும் வண்டுகள் இசைபாடி முரலும் பொழில் சூழ்ந்து விளங்குவதுமாகிய திருமாகாளமாகும் என திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது

ஊர்: இரும்பை, விழுப்புரம் மாவட்டம்

மூலவர்: மாகாளநாதர், மகாகாளேசுவரர்

அம்பாள்: குயில்மொழியம்மை, மதுரசுந்தர நாயகி

ஸ்தல விருட்சம்: புன்னை

தீர்த்தம்: மாகாள தீர்த்தம்

வழிபட்டோர்கள் : கடுவெளிச் சித்தர்

ஸ்தல வரலாறு : கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர். மழையில்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்ட இந்நாட்டு சிற்றரசன் கடுவெளி சித்தரின் கடும் தவமே மழை இல்லாமைக்கு காரணம் என்று கருதி அவரது தவத்தைக் கலைக்க ஒரு தேவதாசி மாதுவை அனுப்பினான். தேவதாசியும் அவரது தவத்தைக் கலைத்தாள். சித்தர் தவம் கலைந்து எழுந்தபோது மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்கு காரணமாக சித்தரின் தவம் இருந்ததோ என சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாக நடந்த உண்மைகளைக் கூறினான். அரசனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவப் பணி செய்து வந்தார். அதன்பின் நாட்டில் நல்ல மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவனுக்கு திருவிழா எடுத்தனர். கோவில் திருவிழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின் தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். அப்போது, அவளது காற்சிலம்பு கீழே கழண்டு விழுந்தது. இதை பார்த்த சித்தர் கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி, அச்சிலம்பை எடுத்து நடனமாதின் காலில் அணிவித்து விட்டார். இதைக்கண்ட மக்கள், சித்தரின் செயலை ஏளனம் செய்து நகைத்தனர். சித்தர் வெகுண்டு இறைவனை நோக்கிப் பாட, ஆலயத்திலுள்ள மூலலிங்கம் வெடித்து 3 பகுதிகளாக சிதறியது. இதையறிந்த அரசன் சித்தரிடம் மன்னிப்புக் கோரினான். சித்தர் மீண்டும் ஒரு பாட்டுப் பாட சிதறிய சிவலிங்கம் ஒன்று கூடியது. சிவலிங்கத்தை செப்புத்தகடு வேய்ந்து ஒன்றாக்கி அரசன் வழிபட்டான். அன்று முதல் இந்நாள் வரை சிவலிங்கம் செப்புத் தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.

ஆலய சிறப்புகள்: இந்தியத் திருநாட்டில் மூன்று சிவஸ்தலங்கள் மாகாளம் என்ற பெயருடன் விரங்குகின்றன. அவை வடதாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம் மற்றும் தொண்டை நாட்டுத் தலமான இந்த இரும்பை மாகாளம்.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்.

எப்படி செல்வது : திண்டிவனத்திலிருந்து கிளியனூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலை மார்க்கத்தில் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையை தாண்டி சிறிது தூரம் சென்றால் இடதுபுறம் இரும்பை செல்லும் சாலை பிரிகிறது. சாலை பிரியும் இடத்தில் இரும்பை என்ற பெயர்ப் பலகையும் உள்ளது. இந்த சாலையில் 2 கி.மி. சென்று மாகாளேஸ்வரர் திருக்கோவிலை அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் இரும்பை மாகாளம் என்ற இந்த சிவஸ்தலம் இருக்கிறது. பாண்டிச்சேரியில் இருந்து சஞ்சீவிநகர் செல்லும் நகரப் பேருந்து மாகாளேஸ்வரர் கோவில் வழியாகச் செல்கிறது.

எங்கே தங்குவது: புதுச்சேரி 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை




No comments:

Post a Comment